பதினெண் சித்தர்களுள் ஒருவராகக் கருதப்படும் அகத்தியரை குருமுனி என்றும் குறுமுனி என்றும் இருவிதமாகக் குறிப்பிடுகிறார்கள். முனிவர்களுக்கெல்லாம் குருவாக விளங்கும் பெருமையுடைய அவர், அவ்வகையில் குரு முனி ஆகிறார். குள்ளமான வடிவத்தின் காரணமாகக் குறுமுனியும் ஆகிறார்.
ராமனும் கண்ணனும் இருபெரும் இதிகாசங்களில் வரும் இருபெரும் தெய்வங்கள். ராமாயணமும் மகாபாரதமும் எல்லா இந்திய மொழிகளிலும் எழுதப்பட்டிருப்பதால் இவர்கள் இருவரையும் எல்லா இந்திய மொழிகளும் போற்றுகின்றன.
இவர்களுக்கு இணையாக எல்லா மொழிகளாலும் போற்றப்படும் பெருமை அகத்தியருக்கும் உண்டு. காரணம் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் பேசும் போது, அவ்விரண்டு இதிகாசங்களிலும் இடம்பெறும் அகத்தியரைப் பற்றியும் அனைத்து இந்திய மொழிகளும் பேசுகின்றன.
தமிழில் முக்கியமான பல புலவர்கள் மாபெரும் சமஸ்கிருத அறிஞர்களாக இருந்து இருக்கிறார்கள். அவர்களில் பெரிதும் குறிப்பிடத்தக்கவர்கள் கம்பரும், வில்லிபுத்தூர் ஆழ்வாரும்.
வால்மீகி ராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர். கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்றால் வியாசபாரத்தில் உள்ளம் தோய்ந்தவர் வில்லிபுத்தூர் ஆழ்வார். அதனால்தான் சமஸ்கிருத மொழியில் புனையப்பட்ட ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள் நமக்குத் தமிழில் கிடைத்தன.
ராமாயணத்தில் அதன் கதாநாயகனான ராமபிரான் மனச் சோர்வு அடைந்த தருணத்தில் அவருக்கு தைரியம் அளிப்பவராக அகத்தியர் வருகிறார். திருமால் ஈரடியால் உலகளந்தது போல் அகத்தியர் தமிழால் உலகளந்தவர் எனப் போற்றுகிறார் கம்பர்.
எந்த அம்பினாலும் ராவணனை வதம் செய்ய இயலவில்லையே என ராமன் சோர்ந்து போகிறான். அப்போது சூரியனை வழிபட்டு மனச் சோர்வு நீங்கப் பெறுவாயாக எனக் கூறிய அகத்தியர் ராமனுக்கு ஆதவனைப் போற்றும் `ஆதித்ய ஹ்ருதயம்` என்ற மந்திர சுலோகங்களை உபதேசம் செய்கிறார். அகத்தியர் காட்டிய வழியில் செயல்பட்டு உத்வேகம் பெறுகிறான் ராமன். அதன்பின் அவன் ராவணனை வதம் செய்கிறான்.
மகாபாரதத்திலும் அகத்தியர் வருகிறார். பஞ்ச பாண்டவர்களின் வனவாச காலத்தின்போது வியாசமுனிவர் தருமபுத்திரரைச் சந்திக்கிறார். சோர்வடைந்த தருமபுத்திரருக்கு அகத்தியரின் கதையைக் கூறி அவனைத் தேற்றுகிறார் அகத்தியர்.
ராமாயண மகாபாரத இதிகாசங்களில் மட்டுமல்ல, அவற்றிற்கும் முற்பட்ட வேதங்களிலேயே அகத்தியரைக் காண்கிறோம். ரிக்வேதத்தில் வரும் சில செய்யுள்கள் அகத்தியரால் எழுதப்பட்டவையே. தமிழில் மருத்துவ நூல்களை எழுதிய அகத்தியர் வடமொழியிலும் அத்தகைய நூல்களை அருளியுள்ளார். அகத்திய சம்ஹிதை என்ற சம்ஸ்க்ருத நூல் ஒரு மருத்துவ நூலே.
வேத காலம், இதிகாச காலம் தொடங்கி, பின்னர் தமிழிலும் நூல்கள் புனைந்த அகத்தியர் பன்னெடுங்காலம் வாழ்ந்தவராக இருக்க வேண்டும். அவரின் அபாரமான அறிவாற்றலால் சம்ஸ்க்ருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் தழைத்தன.
சிவபுராணம், விநாயகர் புராணம் உள்ளிட்ட பல்வேறு புராணங்களில் அகத்தியரைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. சிவனுக்கும் பார்வதி தேவிக்கும் நடைபெற்ற திருமணத்தைக் காண எல்லா தேவர்களும் இமயமலைக்கு விரைந்தார்கள். இமயமலை இருந்த வடக்குப் பகுதி தாழத் தொடங்கியது. உலகைத் தடுமாறாமல் சமன் செய்து நிலை நிறுத்த வேண்டுமே?.
சிவபெருமான் அகத்தியரை விந்திய மலையைத் தாண்டித் தெற்கே செல்லுமாறு அறிவுறுத்தினார். அவர் கட்டளைப்படியே அகத்தியர் தமிழகம் வந்தார். அகத்தியர் ஒருவரே அத்தனை தேவர்களுக்கும் சமமானவர் ஆகையால் வையம் தடுமாறாமல் நிலைநின்றது என்கிறது சிவபுராணம்.
விநாயகபுராணத்தில் காவிரி தோன்றிய கதை சொல்லப்படுகிறது. அகத்தியரின் மனைவி லோபமுத்ரா நீர் வடிவம் உடையவள். அவளைத் தம் கமண்டலத்தில் தாங்கி நடந்தார் அகத்தியர்.
அவர் கமண்டலத்தைக் கீழே வைத்துவிட்டு ஜபதபங்களில் ஈடுபட்டபோது, காக வடிவாய் வந்த விநாயகர் தம் அலகால் கமண்டலத்தைத் தட்டிவிட்டார். உள்ளிருந்த தண்ணீர் பெருக்கெடுத்து ஆறாய் ஓடியது.
அந்த நீரே காவிரி ஆயிற்று. தான் சென்ற இடமெல்லாம் சோலைகளை விரித்துச் சென்றது காவிரி. கா என்றால் சோலை. எனவே அந்த வகையில்தான் காவிரிக்குப் பெயர் ஏற்பட்டது.
அகத்தியர் கடல் முழுவதையும் அருந்தியதாக ஒரு கதை உண்டு. தாரகன் என்ற அரக்கன் கடலுக்குள் ஒளிய இந்திரன் அவனை அழிக்க வழிதெரியாமல் திகைத்தான். அகத்தியரை அணுகி உதவி பெறுமாறு அறிவுறுத்தினார் பிரம்மதேவர். அவ்விதமே அகத்தியரிடம் உதவி கேட்டான் இந்திரன்.
அதற்கென்ன எனக் கடல்முன் வந்து நின்ற அகத்தியர், கையால் அள்ளிக் கடல் முழுவதையும் குடித்துவிட்டார். நீரின்றி வறண்ட கடல் நிலத்திற்குள் பிரவேசித்து தாரகனை வதம் செய்தான் இந்திரன். பின் மீண்டும் அவன் அகத்தியரிடம் வேண்ட அகத்தியர் தான் அருந்திய கடலை உமிழவே கடல்நீர் மறுபடித் தோன்றியது என்கிறது அந்தக் கதை. கம்ப ராமாயணத்திலும் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது.