ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியினால் அவருக்கு பூமாலையுடன், பாமாலை சூட்டியதோடு அவரிடமே மணமாலையும் சூடிக் கொண்டாள். இதனால் ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்ற சிறப்புப்பெயரும் உண்டு.
ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்த உறவும், மங்களப்பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலமாக இருந்து வந்தது. பல்வேறு காரணங்களினால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது.
இந்தநிலையில் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் அவ்வழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு முதல்நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் பரஸ்பரம் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது.
இந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், பழங்கள், சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இதற்கென ரெங்கநாதர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு செல்லவுள்ள மங்களப்பொருட்கள் கோவில் ரங்க விலாச மண்டபத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின், உள்வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன.
இந்த மங்களப்பொருட்கள் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ரெங்கநாதர் கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.