ஆன்மிகம்

ஆடிப்பூரம் விழா: திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்கள் சுமந்து வந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

திருத்தணி முருகன்கோவிலில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

திருத்தணி முருகன் கோவில்

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து உடலில் அலகு குத்தி, காவடிகள் சுமந்து வந்து திருத்தணி முருகன் கோவிலில் நேர்த்தி கடன் செலுத்தினர்.

ஆடிப்பூர விழா

சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்கள் சுமந்து வந்து முருகப்பெருமானை வழிபட்டனர். ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தங்க கவசம், வைர கிரீடம், பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பால் குடங்கள், மயில் காவடி

ம.பொ.சி. சாலை சன்னதி தெரு, மலையடி வாரத்தில் உள்ள சரவண பொய்கை திருக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வரிசையாக நின்று பம்பை உடுக்கை முழங்க கிராமிய கலை நிகழ்ச்சிகளோடு பக்தர்கள் விரதம் இருந்து பால் குடங்கள், மயில் காவடி, புஷ்பக் காவடிகள், சுமந்தும் உடலில் வேல் அம்பு குத்தியும் பக்தி பெருக்கோடு படிக்கட்டின் வழியாக நடந்து சென்றனர்.

பக்தர்கள் கூட்டம் காரணமாக சுமார் 5 மணி நேரம் மலைக்கோவில் தேர் வீதியில் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.