கன்னியகோவிலில் அமைந்திருக்கும் பச்சை வாழியம்மன் பல தரப்பினரின் குல தெய்வமாக விளங்கி வருகிறது. புதுவை மட்டுமின்றி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர்.
இக்கோவிலில் நடைபெறும் தீமிதி திருவிழா மட்டுமின்றி தங்களது குடும்பங்களில் சுபநிகழ்ச்சிகளுக்கு முன்பாக இக்கோவிலுக்கு வருகை தந்து பொங்கலிட்டு நிகழ்ச்சி நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்வார்கள்.
அதுபோல் குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்தல் நிகழ்ச்சியை நடத்துவார்கள். மேலும் இக்கோவிலில் திருமணம், நிச்சயதார்த்தம், வளையல் அணி விழா போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அதற்காகவே இக்கோவில் விஸ்தரிக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்டதாக கருதப்படும் இக்கோவி–லின் பிரதான மூலவர் சிவ–பெருமானின் அவதாரமான மன்னாதீஸ்வரர். ஒரு சமயம் பாதாள முனி என்ற அசுரன் அதீத சக்திகளை கொண்டு தேவர்களையும் மக்களையும் அச்சுறுத்தி துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டி தேவர்களும் மக்களும் அன்னை பரமேஸ்வரியை வழிபட்டு வணங்கி கேட்டுக் கொண்டனர்.
அதன் பொருட்டு பார்வதி தேவி இந்த கன்னியகோவில் பகுதிக்கு வந்து பச்சை வாழையில் பந்தலிட்டு வாழை இலை மேல் லிங்கத்தை வைத்து பூஜை செய்து வந்தார். அவரை பாதாள முனி பலவிதத்தில் தொந்தரவு செய்து வந்தான். பின்னர் விஷ்ணு, வாழுமுனி அவதாரம் எடுத்து சண்டையிட்டு காலால் பாதாள முனியை பூமிக்குள் மிதித்து தலை மட்டும் வெளியே தெரியுமாறு அழுத்தி காலடியில் இருக்கிக் கொண்டார்.
அது முதல் இப்பகுதியில் எந்தவித துஷ்ட தேவதைகள் மற்றும் கெட்ட ஆவிகள் ஊருக்குள் நுழையா வண்ணம் தடுத்து காவல் தெய்வமாக இருந்து வருகிறார். பச்சைவாழியான பார்வதி தேவியும் மன்னாதீஸ்வரராக சிவபெருமானை மணந்து இறைவனின் இடப்பாகத்தை பெற்றதாக வரலாறு கூறுகிறது.