நவராத்திரி என்று சொன்னவுடனேயே நமக்கு புரட்டாசி மாதம் தான் நினைவிற்கு வரும். மகா சக்தி அன்னை பராசக்தியின் 9 விதமான வடிவங்களை போற்றி வழிபடும் காலமே நவராத்திரி ஆகும். பொதுவாக ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியது.
12 மாதங்களுக்கும் 12 விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாஸ்திரங்கள். அதில் மிக முக்கியமானவை 4 நவராத்திரிகள். அதன்படி பங்குனியில் வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.
சாரதா நவராத்திரி எனும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி ஆலயங்களிலும், வீடுகளிலும் மிகவும் கொண்டாட்டமாக நடத்தப்படுகிறது. அதற்கு அடுத்து பெரிய அளவில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. வளமான, வசந்தமான வாழ்வை தரக் கூடியது வசந்த நவராத்திரி. இந்த நாளில் அம்பிகையை முறையாக வழிபட்டால் கேட்கும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பங்குனி மாத அமாவாசையை அடுத்து வரும் 9 நாள் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வசந்த நவராத்திரி நாளை(வியாழக்கிழமை) தொடங்கி 27-ந்தேதி வரைநடைபெறுகிறது. இதனை லலிதா நவராத்திரி என்றும் சைத்ர நவராத்திரி என்றும் அழைக்கின்றனர். இது இரண்டாவதாக கொண்டாடும் மிகப்பெரிய நவராத்திரியாகும்.
நவராத்திரி என்பதே தீயவற்றை ஒழித்து, நல்லதை நிலைநாட்டுவதுதான். வசந்த நவராத்திரி மகிசாசுர வதத்துக்குப் பிறகு வரும் நவராத்திரி என்றும். அசுரனை வதம் செய்த துர்கைக்கு நன்றியுடன் வழிபாடு செய்து சகல சவுபாக்கியங்களையும் பெறுவதே இதன் நோக்கமாகும்.
பல மாநிலங்களில் இந்த நவராத்திரி விழா வசந்த கால அறுவடைக்குப் பிறகு வருகிறது. இந்த 9 நாட்களும் தேவியின் வெவ்வேறு அம்சங்களை போற்றி துதிப்பதால், வாழ்வில் வளமும், நலமும் பெருகும், கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வசந்த நவராத்திரியின் 9 நாட்களிலும் அம்பிகைக்குப் பிடித்தமான நைவேத்தியங்களைச் செய்து படைத்து வழிபட வேண்டும்.
வசந்த காலத்தில் பகல் பொழுது அதிகமாக இருப்பதால், வசந்த நவராத்திரி பூஜைகள் பகலிலேயே நடைபெறுகின்றன.
புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியின் போது அம்பிகையை 3 அம்சங்களாகக் கருதி வழிபடுவது வழக்கம். கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு 3 நாட்களும் செல்வத்தினை வழங்கும் மகாலட்சுமிக்கு 3 நாட்களும் தொடர்ந்து ஆற்றலையும், நம்பிக்கையையும் வழங்கும் துர்கைக்கு 3 நாட்களும் ஆக 9 நாட்களும் நவராத்திரி கொண்டாடப்படும்.
ஆடி மாதப் பிரதமை தொடங்கும் ஆஷாட நவராத்திரியில் வராகி அம்பிகையை முன்னிறுத்தி வழிபாடு செய்வார்கள். மாசி மாத பிரதமையில் இருந்து தொடங்கும் சியாமளா நவராத்திரியில் “ராஜ மாதங்கி’ என்னும் சியாமளாவை முன்னிறுத்தி வழிபாடு செய்வார்கள்.
அந்த வகையில் வசந்த நவராத்திரியில் அம்பிகையை லலிதாம்பிகையாக வழிபடவேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள். லலிதாம்பிகையே ஆதிபராசக்தியின் வடிவம். அம்பிகை உபாசனையில் உயர்ந்த நிலையைக் கொண்ட லலிதாம்பிகையே ஸ்ரீசக்கரத்தில் அருள்பவள்.
அப்படிப்பட்ட லலிதா பரமேஸ்வரியாக அம்பிகையை வழிபட்டால் பிறவிப்பிணிகள் தீரும். வாழ்வில் பிரச்சினைகள் விலகும். எதிரிகள் ஒழிந்துபோவார்கள். கடன் பிரச்சினைகள் விலகி செல்வ வளம் கிடைக்கும். இப்படிப்பட்ட அற்புதமான பலன்களைப் பெற வசந்த நவராத்திரியில் அன்னை லலிதாம்பிகையை தரிசனம் செய்து வழிபட்டாலே போதுமானது.
வசந்த காலம் புதிய தொடக்கத்தையும், வளர்ச்சியையும் குறிப்பதால் இந்த நேரத்தில் அம்பிகையை வழிபடுவது அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைத் தரும் என்பது ஐதீகம்.
ஆன்மீக ரீதியாக, வசந்த நவராத்திரி மனதையும் உடலையும் தூய்மைப்படுத்தவும், ஆன்மாவை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த நாட்களில் விரதம் இருப்பது, மந்திரங்கள் ஜெபிப்பது, தேவி ஸ்தோத்திரங்களை பாடுவது ஆகியவை மன அமைதியை அளிக்கும்.
வசந்த நவராத்திரியில் விரதம் இருந்து வழிபட்டால் கன்னியர்களுக்கு திருமணவரன் கிடைக்கும். சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். வசந்த நவராத்திரியில் அம்பிகையை வழிபட்டால் கடன் தொல்லைகள் தீர்வதோடு, கணவன்-மனைவி உறவு பலப்படும், அன்யோன்யம் உண்டாகும். அக்கினி புராணத்தில் ஒரு வருடத்தில் 4 நவராத்திரிகளையும் கொண்டாட முடியாதவர்கள் சாரதா நவராத்திரி மற்றும் வசந்த நவராத்திரியையாவது விரதம் இருந்து கொண்டாடுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆகவே பங்குனி மாதம் அனுஷ்டிக்கப்படும் வசந்த நவராத்திரியை சக்தி வழிபாடு செய்து சகல பாக்கியங்களையும் பெறலாம். வாழ்வில் வசந்தம் வீசச் செய்யக்கூடிய வசந்த நவராத்திரி காலத்தில் அம்பிகையை வழிபட்டு, அம்பிகையின் பரிபூரண அருளைப் பெறுவோம்.