அரசியலில் ஈடுபட வேண்டும். அதற்காக தி.மு.க.வில் சேர வேண்டும். என்று முடிவு எடுத்தாச்சு. ஆனால் அந்த நேரத்தில் கலைஞருக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதற்கு காரணம் அப்போது நான் ஜெயா டி.வி.யில் சின்னத்திரையில் பிரபலமாக இருந்தேன். ஜாக்பாட் என்ற ஒரு நிகழ்ச்சியை தயாரித்து வழங்கி கொண்டிருந்தேன். கல்கி என்ற தொடரிலும் நடித்துக்கொண்டிருந்தேன்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்தச் சூழலில் நான் தி.மு.க. பக்கம் போனால் எனக்கு ஏதேனும் நெருக்கடிகள் வருமோ என்று அவர் தயங்கி இருக்கிறார்.
ஏற்கனவே சினிமாவுக்கு வழங்கப்படுவதைப் போல் தொலைக்காட்சி தொடர்களுக்கும் விருது வழங்கும் முடிவை அப்போதுதான் முதலமைச்சராக இருந்த கலைஞர் தொடங்கி வைத்திருந்தார்.
முதல் ஆண்டு அரசு முதல் முறையாக தொலைக் காட்சி தொடர்களுக்கு விருது அறிவித்தது. அதில் கல்கி தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது எனக்கு கிடைத்தது. அப்போதும் இது நமக்கு எதிரான கட்சியினர் நடத்தும் டி.வி. அதில் நடித்தவருக்கு நாம் ஏன் விருது வழங்க வேண்டும் என்று கலைஞர் நினைக்கவில்லை.
மாறாக கலையை கலை கண்ணோட்டத்தோடு பார்த்தார். அதுதான் கலைஞரிடம் இருந்த சிறப்புக் குணம். அவர் கையால் தான் விருதும் பெற்றேன். தனிமனித நட்பு, விருப்பு வெறுப்பு, கலை இப்படி எல்லாவற்றையும் அரசியலோடு இணைத்துப் பார்க்க மாட்டார். ஒவ்வொன்றையும் அதனதன் தளங்களில் நின்று பார்ப்பார், பாராட்டுவார், ரசிப்பார். அவரால் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதையும் செய்வார்
மனதளவில் கலைஞர் தலைமையில் தி.மு.க.வில் சேர்வதற்கு நான் முடிவு எடுத்ததற்கு இவைகளும் ஒரு காரணம்.
கலைஞரிடம் ஜூன் 3-ந்தேதி, அதாவது அவரது பிறந்தநாளில் தி.மு.க.வில் சேருவது என்று முடிவெடுத்து சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பினேன். நான் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் கோபாலபுரம் கலைஞர் இல்லத்தில் இருந்து போன் வந்தது.
அப்போது சொன்னார்கள் நீங்கள் கட்சியில் சேர்வதற்கு ஜூன் 3 வரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்பு சேர்ப்பதற்கு கலைஞர் விரும்புகிறார். எனவே என்றைக்கு சேருவது என்பது பற்றி இன்று அல்லது நாளைக்குள் தகவல் வரும். நீங்கள் அடுத்த ஒரு வாரத்திற்கு வெளியூர் செல்லும் நிகழ்ச்சிகள் இருந்தால் ரத்து செய்து விடுங்கள். சென்னையிலேயே இருங்கள் என்றார்கள்.
சொன்ன மாதிரியே மறுநாள் தலைவரிடமிருந்து அழைப்பு வந்தது. அடுத்த இரண்டு நாளில் அதாவது ஒரு சனிக்கிழமை காலை 11 மணிக்கு அறிவாலயத்திற்கு வா. அன்று கட்சியில் இணைந்து விடு இணைவதற்கு முன் யாரிடமும் சொல்லாதே என்று கூறினார்.
அவர் சொன்னபடியே நான் தி.மு.க.வில் சேர போவது பற்றி யாரிடமும் வாய் கூட திறக்கவில்லை. பத்திரிகைகளில் யூகமாக செய்திகள் கசிந்து கொண்டிருந்தனர். பல நிருபர்கள் தொடர்பு கொண்டார்கள். ஆனால் யாரிடமும் பதில் சொல்லாமல் நழுவிக் கொண்டே வந்தேன்.
கலைஞர் குறிப்பிட்ட நாளும் வந்தது. அதாவது 14-5-2010 அந்த நாள்தான் நான் அரசியலுக்குள் புகுந்த நாள். தி.மு.க.வில் இணைந்த நாள்.
முதல் முதலாக அறிவாலயத்திற்குள் எனது கார் சென்றது. அங்கு கண்ட காட்சியைப் பார்த்து பிரமித்துப் போனேன். ஏராளமான தொண்டர்கள் நிரம்பி இருந்தார்கள். முன்கூட்டியே தகவல் கொடுத்து யார் யாரெல்லாம் வர முடியுமோ அவர்களை எல்லாம் அவசர அவசரமாக சென்னைக்கு வரவழைத்து இருக்கிறார்கள். அறிவாலயமே நிரம்பி வழிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் என்று பல பொறுப்புகளில் இருந்தவர்களும் திரண்டிருந்தார்கள்.
முக்கிய நிர்வாகிகளுடன் மேடையில் இருந்தேன். சற்று நேரத்தில் கலைஞரும் வந்தார். தலைவர் கலைஞர் வாழ்க தமிழின தலைவர் வாழ்க என்று அரங்கமே அதிர கோஷங்கள் எழுந்தது. அரசியலில் இவைகளெல்லாம் எனக்கு புதுமையான அனுபவங்கள்.
சினிமாவில் படப்பிடிப்புக்கு பல இடங்களுக்கு சென்றிருக்கிறோம். அங்கெல்லாம் கூட்டம் அலைமோதும். என்னை பத்திரமாக அழைத்துச் செல்வார்கள் காவல்துறையினர். கூட்டத்தை ஒழுங்கு படுத்துவார்கள். அதைத்தான் நான் பார்த்து இருக்கிறேன். அரசியல் வரவேற்பும் ஆரவாரமும் வேறுவிதமானது. அதனால் தான் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தேன்
வழக்கமான புன்முறுவலுடன் மேடை ஏறிய கலைஞர் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் பார்த்து உற்சாகமாக கையசைத்து விட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். மேடையில் நான் தி.மு.க.வில் இணைய இருப்பதை அறிவித்தார்கள். அதற்கான படிவம் வழங்கப்பட்டது.
கலைஞர் முன்னிலையிலேயே அதில் கையெழுத்துப் போட வேண்டும். அப்போது என் கையில் பேனா இல்லை. சுற்றுமுற்றும் பார்த்தேன். கலைஞர் கையில் வைத்திருக்கும் பேனாவை யாருக்கும் கொடுக்க மாட்டார் என்பது தெரியும். அப்போது அருகில் நின்ற இப்போதைய முதலமைச்சரும் அப்போதைய துணை முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் தன் சட்டைப்பையிலிருந்து பேனாவை எடுத்து தந்தார்.
அந்தப் பேனாவால்தான் கையெழுத்துப் போட்டேன். அடுத்ததாக உறுப்பினர் கட்டணமாக ரூ.500 வேண்டும் என்றார்கள். அதுவும் என் கையில் அப்போது இல்லை. நான் சிரித்துக்கொண்டே இதெல்லாம் எனக்குத் தெரியாதே நான் கொண்டு வரவில்லையே என்றேன்.
உடனே அந்தப் பணத்தையும் மு.க. ஸ்டாலின் அவர்கள் தான் தந்தார்கள். அதை வாங்கி நான் கலைஞர் கையில் கொடுத்தேன். அதன் பிறகு எனக்கு தி.மு.க.வில் இணைந்ததற்கான அத்தாட்சி அட்டை வழங்கப்பட்டது.
இப்படியாக அரசியலில் நுழைய வேண்டும். தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்ற எனது ஆசை அன்று நிறைவேறியது. நானும் தமிழகத்தில் இருக்கும் லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்களில் ஒருத்தியாகிவிட்டேன் என்ற எண்ணத்தோடு அங்கிருந்து புறப்பட்டேன்.
கட்சியில் இணைந்ததையடுத்து கட்சிப் பணி என்றால் என்னென்ன பணியாற்ற வேண்டும் என்பது எதுவும் தெரியாது.
கட்சியில் இணைந்த சில தினங்களிலேயே எனக்கு மிக முக்கியமான பரிட்சையை கலைஞர் வைத்தார். என்ன பரிட்சை என்பதைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சி. எப்படி சமாளிக்கப் போகிறோம்? என்று மனதுக்குள் ஒருவிதமான தயக்கம், பயம். அந்தப் பரீட்சையில் எப்படி வென்றேன்
(அடுத்த வாரம் சொல்கிறேன்)
ttk200@gmail.com