சிறப்புக் கட்டுரைகள்

சூரியனால் ஏற்படும் யோகங்கள்

அமாவாசை யோகத்தால் நற்பலன்களை அதிகரிக்க அமாவாசை திதியில் முன்னோர்களை வழிபட வேண்டும்.

ஒரு ஜாதகத்தான் பலனை நிர்ணயம் செய்வதில் கிரக இணைவுகள் பெரும் பங்கு வகிக்கிறது. ஜாதகத்தை பார்த்து பலன் சொல்வதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் கிரக இணைவுகளை பயன்படுத்தி சொல்லும் பலன் 100 சதவீதம் கை கொடுக்கும். நவ கிரகங்களில் சுய ஒளி உடைய மூலக்கிரகம் சூரியனாகும். உலகிற்கு ஒளி வழங்கும் சூரியனுடன் சில முக்கிய கிரகங்கள் இணைவதால் ஏற்படும் யோகங்களையும் அதற்கான பலன்களையும் காணலாம்.

அமாவாசை யோகம்

சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைத்திருப்பது அமாவாசை யோகமாகும். சூரியன் சிவனின் அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். இதை அர்த்தநாதீஸ்வரர் யோகம் என்றும் கூறலாம். சூரியன் எனும் ஆன்மாவும் சந்திரன் எனும் மனமும் இணைவதால் இந்த கிரகச் சேர்க்கை உள்ளவர்கள் ஞானம் உள்ளுணர்வு நிறைந்தவர்களாகவும், வித்தியாசமான சிந்தனை உள்ளவர்களாகவும், உலகப்புகழ் பெற்றும் கவிதை, காவியம் எழுதி அசத்துபவர்களாகவும் இருப்பார்கள். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபடுவார்கள். எந்தத் துறையில் இருந்தாலும் அந்த துறையில் தனித் தன்மையுடன் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம்

அமாவாசை யோகத்தால் நற்பலன்களை அதிகரிக்க அமாவாசை திதியில் முன்னோர்களை வழிபட வேண்டும்.

தேஜோ அக்னி யோகம்

ஒரு ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கையால் ஏற்படும் யோகம். சூரியன் தேஜஸை குறிப்பவர். செவ்வாய் அக்னி நெருப்பை குறிப்பவர். இந்த இரண்டும் இணைந்தால் அது தேஜோ அக்னி யோகமாகும். சூரியனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள். சூரியன் தனது நட்பு கிரகமான செவ்வாயின் மேஷ ராசியில் உச்சமாகிறார். இரண்டும் வெப்ப கிரகம் என்பதால் ஜாதகர் முன் கோபியாக இருப்பார். எதற்கும் பயப்பட மாட்டார். அகங்காரம், அதிகாரம், உடல்வலிமை, அரசாங்க ஆதரவு, அரச உத்தியோகம், அரசியல் பதவி, பெயர், அந்தஸ்து, சொத்து சுகம், கவுரவம் உள்ளவராக இருப்பார்.

பரிகாரம்

அதீத கோபத்தை கட்டுப்படுத்த செவ்வாய் கிழமை விநாயகரை வழிபட வேண்டும். அரச உத்தியோகம், அரசு வகை ஆதரவு கிடைக்க செவ்வாய் கிழமை சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்வது நல்லது.

புத ஆதித்ய யோகம்

சூரியனுக்கு முதல்வட்ட பாதையில் புதன் இருப்பதால் சூரியனின் வெப்பத்திற்கு ஈடு கொடுத்து, அதாவது சூரியனின் ஈர்ப்பு வீசை உள்ளிழுக்கப்பட்டு அழிந்து விடாமல் புதன் தன் பாதையில் சுற்றி வரும்படி புதனின் கட்டமைப்பு அமைந்துள்ளது. சூரியனிடமிருந்து வெளிவரும் அனைத்து கதிர்களையும் தன்னகத்தே தேக்கிக் கொள்ளும் தன்மையை புதன் பெற்றுள்ளது. அதனால் தான் மனிதனின் நினைவாற்றலுக்கும் புத்திக் கூர்மைக்கும் பொது அறிவிற்கும் புதனையே காரக கிரகம் என்கிறோம்.

பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

புதன்

சூரியன் என்றால் ஆன்மா, புதன் என்றால் புத்தி. ஆன்மாவும் புத்தியும் இணையும் போது ஆன்ம பலம் பெருகும். ஆத்ம பலம், ஞானத்தை தரும் சூரியனுடன் புத்தி காரகன், வித்யாகாரகன் புதன் சேரும் போது மனிதனுக்கு அளவில்லாத வாழ்வியல் ஞானம், ஆன்ம பலம், கல்வியில் தனித்துவத்துவம் ஏற்படுகிறது. அதே போல் பலர் புத ஆதித்ய யோகம் கல்விக்கு மட்டுமே பலன் தரும் என்று நினைக்கிறார்கள். புத ஆதித்ய யோகம் பெற்றவர்கள் எல்லோராலும் விரும்பப்படும் நகைச்சுவை உணர்வு, வசீகரத் தன்மை, இளமைத் தோற்றம் நிரம்பியவர்கள். இது மனிதர்கள் வாழ்வில் அனைத்து விதமான வெற்றியை வழங்க கூடிய யோகமாகும்.

பரிகாரம்

புதன் கிழமை வில்ல மாலை அணிவித்து சிவ வழிபாடு செய்தல் நலம்.

தட்சிணாமூர்த்தி யோகம்

சூரியனும், குருவும் ஒரே ராசியில் இணைந்திருந்தால் பரமாத்மா, ஜீவாத்மா சம்யோகம் என்று பெயர் பரமாத்மாவை குறிக்கும் கிரகமான சூரியனும் ஜீவாத்மாவைக் குறிக்கும் கிரகமான குருவும் ஒரே ராசியில் இணைந்திருந்தால் தட்சிணாமூர்த்தி யோகம் என்றும் அழைக்கலாம். சிறந்த நுண்ணறிவு உடையவர்கள். தன் திறமையால் அறிவால் அனைவரையும் கவரும் திறன் படைத்தவர்.தெய்வ நம்பிக்கை மிக்கவராக இருப்பார்கள்.

கோவில் திருப்பணிகள்

குலப்பெருமையைக் காக்க கூடியவராக இருப்பார்கள். உயர்கல்வி விருத்தி, சந்ததி விருத்தி, ஆண்வாரிசு உண்டு. குளம் வெட்டுதல், நீர்நிலைகள் அமைத்துக் கொடுத்தல், மரம் நடுதல் இயற்கை வளங்களை பாதுகாத்தல் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், என பொதுவான செயல்கள் அனைத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். மகான்கள், ஞானிகள் மற்றும் பெரியோர்களின் மீது மரியாதையும் நம்பிக்கையும் உள்ளவராக இருப்பார்கள்.

நேர்மையான தன்னுடைய குலப்பெருமையை காக்கக்கூடிய புத்திரர்களை பெறுவார்கள்.புத்திரர்களால் பெயரும் புகழும் அடைவார்கள். ஜாதகரின் தந்தை புகழ்,செல்வம், யோகம் போன்றவைகளை அடைந்தவராக இருப்பார்.

பரிகாரம்

வியாழக்கிழமை சூரிய ஓரையில் மஞ்சள் வஸ்தரம் அணிவித்து தட்சிணா மூர்த்தியை வழிபட வேண்டும்.

காமேஷ்வரர் யோகம்

ஒரு ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் இணைவதால் ஏற்படும் யோகம். சுக்ரன் லெளகீக இன்பத்தை தருபவர். சுக்ரன் லட்சமி அம்சம், சூரியன் ஈஸ்வரன் அம்சம் என்பதால் இதை விஜயலட்சுமி யோகம் என்றும் கூறலாம். ஆடம்பரம், லெளகீகத்தை குறிக்கக் கூடிய சுக்ரன் கவுரவ கிரகமான சூரியனுடன் சேருவதால் ஜாதகர் சொத்து சுகம். வீடு வாகனம், கவுரவம் நிறைந்தவர். இந்த கிரகச் சேர்க்கை சில அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். நெருப்பு கிரகமான சூரியன் சுக்ல விருத்தியை தரும் சுக்ரனுடன் சேருவது கடுமையான புத்திர தோஷமாகும். காலம் தாழ்ந்து குழந்தை பிறக்கும் அல்லது பெண் குழந்தை மட்டும் பிறக்கும். அல்லது பெண் வாரிசிற்கு பிறகு ஆண் வாரிசு உருவாகும். மேலும் கணவன், மனைவிக்குள் மன பேதத்தையும் ஏற்படுத்தும். பெரும்பாலும் இந்த அமைப்பு ஆண்களையே குறி வைத்து தாக்கும். ஆண்களை விட பெண்களுக்கு நிர்வாகத் திறனையும் ஆடம்பர தோற்றத்தையும் தருவதால் தம்பதியினரிடையே ஒற்றுமை குறைவுமிகும். இல்லற இன்பத்தை குறைத்து புத்திர தோசத்தை ஏற்படுத்தும்.

பரிகாரம்

ஞாயிற்று கிழமை காலை 6-7 சூரிய ஒரையில் கோதுமை பாயசம் செய்து மகாலஷ்மியை வழிபட வேண்டும்.

வெள்ளிக்கிழமை காலை 6-7 சுக்கிர ஒரையில் சிவ வழிபாடு செய்து வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

சனீஸ்வர யோகம்

ஒரு ஜாதகத்தில் சூரியன் சனி ஓரே ராசியில் இருந்தால் சனீஸ்வரயோகமாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவு ஏற்படும். சூரியன் தந்தை. சனி மகன்.

ஆண் ஜாதகத்தில் இந்த கிரக சம்பந்தம் இருந்தால் தந்தை, மகனுக்குள் ஒற்றுமை குறைந்து அதிக பிரச்சினை ஏற்படும். இந்த கிரக சம்பந்தம் பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. ஆண்களுக்கு மாமனாரின் செயல்கள் மன வருத்தத்தை தருகிறது. சமயங்களில் வீட்டோடு மாமனாரை வைத்து காப்பாற்ற வேண்டிய சூழலும் நிலவுகிறது. ஆக மாமனார் மருமகன் உறவில் விரிசல். ஆனால் பெண்களுக்கு தந்தையின் அன்புக்கு இணையான மாமனார் கிடைக்கிறார். ஆண்களுக்கு இல்வாழ்க்கை பிரச்சினைய தரும். பெண்களுக்கு தகுதி குறைந்த வாழ்க்கை துணையே கிடைக்கும். ஆண், பெண் இருவருக்கும் பித்ரு தோஷம், புத்திர தோஷத்தையும் காட்டும் கிரக சம்பந்தம்.

பரிகாரம்

சனிக்கிழமை கருப்பு உளுந்து, கருப்பு எள் உருண்டை தானம் வழங்க நிலைமை சீராகும்.

சர்பேஸ்வரர் யோகம்

சூரியன், ராகு ஒரே ராசியில் இணைந்தால் அதை சர்பேஸ்வரர் யோகம் எனலாம். சூரியன் தந்தை, ராகு சூரியனை கிரகணப்படுத்தும் வலிமை கொண்ட கிரகம் என்பதால் சூரியன் ராகு சம்பந்தம் தந்தை மகனை பிரிக்கும். சூரியன் பாகை முறையில் ராகுவை கடந்து நின்றால் பாதிப்பு குறையும். சூரியன் ராகுவை நோக்கி பயணித்தாலும், ராகு சூரியனை நோக்கிச் சென்றாலும் பாதிப்பு சற்று கூடுதலாகும். கண் பாதிப்பு இருக்கும். இது கிரகண அமைப்பு.

பரிகாரம்

நாகாபரணம் தரித்த சிவனை வழிபட இன்னல்கள் விலகும்.

முனீஸ்வரர் யோகம்

சூரியனும் கேதுவும் ஒரே ராசியில் இணைவது முனீஸ்வர யோகம். இவர்கள் சாதுக்கள், சன்னியாசிகள் சாபம் நிரம்பியவர்கள்: புத்திர தோஷம் தந்தை மகன் கருத்து வேறுபாடு உண்டு.சூரியன் பாகை முறையில் கேதுவை கடந்து நின்றால் பாதிப்பு சற்று குறையும். சூரியன் கேதுவை நோக்கி பயணித்தாலும், கேது சூரியனை நோக்கிச் சென்றாலும் பாதிப்பு சற்று கூடுதலாகும்.

பரிகாரம்

சனிக்கிழமை சாதுக்கள் மற்றும் முனிவர்களின் நல்லாசி பெற வேண்டும்.

பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இணைவதால் சுப பலன்கள் உருவாகும் வாய்ப்பு குறைவு. அந்த கிரகங்களின் பாவக ஆதிபத்திய ரீதியாக சுபமும், அசுபமும் கலந்தே நடக்கும். சூரியனுடன் இணைந்த கிரகத்தால் அசவுகரியத்தை சந்திப்பவர்கள் உரிய வழிபாடு மற்றும் பரிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT