பழங்காலத்திலே புட்கரம் என்ற நகரத்தில் தருமாகரன் என்ற ஒருவன் இருந்தான். அவன் கடுந்தவம் இயற்றினான். அதையறிந்த இந்திரன், தன்பதவிக்கு கேடு வரும் என்று பயந்து சூழ்ச்சி செய்தான்.
தேவலோக அரம்பையர் முதலியோராலும் இத்தருமா கரன்மனம் மாற மாட்டான் என்று துணிந்தான். பூவுலகத்தில் யவன நாட்டில் சதமாயை என்ற ஓர் பெண் பிரமன்பால் வரம் பெற்றதால் அழகு மிகப் படைத்தவளாய்த் திகழ்ந்தாள்.
அவளிடம் தான் இன்னொரென்று அறிவித்துத்தன் வேண்டுகோளை நிறைவேற்றுமாறு இந்திரன் வேண்டினான். அவளும் தருமாகரனிடம் வந்து அவனை மயக்கி அறிவிழக்கச் செய்து அவனைத்தன் வயப்படுத்தி நாட்கள் பல கழித்தாள்.
சதமாயையுடன் பல நாட்களை வீணாக கடத்தி விட்டமைக்காக வருந்திய தருமாகரன், திருந்தி தான்கற்ற கல்வித்திறத்தால், இறைவனை உள்ளத்தில் உறுதியாக பற்றித் திருநீறும் கண்டிகையும் பூண்டு சிவகீதை பாராயணம் செய்தான். அதனால் அவன் பாவம் அகலப் பெற்று உய்ந்தான்.
சிவகீதை யிலுள்ள விபூதி அத்தி யாயம், விசுவரூப அத்தி யாயம், இரண்டுமே மிக உயர்ந்தவைகள். அவைகளால் தருமாகரன் உயர்ந்தது. அவனுடைய பாவங்களை அவ்விரு அத்யாயங்களே போக்கின.
ஆதலால் அவை, அவன் பாவங்களையேற்று மாசடைந்தன. எனவே அவை, காசியை அடைந்து கங்கையில் மூழ்கித் தம் பாவங்களைப் போக்கிக் கொண்டன.
அந்தப் பாவங்கள் தன்னிடம் கழுவப்பெற்றதால் தூய்மையற்றவளாகிய கங்கை வருந்தி வாட்டமுற்று இருந்தாள். தேவரிஷி நாரதர், கங்கையின் வருத்தத்தைக்கேட்டறிந்து திருப்பாதிரிப்புலியூரின் மேன்மையையும், சிவகர தீர்த்தத்தின் சிறப்பையும் கூறினார்.
அவர் கூறிய வண்ணமே, கங்காதேவி, திருப்பாதிரிப்புலியூர் வந்து சிவகர தீர்த்தத்தில் நீராடித் தூய்மையுற்றுப் பாதிரியின் நிழலிலுள்ள இறைவனைப் பூஜித்துத் தவம் புரிந்தாள்.
கங்கையின் தவத்திற்காக மகிழ்ந்த பரமன், அவள்முன் தோன்றி, மாசி மாதத்தில் நடக்கும் பெருவிழாவினைத் தரிசித்து, மக நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்த நாளிலே சிவகர தீர்த்தத்திலும், பின்னர் கடலிலும் நடைபெறும்
தீர்த்த வாரியில் மூழ்கிப் பாவங்களை அகற்றிக்கொள்ளுமாறும், தன் கலைகளில் ஆயிரத்தில் ஒரு பங்கை சிவகரத் தீர்த்தத்தில் விட்டுச் செல்லுமாறும், அங்ஙனமே ஆண்டுதோறும் மாசி மாதம், மக நட்சத்திரமும் கூடிய பவுர்ணமி சேர்ந்து வரும் நாளில் என்றென்றும் நீராடி வருமாறும் பரமன் கங்கைக்கு அருளினார்.
கங்கையும் அவ்வாறே செய்து தனக்குற்ற மாசினை அகற்றிக் கொண்டு, இப்போதும் ஆண்டுதோறும் வந்து மூழ்கித்தன் கலைகளில் ஒரு கலையை விடுத்திச்செல்கிறாள்.