யாதவர்களின் குலதெய்வம் என்று போற்றப்படுபவள் ஸ்ரீ ஹரசித்தி தேவி. இந்த அம்பிகைக்கு ஸ்ரீகிருஷ்ணனே கட்டிய திருக்கோவில் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இது 5000 வருடங்களுக்கு மேல் பழமையானது.
மகத நாட்டு மன்னன் ப்ருஹத்ரதனின் புத்திரனான ஜராசந்தன் மிகச் சிறந்த வீரன். அவனுக்கு தன்னுடைய மருமகனான கம்சனை ஸ்ரீ கிருஷ்ணர் வதம் செய்ததை சிறிதும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. ஸ்ரீ கிருஷ்ணனை மட்டுமல்ல யாதவ இனத்தையே பூண்டோடு அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
மதுராபுரியை அடுத்தடுத்து தாக்கினான். அதனால் ஸ்ரீ கிருஷ்ணர் யாதவர்களுடன் துவாரகாபுரிக்கு தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார். காலம் ஓடியது. தருமன் ராஜசூய யாகம் செய்யும் வேளை கிருஷ்ணன் மீதான கோபத்தால் ஜராசந்தன் தொல்லை தருவான் என நினைத்தார் தருமர்.
அவன் வலிமையைப் பற்றி அறிந்திருந்த யுதிஷ்டிரர் அவனுடன் போரிடுவதை சிறிதும் விரும்பவில்லை. ஆனால் பீஷ்மனும், அர்ஜூனனும் அவனுடன் போரிடவேண்டுமென பிடிவாதமாக இருந்தனர். எனவே ஸ்ரீ கிருஷ்ணரிடம் உபாயம் கேட்டார் தருமர். கிருஷ்ணன் யோசனைப்படியே பீமன் ஜராசந்தனை இரண்டாகக் கிழித்து வென்றான்.
அசுர குணம் கொண்ட அவனை எதிர்கொள்ளப் புறப்படுவதற்கு முன் தன் குல தெய்வமான ஸ்ரீ அம்பாஜி மாதாவிடம் ஸ்ரீகிருஷ்ண பகவான் பிரார்த்தனை செய்து கொண்டார். அன்னையின் அனுக்கிரகத்துடன் ஜராசந்தன் வீழ்த்தப்பட்டதால் அவனுடைய குல தேவதைக்கு கோவில் ஒன்றைக் கட்டினார் பகவான்.
அந்தக் கோவில் தான் “மியானி” என்னும் இடத்தில் ‘கொயிலா துங்கா” குன்றின் மேல் அமைந்த “ ஸ்ரீஹரசித்தி மாதா” திருக்கோவில். இந்தத் திருக்கோவிலின் கருவறையில் குன்றா மணி விளக்கு ஒன்று ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்தக் கோவிலின் அடிவாரத்திலேயே புதியதாகக் கட்டப்பட்ட ஹர சித்தி மாதா கோவில் ஒன்றும் உள்ளது. “ஜகதூ ஷா” என்னும் ஜைன வணிகர் இக்கோவிலைக் கட்டி இருக்கிறார். ஒரு முறை சரக்கு ஏற்றி வந்த கப்பல் ஒன்று கடல் சீற்றத்தால் தடுமாறி மூழ்கும் தருவாயில் இருந்ததாம்.
அந்த வணிகர் பிரார்த்தனை செய்து கொண்டாராம். உயிர்ச்சேதமோ பொருள் சேதமோ இன்றி கப்பல் கரை சேர்ந்ததாம்.
தன்னுடைய நன்றியை அர்ப்பணிக்கும் பொருட்டு புதுக்கோவிலை நிர்மாணம் செய்தாராம். ஜைன மதத்தினரின் குல தேவதையாகப் போற்றப்படும் இந்தக் கோவில் 1300 ம் ஆண்டு கட்டப்பட்டது. குஜராத் மாநிலம் செல்பவர்கள் அவசியம் 2 கோவில்களையும் தரிசனம் செய்ய வேண்டும்.