ஆன்மிக களஞ்சியம்

குழந்தை பாக்கியம் கொடுக்கும் கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன்

தமிழ்நாடு, கேரளா பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவில் விளவங்கோடு வட்டத்தில் தென்மேற்கு மார்த்தாண்டத்திற்கு 9 கிலோமீட்டர் தொலைவில் மார்த்தாண்டம், தேங்காய்பட்டணம் நெடுஞ்சாலை துறைக்குட்பட்ட சாலையோரத்தில் பைங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது.

குழந்தை பாக்கியம்

இவ்வாலயத்தின் சிறப்பு யாதெனில் ஆலமரத்தால் சூழப்பட்டு இயற்கை எழிலுடன் காணப்படுவது ஆகும். கோவில்செம்பன் என்னும் பெரியவர் தனது மகளுக்கு குழந்தை வரம் வேண்டி இப்பகுதியில் பீடம் அமைத்து வழிபட்டார். நாளடைவில் செம்பன் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. இந்த அதிசயத்தை செம்பன், மக்களிடையே பக்தி பரவசமாக சொல்ல தொடங்கியதை தொடர்ந்து ஊர் மக்கள் அப்பகுதிக்கு வந்து பத்திரகாளி அம்மனை வழிபட தொடங்கினர்.

அம்மன்

பின்னர் பீடத்தை சுற்றி ஒரு சிறு கோவில் கட்டினர். காலரா நோயினால் பாதிக்கப்பட்ட தனது ஒரே குழந்தையை கண்டு கண் கலங்கிய தாய்ஒருவர் நம்பிக்கையுடன் இந்த ஆலயத்துக்கு வந்து கதறி அழுதார். இரவு அப்பெண்மணியின் கனவில் அம்மன் தோன்றி வலது கையால் குழந்தையை தடவி நோயில் இருந்து உன் குழந்தை குணமடைந்து விட்டான் என்று கூறி மறைந்தது. அப்பெண் கனவில் கூறியபடி அந்த குழந்தைக்கு காலரா நோய் முற்றிலும் தீர்ந்தது.

அம்மனின் அற்புதங்கள்

அதன்பின்பு இக்கோவிலில் அம்மனின் அற்புதங்கள் ஏராளம் நடந்ததால் குமரி மாவட்டம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். குழந்தையில்லா தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி இந்த கோவிலில் வழிபடுகிறார்கள். பின்னர் நேர்ச்சையாக வாழை குலைகளை வழங்குவர். மேலும் பால்குட நேர்ச்சை, பொங்கலிடுதல் உள்ளிட்ட வழிபாடுகளும் நடைபெறுகிறது.

பாலமுருகன் கோவில்

இங்கு ஸ்ரீபத்ரேஸ்வரி அம்மன் (மூல, முதன்மை தேவதை), கணபதி கோவில், அய்யப்பன் கோவில், பாலமுருகன் கோவில், கிருஷ்ணசுவாமி கோவில், துர்கா தேவி கோவில், இசக்கி அம்மன் கோவில், மற்றும் நாகராஜர் ஆலயமும், நவக்கிரக தேவதைகளான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், ராகு, கேது, சனி –பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருவிளக்கு பூஜை

இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். ஆடி மாதத்தில் செவ்வாய்க்கிழமையில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மேலும் மாலை 6 மணிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இந்த மாதத்தில் ஏராளமான பெண்கள் அர்ச்சனை செய்து அம்மனை வழிபடுவார்கள். மேலும் திரளான பெண்கள், பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.