மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம்.
எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது. காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்.
புனித தீர்த்தங்கள்:
காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், திருவையாறு தீர்த்தக்கட்டம், பவானி முக்கூடல், பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோவில், ஏரல் சேர்மன் சுவாமிகள் கோவில் ஆறு உள்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள்.
நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை ஸ்தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை. தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருத்தலம் திருப்பூந்துருத்தி. இந்த தலமும் ஆடி அமாவாசைக்கு ஏற்ற தலம் தான்.
பாவம் நீங்கும்:
பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் மூதாதையர்களின் தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தரவல்லது.