ஆன்மிக களஞ்சியம்

கொடி மரம், மூலஸ்தானம், கோபுர கலசம் நேர்கோட்டில் அமைந்த அற்புதம்

கோட்டை மாரியம்மன் விக்ரகம் சுமார் 300 ஆண்டு கால தொன்மை வாய்ந்தது.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் அமைப்பில் சிறப்பிடம் பெறுவது கருவறையாகும். கருவறையின் ஒளிமிகுதியாக இராது. இக்கருவறை சிறியது. சதுர வடிவ அமைப்பைக் கொண்டது. ஆரம்பத்தில் இது வெறும் மண்ணால் கட்டப்பட்டு இருந்தது. பின் புதுப்பிக்கப்பட்டது.

மாரியம்மன் மூல உருவச் சிலை இவ்விடத்தில் அமைக்கப்பட்டது. மூல உருவச்சிலையைத் தனியாக வெளியே எடுக்க இயலாது. இச்சிலை தரையோடு தரையாக வெகு ஆழத்தில் புதைந்துள்ளது.

பரிவார தெய்வங்கள்

அம்மன் சன்னதியை ஒட்டி முன்புறம் தெற்குப்பக்கம் விநாயகர் கோவிலும், வடக்குப்பக்கம் மதுரைவீரன் சாமி கோவிலும் உள்ளது. சன்னதியின் முன்புறத்தில் வடகிழக்கில் நவக்கிரகங்கள் உள்ளன. கோவிலின் பின்பக்கம் தென்புறம் முனீஸ்வரசாமி சன்னதியும், வடபுறம் கருப்பணசாமி சன்னதியும் உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

கோட்டை மாரியம்மன் மூலஸ்தான விக்ரகம் ஆவுடையார் பீடத்தில் அம்மன் அமர்ந்த நிலையில் உள்ளது. இந்த சிலையை தனியே எடுக்க இயலாது. அம்மனுக்கு எட்டு கைகள் காணப்படுகின்றன. வலது பக்கம் பாம்புடன் உடுக்கை, கத்தி, வேல், சூலாயுதம், இடதுபக்கம் அரிவாள், வில், மணி, கிண்ணம் போன்றவை காணப்படுகின்றன. இச்சிலையின் பின்புறத்தில் ஒரு துவாரம் காணப்படுகிறது. இது அம்மனுக்கே உரிய சிறப்பு அம்சமாகும் என்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள் பார்வையிட்டு வியந்தார்.

கோட்டை மாரியம்மன்

கோட்டை மாரியம்மன் விக்ரகம் சுமார் 300 ஆண்டு கால தொன்மை வாய்ந்தது. இது கோவிலின் சிறப்பு அம்சமாகும். ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 9, 10,11 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் மாதம் 2,3,4 ஆகிய தேதிகளிலும் காலை 6.20 மணிமுதல் 6.40 மணி வரை சூரிய ஒளிக்கதிர்கள் அம்மன் சிரசில் இருந்து முகத்தில் பரவுவது சிறப்பு அம்சமாகும்.

கோபுரகலசம்

கொடிமரம், மூலஸ்தான அம்மன், கோபுரகலசம் மூன்றையும் அலங்கார மண்டபத்தில் இருந்து ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது சிறப்பு அம்சமாகும். 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மன் மூலஸ்தான விக்ரகமும் மட்டுமே இருந்தது. சில வருடங்கள் கழித்து கர்ப்பகிரகம்கட்டப்பட்டது.

வழிபாடு

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு நாட்களே நடந்த இந்த மாசித்திருவிழா காலப்போக்கில் 10 நாட்கள் கொண்டாடும் திருவிழாவாக மாறியது. 1956-ம் ஆண்டுமுதல் இந்த திருவிழா 17 நாட்கள் கொண்ட திருவிழாவாக கொண்டாடப்பட்டது. இதுதவிர, 1994-ம் ஆண்டு முதல் வகுப்பு வாரியாக பொது மக்கள் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு அலங்காரம், சிறப்பு வழிபாடு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்ய ஏறத்தாழ 30 நாட்கள் திருவிழாவாக மாறியுள்ளது.

அம்மன் வீதிஉலா வரும் நாட்கள்

சித்திரை மாதப்பிறப்பு சிம்ம வாகனத்திலும், வைகாசி மாதம் பூப்பல்லக்கிலும், ஆடிமாதம் 2-வது வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அம்மன் திருவிழா காலங்களில் செல்லாத பகுதிகளில் வீதிஉலா செல்வார். புரட்டாசி மாதம் நவராத்திரி கொலு முடித்து 10-வது நாள் அம்பு போட்டு குதிரை வாகனத்தில் வீதி உலா புறப்படுதலும் தைமாதப் பிறப்பன்று ரிஷப வாகனத்தில் வீதி உலாவும், மாசி மாத பெருந் திருவிழாவின்போது 13 நாட்கள் வீதி உலாவும் நடைபெறுகிறது.