தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கமாக, பித்ருக்கள் பூலோகத்திற்கு வருவதாக நம்பப்படும் முன்னோர் வழிபாட்டின் மிகப் புனித நாளாக ஆடி அமாவாசை விளங்குகிறது.
அமாவாசை திதியானது இன்று அதிகாலை 1.52 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 11.06 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி இன்று நீர்நிலை மற்றும் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புனித நீர்நிலைகளில் இன்று அதிகாலையிலேயே தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் நீர் நிலைகளில் புனித நீராடி கரையில் அமர்ந்து அவர்கள் முன்னோரை நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்து பித்ரு கடன்களை நிறைவேற்றினர்.
முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து வழிபட்ட மக்கள் அதனை நீர் நிலைகளில் கரைத்தனர். மேலும் காகத்துக்கு உணவளித்து ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று மாலையில் இருந்தே பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் திரண்ட அவர்கள் இன்று அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடினர்.
பின்னர் அவர்கள் மறைந்த தங்களுடைய தந்தை, தாயார், தாத்தா, பாட்டி, பாட்டனார், முப்பாட்டனார் உள்ளிட்டோரின் பெயர், கோத்திரங்களை கூறியும், நினைவில் இருந்த முன்னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டனர்.
முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது. 5 முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்தார். காலை 11 மணிக்கு ராமர் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி அக்னி தீர்த்த கடற்கரைக்கு வந்தார். இங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று நாள் முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடவும் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் இன்றி தீர்த்த நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலில் சாமி மற்றும் அம்பாள் சன்னதி பிரகாரம், 2, 3-ம் பிரகாரம், கோவில் ரத வீதி களிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் ராமேசுவரம் கடலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காவிரி, பவானி உள்ளிட்ட 3 ஆறுகள் சேரும் பவானி கூடுதுறையில் திரண்ட மக்கள் அங்கு முன்னோருக்கு தர்ப்பணம் செய்து அங்குள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் வழிபட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பாபநாசத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திரளானோர் ஆற்றில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பாபநாச சுவாமி கோவிலிலும் வழிபாடு செய்தனர்.
திருச்சி காவிரிக்கரையில் அம்மா மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட ஏராளமானோர் தர்ப்பணம் கொடுக்க திரண்டதால் கூட்டத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர். வேதாரண்யம், திருவையாறு போன்ற இடங்களிலும் ஏராளமான மக்கள் கூடினர். குற்றாலம் அருவிக்கரையிலும் பலர் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தார்கள்.
சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் மற்றும் காசிமேடு கடற்கரைகள் மற்றும் நீர்நிலைகளில் திரளான மக்கள் கூடினர். அவர்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல முக்கிய கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நடந்தன. சைதாப்பேட்டை காரணீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களின் தெப்பக்குள கரைகளிலும் காலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
செங்குன்றம் புழல் ஏரிக்கரை பகுதியிலும் ஏராளமானோர் தர்ப்பண சடங்குகளை நிறைவேற்றி, முன்னோரை வணங்கினர். பலரும் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.
வீடுகளில் முன்னோரின் படங்களுக்கு முன்பு படையலிட்டு வழிபாடு செய்தனர். மேலும் பலர் ஆதரவற்றவர்களுக்கு உணவு, ஆடை உள்ளிட்டவற்றை வழங்கினர்.