ஆன்மிக களஞ்சியம்

உஜ்ஜயினி மாகாளியும் போஜராஜனும்

எல்லையை காக்கவும் உஜ்ஜயினி மாகாளியின் விக்கிரகத்தை தங்களோடு எடுத்து வந்தனர்.

கி.பி. 11-ம் நூற்றாண்டில் மத்திய பிரதேசத்தின் தாரா நகரத்தை ஆண்ட சிவபக்தனான போஜராஜன், உஜ்ஜயினி மாகாளியின் தீவிர வழிபாட்டாளன் ஆவான். அவனது அரண்மனை காவல் தெய்வமாகவும் குலதெய்வமாகவும் விளங்கிய அன்னை மாகாளியின் அருளாலேயே, அவன் போர்களில் வென்று கலைகளையும் ஆன்மீகத்தையும் வளர்த்ததாக வரலாறு கூறுகிறது.

கி.பி. 14-ம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட விஜயநகர மன்னர்களும், நாயக்க தளபதிகளும் போஜராஜனின் வீர வரலாற்றையும் உஜ்ஜயினி காளி வழிபாட்டையும் பின்பற்றினர். அவர்கள் போர்களில் வெற்றி பெறவும், எல்லையை காக்கவும் உஜ்ஜயினி மாகாளியின் விக்கிரகத்தை தங்களோடு எடுத்து வந்தனர்.

சமயபுரத்தில் அம்மன் அமர்தல்

திருச்சி பகுதியில் முகாமிட்டிருந்த படை வீரர்கள், தாங்கள் கொண்டு வந்த சிலையை ‘கண்ணனூர்' என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். போருக்கு செல்லும் முன்பும் வென்ற பின்பும் இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நாயக்க மன்னர்களின் காலத்தில் இக்கோவில் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. அவ்வாறு கண்ணனூர் அரண்மனை பகுதியில் வைக்கப்பட்ட உஜ்ஜயினி மாகாளியே, பிற்காலத்தில் சமயபுரம் மாரியம்மன் என்று அழைக்கப்படலானாள்.

வரலாற்று ஆதாரங்களும் வழிபாட்டு மாற்றமும்

இக்கோவிலின் கல்வெட்டுகளில் கிருஷ்ணதேவராயர் மற்றும் நாயக்க மன்னர்கள் வழங்கிய நிலம், பொன் நகைகள் பற்றியதான குறிப்புகள் உள்ளன. வடநாட்டின் உக்கிரமான உஜ்ஜயினி காளி வழிபாட்டு முறைகள், தென்னாட்டு பண்பாட்டோடு இணைந்து சாந்த சுரூபியாக, உலகை காக்கும் குளிர்ச்சி தரும் மாரியம்மன் வழிபாடாக மாற்றம் பெற்றன.

பக்தர்களுக்கு அன்னதானம்

ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில், யாத்திரீகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பான வசதிகள் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளன. வெளி ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காகக் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள், நவீனக் கழிவறைகள் மற்றும் முடி காணிக்கை செலுத்துவதற்கான பிரத்யேக மண்டபங்கள் தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இக்கோவிலின் மிக உன்னதமான சேவைகளில் ஒன்று நித்திய அன்னதானத் திட்டம் ஆகும். தினமும் மதியம் இக்கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குத் தரமான முறையில் சுடச்சுட அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கோவில் வழிபாட்டு நேரங்களைப் பொறுத்தவரை, காலை ஐந்து மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், பின்னர் மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். விசேஷ நாட்களான செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அன்றைய தினங்களில் சிறப்புத் தரிசன வழிகளும், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.