சிறப்புக் கட்டுரைகள்

கன்னிப்பெண்களுக்கு திருமண வரம் தந்து அருளும் கன்னிகா பரமேஸ்வரி

தமிழகத்திலும் கன்னிகா பரமேஸ்வரிக்குப் பல கோவில்கள் உள்ளன.

ஆதி பராசக்தியின் அம்சமான கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் அவதார தினமான சித்திரை மாத வளர்பிறை தசமியன்று கொண்டாடப்படுவது வாசவி ஜெயந்தி. அமைதி, அகிம்சை மற்றும் தியாகத்தின் அடையாளமாகத் திகழும் வாசவி தேவி, கலியுகத்தின் காக்கும் தெய்வமாக அருள்பாலிக்கிறார்.

ஒரு சமயம் சிவனும், பார்வதியு, கயிலாயத்தில் வீற்றிருந்தனர். கயிலையின் முதன்மை காவலாளியான நந்தி, புனித கங்கையில் நீராடுவதற்காக புறப்படத் தயாரானார்.

தான் சென்றால், இறைவனுக்கு காவல் வேண்டுமே என்பதற்காக, சமதி என்ற மகரிஷியிடம், தான் வரும் வரை கயிலையின் வாசலில் காவல் காக்கும்படியும், யார் வந்தாலும் இறைவனின் அனுமதி பெற்றே உள்ளே அனுமதிக்கும்படியும் கூறிச் சென்றார்.

சமதி முனிவரும் நந்தீஸ்வரர் சொன்னபடியே காவல் காத்து வந்தார். அப்போது கோபத்திற்கு பிரசித்தி பெற்ற துர்வாச முனிவர் அங்கு வந்தார். அவரை சமதி மகரிஷி உடனடியாக உள்ளே அனுமதிக்கவில்லை.

இதனால் சமிதி முனிவரை பூமியில் மனிதனாக பிறக்கும்படி துர்வாசர் சாபமிட்டார். அதன்படி சமதி மகரிஷி ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பெனுகொண்டா நகரத்தில் குசும ஸ்ரேஷ்டி என்ற பெயரில் பிறந்து, குஸ்மாம்பா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

இந்த சூழலில் ஈஸ்வரனின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த நந்தி, அவரது காலில் விழுந்து வணங்கினார். அப்போது தன் காலிலும் விழாமல் அவமதித்து விட்டதாக நினைத்த பார்வதி, நந்தியை பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

தவறு செய்யாத தன்னை சபித்ததால் பார்வதி மீது கோபம் கொண்ட நந்தி, அவரையும் பூமியில் பிறந்து கன்னியாக வாழ்ந்து அக்னி பிரவேசம் செய்ய வேண்டும் என்று சாபமிட்டார். அவர்கள் இருவரும், துர்வாசரால் சாபம் பெற்று ஏற்கனவே பூமியில் அரசராக வாழ்ந்து வந்த குசும ஸ்ரேஷ்டி- குசுமாம்பிகை தம்பதிக்கு பிள்ளைகளாக பிறந்தனர்.

விருபாட்சன் என்ற பெயருடன் நந்தியும், வாசவாம்பா என்ற பெயருடன் பார்வதியும் வளர்ந்தனர். வாசவாம்பா, வாசவி என்று அழைக்கப்பட்டார்.

வாசவி தான் தெய்வாம்சம் பொருந்தியவள் என்பதை உணர்த்தும் வகையில் பிறந்த உடனேயே அவள் தன் பெற்றோருக்கு 4 கரங்களோடு, சங்கு சக்கரம் ஏந்திய திருக்கோலத்தில் காட்சி கொடுத்தாள். பின்பு சாதாரணக் குழந்தையாகி வளர்ந்தாள். அவளை, ‘வாசவி’ என்றும் கன்னிகா பரமேஸ்வரி என்றும் பெயரிட்டு அழைத்துச் சீராட்டி வளர்த்தனர் பெற்றோர்.

கன்னிகா பரமேஸ்வரிக்கு திருமண வயதை எட்டியது. அவளை மணமுடித்து கொடுக்க பெற்றோர் வரன் பார்த்தனர். ஆனால் வாசவியோ `சிவனையே மணாளனாக அடைவேன்’ என்று சொல்லித் தவம் இருந்தாள். அந்த தேசத்தின் மன்னன் விஷ்ணுவர்த்தன் கன்னிகாதேவியின் அழகைக் குறித்துக் கேள்விப்பட்டு அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். ஆனால் கன்னிகாதேவியோ அதை மறுத்துத் தான் ஈசனை மட்டுமே அடைவேன் என்று உறுதியாகச் சொன்னாள்.

இதனால் கோபம் கொண்ட மன்னன் அவள் வாழ்ந்த ஊரையே சாம்பலாக்கிவிடுவேன் என்று எச்சரித்தான். ஊர் மக்களில் பலர் பயந்து வேறு ஊருக்குச் சென்றனர். ஆனால் மீதம் இருந்த மக்கள் அன்னையுடன் நின்றனர்.

அப்போது அன்னை, தான் யார் என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொன்னாள். விஸ்வரூப தரிசனம் காட்டி அவர்களுக்கு ஆசி வழங்கினார். தன்னால் தான் அனைவருக்கும் வேதனை என்று நினைத்த வாசவி தன் குலப்பெருமை காப்பதற்காக தன்னை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தாள். அதற்கு பெரியவர்களின் சம்மதத்தையும் வாங்கினாள்.

“பெறுவதற்கு அரிய தரிசனம் கண்டதால் அனைவருக்கும் முக்தி நிச்சயம். எனவே என்னோடு மேலுலகம் செல்லத் தயாராக இருப்பவர்கள் வரலாம். மற்றவர்களையும் அவர்கள் சந்ததியையும் நான் கலியுகம் முடியும் வரைக் காப்பேன். யாரெல்லாம் என்னை கன்னிகா பரமேஸ்வரி என்ற திருநாமத்தை ஒருமுறை சொல்லிச் சரண் அடைந்து வணங்குகிறார்களோ அவர்களை சகல தீங்கிலிருந்தும் காப்பேன்” என்று வாக்குத் தந்தாள் கன்னிகாதேவி.

பின்னர் அங்கிருந்த ஆலயம் முன்பு பெரிய அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, அதில் வாசவியின் அக்னிப் பிரவேசம் நிகழ்ந்தது. வாசவி, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியாக தோன்றி அங்கிருந்த அனைவருக்கும் அருள்காட்சி தந்து மறைந்தாள். 102 கோத்திரத்தினரின் குழந்தைகள், வயோதிகர்கள் தவிர மற்ற அனைவரும் அக்னி குண்டத்தில் கன்னிகா தேவியோடு இறங்கி மறைந்தனர். அடுத்த கணம் விஷ்ணுவர்த்தனின் தலை வெடித்துச் சிதறியது.

புயல், மழை, காற்று என அமர்க்களப்பட்டது. மன்னனின் படைகள் சிதறி ஓடின. நடந்தவற்றை அறிந்த விஷ்ணுவர்த்தனின் மகன் ராஜராஜ நரேந்திரன் அன்னை வாசவியின் சகோதரனான விருபாட்சனை அணுகி மன்னிப்புக் கோரினான். அன்னைக்கு ஓர் ஆலயம் எழுப்பி வழிபடுவதாகக் கூறி அவ்வாறே ஒரு கோயிலையும் எழுப்பினான். அன்று முதல் வாசவி தேவி, அனைவருக்கும் தெய்வமானாள்.

வாசவி தேவி வழிபாடு பின்பு நாடு முழுவதும் பரவியது. தமிழகத்திலும் கன்னிகா பரமேஸ்வரிக்குப் பல கோவில்கள் உள்ளன. கலியுகத்தில் பக்தர்களின் துன்பம் தீர்க்க அன்னை மேற்கொண்ட அவதாரமே கன்னிகா பரமேஸ்வரி. இந்த அற்புத அவதாரம் நிகழ்ந்த நாள் வாசவி ஜெயந்தி. குறிப்பாகப் பெண்கள் விரதம் இருந்து வழிபட வேண்டிய நாள் இது.

அன்னையை வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும். வேண்டும் செல்வம் சேரும் என்பதும் நம்பிக்கை. திருமணமாகாத பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியை மனதில் நினைத்து 48 நாட்கள் தியானித்தால் அன்னை மனம் மகிழ்ந்து அவர்களுக்குத் திருமண வரம் அருள்வாள் என்பது ஐதீகம்.

பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர்.