அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் இன்று தொடங்கி உள்ளது. மேலும் இன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் ஏராளமான பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டனர். இதனால் அனைத்து அம்மன் கோவில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.
திருவள்ளூரை அடுத்த புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திரளான பெண்கள் அதிகாலை முதலே பொங்கல் வைத்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். ஏராளமான கர்ப்பிணி பெண்களுக்கு கோவில் வளாகத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பெரியபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா தொடங்கி 14 வாரம் விமரிசையாக நடைபெறும். ஆடித்திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோ பூஜை, விநாயகர், மாதங்கி அம்மன், முருகர், பெருமாள், நாகர் உள்ளிட்ட பிரகார மூர்த்திகளுக்கும், மூலவருக்கும் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பெண் பக்தர்கள் மஞ்சள் ஆடை மற்றும் சிகப்பு ஆடை அணிந்து கொண்டு கையில் வேப்பிலையுடன் நடைபயணமாக கோவிலுக்கு வந்து இருந்தனர்.
முதல் வார வெள்ளிக்கிழமை என்பதாலும் கோவிலை பூக்களாலும், வேப்பிலையாலும் அலங்கரித்தனர். வெங்கல் அருகே அணைக்கட்டு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற செண்பகாதேவி கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வாரம் ஆரம்பிக்கும் திருவிழா புரட்டாசி மாதம் வரை 12 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும். இதில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மஞ்சள், சந்தனம், வெள்ளி, தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்படும் 108 சிறப்பு சங்காபிஷேகம் என்று ஆடி மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இன்று அதிகாலை கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் 108 பெண் பக்தர்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 5 வாரம் ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் இன்று காலை ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டனர். தண்ணீர், மோர், கூழ், பானகம் போன்றவற்றை பக்தர்கள் தானமாக வழங்கினர்.
தேவி கருமாரியம்மனை தரிசனம் செய்ய திருவேற்காடு, பூந்தமல்லி, போரூர், மதுரவாயல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.