அம்மன் கோவில்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடும் ஒன்று. இந்த ஆண்டு ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு 5 செவ்வாய்க்கிழமைகளில் நடக்கிறது.
அதன்படி முதல் சிறப்பு வழிபாடு இன்றும் (செவ்வாய்க்கிழமை), 2-வது ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு வருகிற 25-ந் தேதியும் நடக்கிறது. இதுபோல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி, 8-ந் தேதி, 15-ந் தேதி ஆகிய நாட்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற அம்மன் கோவில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், தாழக்குடி அவ்வையார் அம்மன் கோவில், கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள 24-வது சக்தி பீடமான பத்திரகாளி அம்மன் கோவில், கன்னியாகுமரி கடல் காத்தாள் படை பத்திரகாளி அம்மன் கோவில், கொட்டாரம் பெருமாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில், கொட்டாரம் முத்தாரம்மன் கோவில், சந்தனமாரியம்மன் கோவில், சின்னம்மன் கோவில், உஜ்ஜினி மாகாளி அம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வடிவீஸ்வரம் முத்தாரம்மன் கோவில், அழகம்மன் கோவில், நடுகாட்டு இசக்கி அம்மன் கோவில், முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில், ஆலமூடு அம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடி முதல் செவ்வாய் சிறப்பு வழிபாடு இன்று நடைபெறுகிறது.
இதையொட்டி இந்த கோவில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, திருவிளக்கு பூஜை போன்றவை நடந்தன.