திருவண்ணாமலையில் மலையை சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7.32 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (புதன்கிழமை) இரவு 8.54 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவுணர்மியன்று கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கிரிவலப்பாதையில் காவி வேடத்தில் கையில் தட்டு வைத்து நெற்றியில் விபூதி பூசி பணம் கேட்கும் போதை கும்பலுக்கு பணத்தை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பக்தர்கள் கொடுக்கும் பணம் அந்த கும்பலின் போதைக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.