ஆன்மிகம்

காவிரி தாயை போற்றும் ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு, தமிழ் மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்பது பழமொழி.

ஆடிப்பெருக்கு, தமிழ் மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. ஆடி மாதத்தில் விவசாயிகள் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால்தான் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அன்றைய தினம் நதிகளின் கரையோரம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது. குறிப்பாக காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவே ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதம்

அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து நாட்களும் விசேஷமானவை. பொதுவாக இந்து சமயத்தில் கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளும் நட்சத்திரம், திதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே வரும். ஆனால் நாளின் அடிப்படையில் கொண்டாடப்படும் விழா தான், ஆடிப்பெருக்கு.

ஆடி 18-ம் பெருக்கு

ஆன்மிகத்தில் 18 என்ற எண்ணிற்கு தனிச் சிறப்புண்டு. புராணங்கள் 18, மகாபாரத பர்வங்கள் 18, பகவத்கீதையில் உள்ள பிரிவுகள் 18, பாரதப் போர் நடைபெற்ற நாட்கள் 18, சபரிமலையில் உள்ள படிகள் 18 என 18 என்ற எண்ணிற்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. அந்த வகையில், ஆடி மாதத்தில் வரும் 18-வது நாளை 'ஆடிப்பெருக்கு' என்று கொண்டாடுகிறோம். இதை 'ஆடி 18-ம் பெருக்கு' என்றும் சொல்வதுண்டு.

நதியை போற்றும் நாள்

ஆடி மாதம் என்பது பருவ மழைகள் பெய்யும் காலமாகும். இதனால் நீர்நிலைகள் நிரம்பி, விவசாயத்திற்கு உயிர்கொடுக்கின்றன. பஞ்சபூதங்களில் மிகவும் முக்கியமானது நீர். அந்த நீரில் இருந்தே உலக உயிர்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. மற்ற நாட்களில் வறண்டு இருக்கும் ஆறுகள், ஆடிப்பெருக்கின் போது பொங்கி பெருகி வரும். இவ்வாறு நீர் வளம் பெருகுவதை கொண்டாடும் நாளாக ஆடிப்பெருக்கு உள்ளது.

காவிரி தாய்

ஆடிப்பெருக்கு, தமிழ் மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. ஆடி மாதத்தில் விவசாயிகள் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால்தான் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அன்றைய தினம் நதிகளின் கரையோரம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது. குறிப்பாக காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவே ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கு வழிபாடு

தீபாவளி தினத்தன்று, எவ்வாறு கங்காதேவி அனைத்து நீர்நிலைகளிலும் நிறைந்திருப்பாரோ, அதே போல் ஆடிப்பெருக்கன்று, காவிரித்தாய் அனைத்து நீர் நிலைகளிலும் வியாபித்திருப்பார். நம் வீட்டின் அருகில் இருக்கும் நீர்நிலைகளிலும் காவிரித்தாய்தான் நிறைந்திருப்பார்.

ஆடிப்பெருக்கு அன்று, அதிகாலையில் குளித்து விட்டு வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். பின்னர், ஆற்றங்கரையில் ஓர் இடத்தை தேர்வு செய்து, அதில் இலை விரித்து அகல் விளக்கு ஏற்றி வைக்கிறார்கள். மேலும் வெற்றிலை, எலுமிச்சம் பழம், பழங்கள் படைத்து, கற்பூர தீபம் காட்டி வழிபட வேண்டும்.

சிலர், வாழை இலையில் தீபம் ஏற்றி, மங்கலப் பொருட்களோடு நதியில் மிதக்கவிட்டு வணங்குவார்கள். அப்போது காவிரித்தாயை மனதில் நினைத்து கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். அதோடு, வீட்டில் இருந்து கலவை சாதம் தயார் செய்து கொண்டுவந்து, ஆற்றங்கரையில் அமர்ந்து குடும்பத்தோடு உண்டு மகிழ்வார்கள். அதில் தயிர்சாதம் முக்கிய இடம் வகிக்கிறது.

தாலிச் சரடு மாற்றுதல்

புதிதாக திருமணமான பெண்கள், ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிற்றை மாற்றிக்கொள்வர். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, தங்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கிவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றை தங்கள் கணவன் கையால் கட்டிக் கொள்வார்கள். இதன்மூலம் மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என்பது நம்பிக்கை.

கன்னிப் பெண்களும் அம்மனை நினைத்து மஞ்சள் கயிற்றை கட்டிக்கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் விரைவில் அவர்களுக்கு நல்ல வரன் அமையும் என்கிறார்கள். சுமங்கலிகள், தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள்.

நல்ல தொடக்கம்

பொதுவாக ஆடி மாதத்தில் திருமணம் போன்ற எந்தவித சுபகாரியங்களையும் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு ஒதுக்கப்பட்ட மாதம் ஆகும். ஆனால் ஆடிப்பெருக்கு அன்று மட்டும் நல்ல நேரம் பார்த்து, நல்ல காரியங்களை மேற்கொள்ளலாம்.