ஆன்மிக களஞ்சியம்

ஆடியில் அம்மன் வழிபாடு தோன்றிய வரலாறு

ஆடி மாத அம்மன் வழிபாட்டிற்கு புராணங்களில் கதை ஒன்று சொல்லப்படுகிறது.

ஆடி மாதம்

ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்பார்கள். ஆடி மாதம் பிறந்து விட்டாலே அனைத்து அம்மன் கோவில்களிலும் விழா கோலம்தான்.

கூழ் ஊற்றுவது, பொங்கல் வைப்பது, மாவிளக்கு வைப்பது, தீ மிதிப்பது என ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அம்மனை வழிபடுகிறார்கள். அம்மனின் அருளை பெறுவதற்காக பலரும் விரதம் இருந்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள். ஆடி மாத அம்மன் வழிபாட்டிற்கு புராணங்களில் கதை ஒன்று சொல்லப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் தன்னுடைய தவத்தின் வலிமையால் தேவர்களிடம் இருந்து தெய்வாம்சம் கொண்ட பசுவான காமதேனுவை வரமாக பெற்றார். பாற்கடலில் இருந்து தோன்றி, கேட்பவர்களுக்கு கேட்கும் வரங்களை குறைவில்லாமல் அள்ளிக் கொடுக்கும் தன்மை கொண்டது காமதேனு.

ரேணுகா தேவி

இதை தேவர்களிடம் இருந்து பெற்று, தன்னுடைய ஆசிரமத்திற்கு வருபவர்களுக்கு அவர்கள் கேட்கும் உணவுகளை அளித்து உபசரித்து வந்தார் ஜமதக்னி முனிவர். இவரின் மனைவி ரேணுகா தேவி. ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் மகனாக பிறந்தவர் பரசுராமர்.

ஜமதக்னி முனிவரிடம் இருக்கும் காமதேனுவின் அற்புத மகிமையை தெரிந்து கொண்ட கார்த்தவீரிய அர்ஜூனனின் மகன்கள், காமதேனுவை அபகரிக்க திட்டமிட்டு தங்களிடம் ஒப்படைக்கும் படி கட்டலையிட்டனர். ஜமதக்னி முனிவர் மறுத்ததால், அவரை கொன்று விட்டு, காமதேனுவை அவரிடம் இருந்து அபகரித்து சென்றார்கள். பதிவிரதையான ரேணுகா தேவி, தனது கணவர் கொல்லப்பட்ட உடன், தனது உயிரை விட நினைத்து, தீ மூட்டி அதில் குதிக்கிறாள். ஆனால் தெய்வாம்சம் கொண்ட பத்தினி பெண்ணான அவளின் பெருமைகளை அனைவரும் அறிய செய்ய வேண்டும் என நினைத்த தேவர்களின் தலைவனான இந்திரன், வருண பகவானை மழையாக பெய்யும் படி செய்தார்.

மழை

மழை பெய்து ரேணுகா தேவியின் உடலை எரித்த நெருப்பை அணைக்கிறது. உடலில் தீக்காயங்கள் மற்றும் பொப்புளங்களால் வேதனைப்பட்ட ரேணுகா தேவிக்கு அப்பகுதியில் வசித்த மக்கள் வேப்பிலையால் விசிறி அவளின் உடல் எரிச்சலை போக்கினர். அவளுக்கு கூழ், இளநீர் போன்றவற்றை உணவாக கொடுத்து அவளின் நோயை குணமாக்க முயற்சித்தார்கள். இருந்தும் தீக்கொப்புளங்களால் வேதனைப்பட்ட ரேணுகா தேவி முன் தோன்றிய சிவ பெருமான், பார்வதியின் அம்சமாக விளங்கும் உனக்கும் நோய்களை தீர்க்கும் தன்மையை வரமாக தருகிறேன் என்று அருளினார்.

அம்மன் வழிபாடு

ரேணுகா தேவியும் தெய்வமாக இருந்து தன்னை வணங்குபவர்களின் நோய்கள் அனைத்தையும் போக்கி, தாயாக இருந்து வேண்டும் வரங்களை அளிக்கிறாள். அன்னைக்காக இந்திரன் மழையாக பொழிந்ததால் ரேணுகா தேவிக்கு மாரியம்மன் என்றும் பெயர் வந்தது. ரேணுகா தேவியே ஊர் காவல் தெய்வமாக எல்லையம்மனாகவும், மாரியம்மனாகவும் பல இடங்களில் கோவில் கொண்டு அருள் புரிகிறாள். ரேணுகா தேவிக்கு சிவ பெருமான் வரமளித்த ஆடி மாதமே அவளை வழிபடுவதற்கு ஏற்ற மாதமாக மாறியது. அன்று முதல் ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும் முக்கியத்துவம் சிறப்பு மிகுந்ததாக மாறியது. பருவ கால மாறுதலால் ஏற்படும் வெப்ப நிலை மாறுபாடுகள் காரணமாக ஏற்படக்கூடிய அம்மை நோயை தீர்ப்பவள் மாரியம்மன்.

அதனால்தான், அம்மனுக்கு பிடித்த கூழ் வைத்து, நோய் வராமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த கூழ் நோயை எதிர்க்கும் சக்தியை அதிகரிக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.