ஆன்மிகம்

வைகாசி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் திரளான பக்தர்கள் புனித நீராடல்!

ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர்.

தென்னகத்து காசியாக விளங்கும் ராமேசுவரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர், வெளியூர், வட மாநிலங்களில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.

அந்த வகையில், ராமேசுவரத்திற்கு வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு, இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். மேலும் விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் வெள்ளம் அதிகரித்து காணப்பட்டது. தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.

இதனைதொடர்ந்து, ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர். இதன் பின்னர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அதிகளவில் பக்தர்கள் வருகையை முன்னிட்டு பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், ராமநாதசுவாமி கோவிலில் கக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்திடும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்தனர்.

SCROLL FOR NEXT