ஆன்மிகம்

வாழ்வை வளமாக்கும் ஆனி திருமஞ்சனம்

நடராஜருக்கு நடைபெறும் ஆனி திருமஞ்சனத்தை காண, முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் கோவில்களில் எழுந்தருள்வதாக ஐதீகம்.

சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக போற்றப்படுபவர், சிவபெருமான். இவரை 'அபிஷேகப் பிரியர்' என்றும் அழைப்பர். அக்னி சொரூபமாக விளங்கும் சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால், அவர் மனம் மகிழ்ந்து அருளை அள்ளித் தருவார் என்பது நம்பிக்கை. சிவாலயங்களில் நாள் தோறும் சிவபெருமான் திருமேனிக்கு அபிஷேகம் நடைபெறும்.

ஆனால் சிவபெருமானின் வடிவங்களில் ஒருவரான நடராஜருக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தி, புரட் டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகங்களை 'மகா அபிஷேகம்' என்று அழைப்பர்.

இந்த ஆறு அபிஷேகங்களில் மார்கழி மாதம் திருவாதிரையில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். இந்த இரு நாட்களில் நடைபெறும் அபிஷேகம் மட்டுமே அதிகாலையில் நடக்கிறது.

ஆனி மாதம் வளர்பிறையில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடத்தப்படும் அபிஷேகத்திற்கு 'ஆனி உத்திர திருமஞ்சனம்' என்று பெயர். அனைத்து சிவன் கோவில்களிலும் இந்த உற்சவம் நடத்தப்படுகிறது. இருப்பினும், சிதம்பரத்தில் 10 நாள் உற்சவமாக வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடராஜருக்கு நடைபெறும் ஆனி திருமஞ்சனத்தை காண, முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் கோவில்களில் எழுந்தருள்வதாக ஐதீகம்.

சிவபெருமான், மாணிக்கவாசகருக்கு குருந்தை மரத்தடியில் காட்சி அளித்தது ஆனி உத்திர நட்சத்திரத்தில் தான். மேலும், மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவபெருமானே கைப்பட எழுதியதுதான் திருவாசகம் என்கிறார்கள். பின்னர் மாணிக்கவாசகரும் சிதம்பரத்தில் ஜோதியாக ஐக்கியமானதாக கூறப்படுகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாகவே ஆனி உத்திர நட்சத்திர நாளில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

வைகாசியில் அக்னி நட்சத்திர வெப்பத்தில் தகிக்கும் திருமேனிக்கு ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. ஆனி திருமஞ்சன விழாவை தொடங்கி வைத்தவர், பதஞ்சலி மகரிஷி ஆவார். சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் ஆடும் ஆனந்த தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் உணர்த்துகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது. அதுபோல, திருவாரூர் தியாகராஜர் திருமேனியே ரகசியம் கொண்டது. இந்த இரண்டு பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் தரிசித்ததாக ஐதீகம்.

இந்த ஆண்டு ஆனி திருமஞ்சனம், ஆனி மாதம் 8-ந் தேதி (22-6-2026) திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. சிதம்பரத்தில் நடைபெறும் 10 நாள் உற்சவத்தில் சிகர விழா வான உத்திர நட்சத்திரத்தன்று, அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை நடராஜருக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் (ராஜ சபை) திருநீறு, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்றவற்றைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெறும். பின்னர், நடராஜருக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரமும், ரகசிய பூஜையும் நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து நடராஜப் பெருமானும், சிவகாமி சுந்தரியும் சித்சபையில் திருக்காட்சி அருள்வார்கள்.

நடராஜப் பெருமான், 'ஆடலரசன்', 'தில்லை கூத்தன்', கூத்தபிரான்' என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவர் முயலகனை வதம் செய்த கோலத்தில், சிவகாமி அம்மையாரோடு கால் தூக்கி நடனம் ஆடும் கோலத்தில் அருள்பாலிப்பார். கலைகளில் சிறந்து விளங்க விரும்புபவர்கள், நடராஜரை வழிபடுவது சிறப்பாகும். ஆனி மாதம் விரதம் இருந்து, சிவபுராணம், திருவாசகம் படித்து நடராஜர் தரிசனத்தை கண்டு களித்தால் பல நன்மைகளை பெறலாம்.

அனைவராலும் சிதம்பரம் சென்று நடராஜருக்கு நடைபெறும் மகா அபிஷேகத்தை தரிசிக்க முடியவில்லை என்றாலும், அருகில் இருக்கும் சிவன் கோவிலில் நடைபெறும் நடராஜர் அபிஷேகத்தை தரிசிக்கலாம். இந்த ஆனி திருமஞ்சனத்தை கண்ணார கண்டு தரிசனம் செய்தால் செல்வ வளம் பெருகும், மகிழ்ச்சி உண்டாகும், துன்பங்களில் இருந்து விடுதலை பெறலாம். திருமணத் தடை நீங்கும், பிரிந்த தம்பதியர் ஒன்றிணைவர், உடல் ஆரோக்கியம் மேம்படும். சிவபெருமானின் முழு அருளையும் பெறலாம்.