ஆன்மிக களஞ்சியம்

குழந்தை வரம் தரும் அம்மனின் கும்ப படையல் உணவு

ஆடி மாதத்தில் வரும் ஆடிபூரம் நிகழ்ச்சி இந்த கோவிலில் சிறப்பாக நடைபெறும்.

ஆடி மாதம்

தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதம் என்றாலே நினைவுக்கு வருவது கூழும், தெருவுக்கு தெரு இருக்கும் அம்மன் கோவில்களில் ஒலிக்கும் அம்மன் பாடல்களும் தான்.

சாமிநாதபுரம்

சேலம் சாமிநாதபுரம் வண்டி பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு 6 அடி உயரத்தில் சுதை வடிவில் பக்தர்களுக்கு சமயபுரம் மாரியம்மன் அருள் பாலிக்கிறார். குழந்தை வரம் மற்றும் நோய்களை தீர்க்கும் சக்தி வாய்ந்த தெய்வமாக உள்ளதால் அமாவாசை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். மேலும் சூலி மாகாளி அம்மன் சிலையும் தற்போது அங்கு நிறுவப்பட்டுள்ளது.

சேலம் சமயபுரம் மாரியம்மன் கோவில்

அமாவாசையில் வழங்கப்படும் கும்ப படையல் உணவை 3 அமாவாசையில் வந்து சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பத பக்தர்களின் பெரும் நம்பிக்கையாக உள்ளது. சேலம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசை மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் கூடி மாவிளக்கு போடுதல், பொங்கல் வைத்தல் என நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக அமாவாசை காலங்களில் அதிக அளவில் பக்தர்கள் கோவிலில் குவிவார்கள். அவர்கள் அம்மனை மனமுருக வேண்டி தங்களது வரங்களை பெற்று செல்கிறார்கள்.

ஆடி மாத வெள்ளிக்கிழமை

மேலும் ஆடி மாதத்தில் வரும் ஆடிபூரம் நிகழ்ச்சி இந்த கோவிலில் சிறப்பாக நடைபெறும். மேலும் ஆடி மாத வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெறும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து அம்மன் அருள் பெற்று செல்வார்கள்.

தலைமை பூசாரி பேட்டி

இது குறித்து கோவில் தலைமை பூசாரி சதீஷ்குமார் கூறியதாவது-

பிரசித்திபெற்ற சேலம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறந்து இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். காலை 9 மணி, மதியம் 12 மணி, இரவு 7 மணி என 3 கால பூஜைகள் நடக்கிறது. அமாவாசை நாளில் மட்டும் அதன் முந்தைய நாள் இரவு 12 மணிக்கு அம்மனுக்கு கும்ப படையல் பூஜை நடக்கிறது.

மாவிளக்கு

அப்போது மொச்சை பயறு, கத்திரிக்காய் சேர்த்த புளி குழம்பு தயார் செய்யப்படும். சமைக்கப்பட்ட பச்சரிசி சாதம், முருங்கை கீரை, சப்த கன்னியர்களை குறிக்கும் படி பச்சரிசி மாவால் ஆன 7 மாவிளக்கு உருண்டைகள், தலை வாழை இலையில் வைக்கப்படும்.

கும்ப படையல்

ஒரு மாவிளக்கில் மட்டும் தீபமேற்றி உடுக்கை அடித்து பாட்டு பாடி தீப ஜோதியில் அம்மனை இறக்கி பூஜை நடக்கும். அம்மன் மாவிளக்கில் எரியும் தீபத்தில் ஜோதி வடிவில் வந்து கும்ப படையல் உணவை சாப்பிடுகிறார் என்பது ஐதீகம்.

குழந்தை வரம்

தொடர்ந்து படையலில் இருந்து கைப்பிடி அளவு உணவு மட்டும் எடுத்து பக்தர்களுக்கு வழங்கப்படும். இதை குழந்தை வரம் வேண்டுவோர் வாங்கி சாப்பிடுகின்றனர். இப்படி 3 அமாவாசைக்கு தொடர்ந்து வந்து அம்மனை தரிசித்து கும்ப படையல் பூஜை பிரசாதத்தை சாப்பிட வேண்டும். பூஜையில் பங்கேற்ற பின் 20 ஆண்டுகளுக்கு மேல் குழந்தை இல்லாத தம்பதியருக்கு கூட அதன் பாக்கியம் கிடைத்துள்ளது. இதனால் 5, 7 மாதங்களில் வளை காப்பு நிகழ்ச்சியை கோவில் வளாகத்தில் நடத்துகிறார்கள்.

அமாவாசை காலம்

இந்த நம்பிக்கையால் தான் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளி நாட்டை சேர்ந்த பக்தர்கள் கூட சமீப காலமாக வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். இங்கு பண்டிைக பங்குனி மாதத்தில் விமரிசையாக நடைபெறும். மேலும் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை காலங்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.