ஆன்மிக களஞ்சியம்

அட்சயதிருதியை குறித்த அபூர்வ தகவல்கள்

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும்.

* அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.

* கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.

* வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

* இந்த நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.

* அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.

* குபேரன் நிதி கலசங்களை பெற்றது இந்த நாளில்தான்.

* சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

* பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்றுபுராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.

* அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.

* ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.

* அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.

* இந்த நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.

* அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.

* அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

* ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.

* அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

* அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

* அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.

* ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.

* அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.

* மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

* அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.

* குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது.

* மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.