குஷ்பு, ஜெயலலிதா 
சிறப்புக் கட்டுரைகள்

குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும்- என்னை கவர்ந்த ஜெயலலிதா ஆளுமை- 35

நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

மாலை மலர்

ஜெயலலிதாவை சந்திக்கப் போகிறோம்... காலையில் எழுந்ததும் அந்த எண்ணம்தான் மனதுக்குள் வந்து வந்து போனது. அவர் எப்படி பேசுவார்? என்ன கேட்பார்? என்று ஒரு இனம்புரியாத பதட்டமும் மனதுக்குள் இருந்தது.

காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு போயஸ் கார்டன் செல்ல தயாரானோம். ஜெயலலிதா நடிகையாக இருந்து முதல்- அமைச்சரானவர். நான் நடிகையாக இருப்பவள். எனவே அவரை சந்திக்கும் போது காஸ்டியூம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அன்று எனது காஸ்டியூமில் கூடுதல் பிரயாசை எடுத்துக் கொண்டேன்.

வீட்டில் இருந்து புறப்பட்டு கார் போயஸ் கார்டனை சென்றடைந்தது. வழி நெடுக காவலர்களின் கண்காணிப்பு... ‘வேதா இல்ல’த்தின் வெளிப்புற கேட்டின் முன்பும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு. ஒரு வி.வி.ஐ.பி. வீடு என்றால் எப்படி இருக்கும்? பாதுகாப்பு எப்படி இருக்கும்? என்பதை எல்லாம் பார்க்க பார்க்க பிரமிப்பாக இருந்தது.

கேட்டின் முன்பு நின்ற போலீசார் எங்கள் காரை பார்த்ததும் சோதனை செய்துவிட்டு உள்ளே அனுப்பினார்கள். முதல்- அமைச்சரின் இல்லம் என்றால் சும்மாவா...?

உள்ளே சென்றதும் வரவேற்பு அறையில் நானும் கணவரும் குழந்தையுடன் அமர்ந்து இருந்தோம். அடுத்த சில விநாடிகளில் வீட்டினுள் இருந்து ஜெயலலிதா வந்தார். இல்லை இல்லை... ஒரு தேவதை வந்தது. பச்சை வண்ண புடவையில் பளிச் என்ற நிறத்துடன் கம்பீரமான அந்த உருவத்தை வேறு எப்படி சொல்வது...?

அவரை பார்த்த கண்கள் இமைக்க மறந்தன. அப்போது எனது மூத்த மகளுக்கு வயது 2. அவளை கணவர் சுந்தர் கையில் வைத்து இருந்தார். இரண்டாவது மகள் வயிற்றில் இருந்தாள்.

என் முன்னே வந்து நின்ற ஜெயலலிதாவை பார்த்ததும் முந்தைய நாள் வீட்டில் நான் பேசியதெல்லாம் மறந்து போனது. நானா... காலில் விழுவதா...? அதுதான் என் அகராதியிலேயே கிடையாதே...! என்றெல்லாம் வீராப்பாய் பேசினேன். அதெல்லாம் அந்த ஒரு நிமிடத்தில் காணாமல் போனது. சாஷ்டாங்கமாக அவரது காலில் விழுந்து வணங்கினேன்.

அதன் பிறகு அவர் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம். எனது குழந்தையை தனது மடியில் வாங்கி வைத்து ஜெயலலிதா கொஞ்சினார். ஆனால் நான் அந்த உலகத்திலேயே இல்லை. அவரது தோற்றம், அழகிய நிறம், முகத்தில் தெரிந்த தேஜஸ் எல்லாமுமாய் என்னை கட்டிப்போட்டு இருந்தது. அதையே பார்த்தும், நினைத்தும் வியந்து கொண்டிருந்தேன்.

என்னை அந்த சூழலில் இருந்து விடுவித்ததும் அவர்தான். அதாவது ஜாக்பாட் நிகழ்ச்சியை நான் நடத்திக் கொண்டு இருந்தேன். கர்ப்பிணிகளுக்கே உண்டான எனது தோற்றத்தை கவனித்த அவர், ‘‘என்னம்மா... வயிறு பெரிதாக ஆகிவிட்டது. இந்த சூழ்நிலையில் உன்னால் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த முடியுமா? பிரேக் வேண்டுமென்றால் எடுத்துக் கொள். டெலிவரிக்கு பிறகு தொடரலாம்’’ என்றார்.

அதற்கு நான், ‘‘வேண்டாம்மா... சமாளித்து விடுவேன்’’ என்றேன். உடனே அவர், ‘‘எதற்கும் தயங்காதே. லீவு வேண்டுமானால் எடுத்துக் கொள்’’ என்றார்.

அதன் பிறகு பெரியவளை எந்த ஸ்கூலில் சேர்க்க திட்டமிட்டுள்ளீர்கள் என்று கேட்டார். நான் இன்னும் அதைப் பற்றி முடிவு செய்யவில்லை என்றேன். அதை கேட்டதும், ‘‘நல்ல ஸ்கூலில் குழந்தையை கொண்டு சேர்த்துவிடு. அப்போதுதான் நன்றாக படிப்பாள். அவளது எதிர்காலமும் நன்றாக இருக்கும்’’ என்றார்.

‘‘சர்ச் பார்க் பள்ளியில் சேர்ப்பதற்கு பார்’’ என்றார். ஆனால் அங்கெல்லாம் அட்மி‌ஷன் தர மாட்டார்கள் என்று நான் சொன்னேன்.

அதை கேட்டதும், ‘‘நான் சொன்னால் தருவார்கள்’’ என்றார் அவர். ஆனால் நானோ அவரை பார்த்து மயங்கிய நிலையில் இருந்ததால் அவர் ஒரு முதல்- அமைச்சர் என்பதை மறந்து அவர் சொன்னாலும் அட்மி‌ஷன் தரமாட்டார்கள் என்பது போல் பேசினேன்.

அவருக்கு புரிந்துவிட்டது. இவள் தன் நிலையில் இல்லை என்று...

உடனே அவரே நான் முதல்- அமைச்சர் அல்லவா! எனவே நான் சொன்னால் சீட் கிடைக்கும் என்றார். அப்போதுதான் நானே சுயநினைவுக்கு வந்தேன்.

அய்யய்யோ... அவர் சி.எம். என்பதைக் கூட மறந்துவிட்டோமே... என்று எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. ‘‘சாரிம்மா... ஏதோ ஒரு சிந்தனையில் சி.எம்.அருகில் இருக்கிறேன் என்பதை மறந்துவிட்டேன்’’ என்றேன்.

உடனே அவர் சிரித்துக் கொண்டு என் தோளில் மென்மையாக தட்டிக் கொடுத்தார். என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் என்னிடம் கேள் என்றார்.

இப்படியாக போயஸ் கார்டனில் நடந்த சந்திப்பு மறக்க முடியாத இனிய அனுபவமாக என்னுள் இன்றும் அழியாமல் இருக்கிறது.

ஜெயலலிதாவை அவரது கட்சிக்காரர்கள் ‘சிங்கப்பெண்’ என்கிறார்கள். அது நூற்றுக்கு நூறு என்னைப் பொறுத்தவரை உண்மைதான். அவர் சிங்க நிகர் பெண் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏனெனில் நான் ஏன் காலில் விழ வேண்டும்? என்று முதல் நாள் வீராப்புடன் சொல்லிக் கொண்டு இருந்த என்னை, அவரது ஆளுமைதான் என்னையும் மறந்து காலில் விழ வைத்தது. அவரது தோற்றம் எதிரில் நிற்பவர்களை நிச்சயமாக அப்படித்தான் விழ வைக்கும்.

அவர் உடல் நலம் இல்லாமல் இருந்த போது ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்து வந்தேன். அவரது திடீர் மரணத்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவரை சந்தித்தது, அவருடன் உரையாடியது, இன்றும் பசுமை மாறாத நினைவுகளாக என் மனதில் நிழலாடிக் கொண்டு இருக்கிறது.

அவரை சந்தித்ததன் மூலம் ஒருவரைப் பற்றிய நமது கண்ணோட்டமும், சிந்தனையும் நேரில் பார்ப்பதற்கு முன்பு ஒருமாதிரி இருக்கும். ஆனால் நேரில் சந்தித்த பின்பு தான் அவர்களது அணுகு முறையும், அவர்களின் இயல்பான குணமும் தெரியும் என்பதை புரிந்து கொண்டேன்.

அடுத்த வாரம் இன்னொரு முக்கியமான தலைவருடன் ஏற்பட்ட சந்திப்பு, அதை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் பிரவேசம் பற்றிய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருவேன்...

ttk200@gmail.com