ஆன்மிகம்

முருகன் அருள் நிறைந்த ஆடிக் கார்த்திகை

சிவபெருமான் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு அக்னிகள், சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உருபெற்றன

ஆடி மாதம்

ஆடி மாதம் என்பது இறைவனை வழிபடுவதற்கு ஒதுக்கப்பட்ட மாதமாகவே கருதப்படுகிறது. அதனால்தான், ஆடி மாதத்தில் எந்தவித சுபகாரியங்களும் நடத்தப்படுவதில்லை. ஆடி மாதம் முழுவதும் திருவிழா, சிறப்பு வழிபாடு என அம்மன் வழிபாடே அதிகமாக காணப்படும். அதே நேரம், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை வழிபட வேண்டிய சிறப்புமிக்க நாளாக ஆடிக் கார்த்திகை திகழ்கிறது.

ஆடிக் கார்த்திகை

முருகப்பெருமானுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி விரதம், தை கார்த்திகை போன்ற நாட்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த விதத்தில் ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் 'ஆடிக் கார்த்திகை' என சிறப்பிக்கப்பட்டு, வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை நட்சத்திரம்

முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரமாக கார்த்திகை கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதுடன், பார்வதி தேவி, தனது சக்தி அனைத்தையும் திரட்டி முருகனுக்கு வேல் கொடுத்ததன் காரணமாக, ஆடிக் கார்த்திகை அன்று, வடிவேல் முருகனை வழிபட்டால் முருகன் அருளோடு அம்மன் அருளும் சேர்ந்து கிடைக்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகை பெண்கள்

சிவபெருமான் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு அக்னிகள், சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உருபெற்றன. பின்னர், அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகை பெண்கள் தாலாட்டி, சீராட்டி வளர்த்தனர். அந்த கார்த்திகை பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாயினர். இதன் காரணமாகவே, கார்த்திகை நட்சத்திர நாள் முருகப் பெருமானுக்கு மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

கார்த்திகை விரதம்

மேலும், கார்த்திகை சூரிய பகவானுக்குரிய நட்சத்திரமாகவும் உள்ளது. ஆரோக்கியத்திற்கு அதிபதியாக சூரியன் விளங்குவதால், கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபட்டால் ஆரோக்கியத்துடன் வாழ்வதோடு, நீண்ட ஆயுளையும் பெறலாம். கார்த்திகை நட்சத்திர நாளன்று, விரதம் இருந்து வழிபட்டால் அழகும், அறிவும் பெருகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்

அதிலும் ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று, அனைத்து முருகன் கோவில்களும் களைகட்டிவிடும். குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகளில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் என வெகுவிமரிசையாக ஆடிக் கார்த்திகை கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

விரதம்

இந்த ஆண்டு ஆடிக் கார்த்திகை நட்சத்திரம், 6-ந் தேதி மாலை தொடங்கி 7-ந் தேதி மாலை வரை இருக்கிறது. விரதம் இருப்பவர்கள், இந்த நேரத்தில் ஆதித்ய ஹிருதயம் பாடலை படித்து விரதத்தை தொடங்கலாம். விரத நேரத்தில் உணவு அருந்தாமல் உபவாசம் இருப்பது சிறந்தது. முடியாதவர்கள், பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

முருகன் கோவில்

பூஜையறையில் ஆறு அகல் விளக்கு தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபட வேண்டும். கந்த சஷ்டி கவசம், கந்த புராணம், சண்முக கவசம், முருகன் பாடல்களை பாராயணம் செய்தும், முருகன் மந்திரத்தை ஜெபித்தும் வழிபடலாம். ஆடிக் கார்த்திகை தினத்தன்று, காலையிலும், மாலையிலும் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்லலாம்.

தொழில் வளர்ச்சி அடையும்

ஆடிக் கார்த்திகை அன்று, முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் திருமணத் தடைகள் விலகும், தொழில் வளர்ச்சி அடையும், கர்ம வினைகள் நீங்கும், செவ்வாய் தோஷம் அகலும், ஆரோக்கியமான, ஆனந்த வாழ்வு அமையும். தொடர்ந்து 12 ஆண்டுகள் ஆடிக் கார்த்திகையில் விரதம் கடைப்பிடிப்பவர்கள், வாழ்வில் பெரும் வெற்றியை அடைவார்கள்.