ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கிய காலத்தில் அந்தந்த தலைமையான ஊர்களை சார்ந்த எல்லைப்பகுதிக்குள் செல்வாக்கும் அதிகாரமும் சேர்ந்து விளங்கிய பெருந்தனக்குடியை சேர்ந்தவர்கள் அந்தந்த பகுதிகளில் வரிவசூல் செய்து தாலுகா தலைமை இடத்தில் சென்று செலுத்தும் அதிகாரம் வழங்கப்பெற்றிருந்தனர்.
கால வளர்ச்சியில் அவர்கள் மிட்டா மிராசுகளாக திகழ்ந்தனர். குன்னத்தூரை தலைமை இடமாக கொண்டு, சுற்றிலும் இரு எல்லைப் பகுதியில் வரிவசூல் செய்யும் அதிகாரம் பெருந்தனக்காரர் வீரசந்திர முதலியார் என்பவருக்கு, கோவை கலெக்டரான ஆங்கில அதிகாரியால் வழங்கப்பட்டிருந்தது.
இவர் இப்பகுதியில் செல்வாக்கும் ஆதிக்கமும் மிக்கவராக விளங்கினார். இவர் வரிவசூல் செய்து தலைமை இடமான பல்லடம் தாலுகா அலுவலகத்தில் செலுத்தி வந்தார். பல்லடம் அலுவலகம் செல்லும் போது குதிரை மீது ஏறி குதிரை வீரர்கள் புடைசூழ செல்வார்.
ஒரு முறை பல்லடம் சென்று மீண்டும் வரும்போது பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் அருகில் உள்ள ஆலமரத்தடியில் குதிரைகளை இளைப்பார விட்டு அவரும் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று கொண்டிருந்தது.
தாரை தப்பட்டை மேளவாத்தியங்கள் முழங்கின. இவ்வொலிகளால் வீரசந்திர முதலியாரின் குதிரைகள் பெரிதும் மிரண்டு, கயிற்றை அறுத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடின. இதனை கண்ட வீரசந்திர முதலியாருக்கு கோபம் உண்டாயிற்று.
உடனே வீரமக்களையும் மேளதாளம் முழங்குவோரையும் கடுமையாகக் கண்டித்து கொட்டு முழக்கத்தை நிறுத்த உத்தரவு இட்டார். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் பெரிதும் அஞ்சினர்.
சிறிது நேரம் கழித்து வீரசந்திர முதலியார் குன்னத்தூரை நோக்கி புறப்பட்டார். பெருமாநல்லூர் எல்லையை தாண்டும் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடல் முழுவதும் கொப்புளங்கள் உண்டாகி மிக துன்புற்றார். உடனிருந்த பிற அதிகாரிகள், “முதலியாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கு தெய்வக்குற்றமே காரணமாகும்.
குண்டம் இறங்க வந்த வீரமக்களையும், பக்தர்களையும், மேளக்காரர்களையும் கண்டித்து விரட்டியதால் காளியம்மன் கோபித்து இவ்வாறு தண்டித்தாள் போலும்” என்று பணிவுடன் கூறினர்.
இதனால் வீரசந்திர முதலியார் தன் குற்றத்தை உணர்ந்து வருந்தி இக்குற்றத்திற்கு 2 காளியம்மன் கோவிலுக்கு நேர்த்திக் கடன்கள் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.
முதலில் பக்தர்களை அச்சுறுத்தியதற்காகப் பெரிதும் வருந்தி, அப்பாவம் நீங்கவேண்டும் என்பதற்காகத் தன் உருவம் செதுக்கிய ஒருகல்லை கொண்டத்துக்காளியம்மன் கோவிலின் அர்த்த மண்டபத்தின் வாயிற் படியாக அமைக்கச் செய்தார்.
ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு ஆராதனை செய்யும் பூசாரிகள் தன் உருவம் அமைந்த கல்லை மிதித்து கொண்டு கருவறை சென்று பூஜைகள் செய்தால் தான் தான் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பி இவ்வாறு செய்தார்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் அம்மன் ஆலயத்துக்கு வந்து அபிஷேக ஆராதனைகளை நேர்த்திக்கடனாக செய்வதாக வேண்டிக்கொண்டார். இப்பொழுதும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று அவர் வழிவந்தவர்கள் இந்நேர்த்தி கடனை தவறாது நிறைவேற்றுகின்றார்கள்.
வீரசந்திர முதலியார் வழிவந்தவர்கள் ‘குன்னத்தூரான் கூட்டம்’ என்று அழைக்கப்படுகின்றனர். இக்கூட்டத்தார் தற்போது அன்னூருக்கு அருகில் உள்ள குன்னத்தூரிலும், தேவராயம்பாளையத்திலும் வாழ்ந்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.