தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவலூர் (திருக்கோவிலூர், திருக்கோயிலூர் என்றும் அழைக்கப்படும்) 108 வைணவ திவ்ய திருத்தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் விழுப்புரம்- காட்பாடி ரெயில் பாதையில் உள்ளது.
“தூவடிவின் பார்மகள் பூ மங்கையோடு
சுடராழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற
காவடியின் கற்பகமே போல நின்று
கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை
செம்பொன் செய் திருவுருவம் ஆனான் தன்னை
தீவடிவின் சிவன் அயனே போல்வார்
மன்னு திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே”
- திருமங்கையாழ்வார், பெரியதிருமொழி 2-10-9.
மூலவர்: திரிவிக்ரமன், உலகளந்த பெருமாள் –திருவடியை உயரத் தூக்கிய நிலையில் நின்ற திருக்கோலம். மூலவர் தாரு மரத்தால் ஆனவர்.
உற்சவர்: ஆயனார் கோவலன் (கோபாலன்)
தாயார்: பூங்கோவல் நாச்சியார்
தல விருட்சம்: புன்னை மரம்
தீர்த்தம்: பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம், சக்ர தீர்த்தம்
விமானம்: ஸ்ரீகர விமானம்
மூலவர் வலக்கையில் சங்கும் இடது கையில் சக்ரமுமாகக் காட்சியளிப்பதோடு வலது காலால் பூமியை அளந்தவாறு நிற்கிறார். இந்தத் தலத்தைப் பற்றிய பழம்பெரும் புராண வரலாறு ஒன்று உண்டு. திருமால் திரிவிக்ரம அவதாரம் எடுத்த போது பூமியை அளந்த அவரது திருவடியை பூமாதேவி பூஜித்துப் பெருமையுற்றாள்.
விண்ணோக்கி சத்யலோகம் சென்ற திருவடியை பிரம்மா பூஜித்துப் பெருமையுற்றார். தமது கமண்டல நீரால் பிரம்மா திருமாலின் திருவடியை பூஜித்த போது திருவடியில் பட்டுச் சிதறிய நீர்த் துளிகளே கங்கை, கிருஷ்ணா, பத்ரா, சிலம்பாறு உள்ளிட்ட நதிகளாயின என்று புராணங்கள் கூறுகின்றன. தனது மூன்றாவது திருவடியால் மாவலியை பாதாளத்தில் புகுத்தி அங்கும் பெருமாள் காட்சியளித்தார்.
அதே அவதாரத்தை இந்தத் திருத்தலத்திலும் காட்டி அருளியதால் இந்தத் திருத்தலம் மிகவும் புகழ் பெற்றதாக விளங்குகிறது. இது வைணவ திவ்ய சேத்திரங்களுள் மிக முக்கியமான சேத்திரமாக விளங்குகிறது. இங்கு பெருமாள் வழக்கத்திற்கு மாறாக வலது கரத்தில் சங்கையும் இடது கையில் சக்கரத்தையும் கொண்டு காட்சி தருகிறார். பஞ்ச கிருஷ்ண தலங்களுள் ஒன்றாகவும் இது அமைகிறது.
இங்கு கர்ப்பகிரகத்திலேயே விஷ்ணு துர்க்கை எழுந்தருளியிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இதுதான் திவ்யபிரபந்தம் விளைந்த விளை நிலமாகும். திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும் இது. இங்கு ஓடுகின்ற பெண்ணையாறே கிருஷ்ணா பத்ரா நதியாகும். வேணுகோபாலர் சேத்ர பாலக வேடத்தில் இருக்கிறார்.
பிரகாரத்தில் வேணு கோபால், லட்சுமி நாராயணர், லட்சுமி ராகவர், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆஞ்சநேயர், ஆண்டாள், சுக்ராசாரியார் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. மிக உயரமான கோபுரத்தைக் கொண்டுள்ள தலங்களில் இதுவும் ஒன்று. 11 அடுக்குகளைக் கொண்டதாய் 192 அடி உயரமுள்ளதாய் விளங்குகிறது இங்குள்ள கோபுரம். 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவிலில் மூலவரின் பின்னால் வாமனமூர்த்தி இருந்து அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் தான் முதல் மூன்று அந்தாதிகள் தோன்றின.
ஒரு சமயம் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களும் இந்த ஊரில் ஒருவரை ஒருவர் அறியாமல் தனியே சஞ்சரித்து வந்தனர். ஒரு நாளில் பெரும் மழை பொழியவே இரவு நேரத்தில் மூவரும் ஒரு வீட்டின் இடைகழியில் வந்து தங்கினர். அப்போது ‘ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்’ என்ற அளவில் அந்த இடம் அமைந்திருக்க நான்காவதாக அங்கு வந்த பெருமாள் அவர்களுடன் சேர இட நெருக்கடி ஏற்பட்டது.
இப்படி நெருக்கம் ஏன் ஏற்பட்டது என்பது மூவருக்கும் விளங்கவில்லை. ஆகவே பொய்கையார் பூமியை அகல் விளக்காக்கி கடல் நீரை நெய்யாக்கி சூரியனை விளக்காக ஏற்றினார்.
“வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று.”
அடுத்து பூதத்தாழ்வார் அன்பாகிய அகல் விளக்கில் ஆர்வத்தையே நெய்யாக்கி சிந்தை என்னும் திரி கொண்டு ஞான விளக்கை ஏற்றினார். இரண்டாவது பாடல் மலர்ந்தது இப்படி:
“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புறு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.”
இருள் நீங்க இறைவனின் திருக்காட்சியைக் காண முடிந்தது. பேயாழ்வார் இறைவனின் வடிவழகைக் கண்டு மகிழ்ந்தார். உடனே அவரது பாடல் மலர்ந்தது:
“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் –செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிச்சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.”
இங்கு பொய்கையாரின் பாசுரங்கள் முதல் திருவந்தாதியாகவும், பூததாழ்வாரின் பாசுரங்கள் இரண்டாம் திருவந்தாதியாகவும், பேயாழ்வாரின் பாசுரங்கள் மூன்றாம் திருவந்தாதியாகவும் மலர்ந்தன. இந்தப் பாசுரங்களில் இறைவன் இங்கு இப்படி காட்சி அளித்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன.
ஆண்டு முழுவதும் ஏராளமான திருவிழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. பக்தர்கள் திரளாகக் கூடி அருள் பெறும் முக்கிய திவ்ய திருத்தலமாக திருக்கோவிலூர் அமைகிறது.