சிறப்புக் கட்டுரைகள்

தெளிவான சிந்தனையே நலம் தரும்!

தெளிவான சிந்தனை வேண்டுமெனில் ஒழுக்கமான வாழ்க்கை, ஒழுக்கமான சிந்தனை தேவை.

மாலை மலர்

தெளிவான சிந்தனை என்றால் என்ன? உணர்ச்சிகளை விட நிதானத்தை முன்னிறுத்துவதே தெளிவான சிந்தனை ஆகும்.

* எதற்கும் உடனடி எதிர்வினையாக பதில் கூறக்கூடாது. ஆராய்ந்து பதில் சொல்வது அவசியம்.

* மனஅழுத்தம், மனச்சோர்வு, கவலை இருக்கும் போது எதுவும் பேசவும் வேண்டாம், முடிவுகளை எடுக்கவும் வேண்டாம். ஏனெனில் இரண்டும் தவறாகவே இருக்கும்.

உங்கள் சிந்தனையை எது பாதிக்கின்றது. என்பதனை முதலில் கவனிக்க வேண்டும்.

உண்மை என்பது வேறு. உங்கள் கருத்து என்பது வேறு. இரண்டினையும் பிரித்துப் பார்க்கத் தெரிய வேண்டும்.

* தெளிவான சிந்தனைக்கு நல்ல அறிவு வேண்டும். அந்த அறிவு கொண்டு தவறுகளை தவிர்த்தலும் வேண்டும்.

* கோபமோ, மகிழ்ச்சியோ, உணர்ச்சி அதிகரித்தால் அப்போது எந்த தீர்மானத்தினையும் எடுக்காதீர்கள். முடிவுகளை தள்ளிப் போடுங்கள். வாக்குறுதிகளை இந்நேரங்களில் அள்ளி வீசாதீர்கள்.

* ஒரு விஷயத்தினை, செய்தியினை ஒரு கோணத்தில், ஒரு பார்வையில் பார்க்காதீர்கள். பல கோணங்களில் பார்த்தாலே தெளிவு பிறக்கும்.

* தெளிவான சிந்தனை வேண்டுமெனில் ஒழுக்கமான வாழ்க்கை, ஒழுக்கமான சிந்தனை தேவை.

* செயல்முறைகளின் மீது கவனம் செலுத்த வேண்டும். முடிவுகளை மட்டுமே மனதில் கொண்டு செயல்பட்டால் செயல் முறைகள் தவறாகவே இருக்கும். ஒழுக்கம் இருக்காது.

* கோபம் சிந்தனையை மங்கச் செய்கின்றது.

* பயம் முடிவுகளை சுருக்குகின்றது.

* பேராசை நிதானத்தினை அழிக்கின்றது.

* அவசரம் பல நேரங்களில் தவறான வழியைத் தேர்வு செய்கின்றது.

* உள் அமைதியே தெளிவான முடிவுகளுக்கு அடிப்படை.

* எதையும் உடனே நம்ப வேண்டாம். தீர ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.

* எதிர்மறை உணர்வுகளை உடனடியாக தள்ளி வைத்து விடவேண்டும்.

* எது உங்களை பாதிக்கின்றது. அந்த உணர்ச்சிகளை எழுதிப் பாருங்கள்.

* தியானம் சிந்தனையை நிலைப்படுத்தும்.

* முறையான தூக்கம் இல்லாவிட்டால் தீர்மானங்களை முறையாய் எடுக்க முடியாது.

* நம்முடைய முன் அனுபவங்கள் நம் சிந்தனையை கட்டுப்படுத்தும்.

* ‘இதுதான்’ என உறுதிப்பட பேசும் மனப்பாங்கு தவறை உருவாக்கலாம்.

* கூட்டத்தை பின்பற்றி தலையாட்ட வேண்டாம். சொந்தமாக யோசியுங்கள்.

* நம்முடைய கருத்தாக இருந்தாலும் அதனை சோதனைக்குட்படுத்த வேண்டும்.

* எதிர்மறை கருத்துகளையும் காது கொடுத்து கேட்கும் குணம் வேண்டும்.

* ‘நான் சொன்னது தவறாக இருக்கலாம்’ என்ற மனநிலையும் அவசியமே.

* நேற்று கிடைத்த வெற்றி நாளைய வெற்றிக்கு உத்தரவாதம் அல்ல.

* மிகுந்த நம்பிக்கை ஆபத்தானது.

* சிக்கலான விஷயங்களில் எளிய தீர்வு என்பது சற்று கடினமே.

* தன்னம்பிக்கை இருக்கலாம். அகம்பாவம் இருக்கக் கூடாது.

* ஒவ்வொரு முடிவுகளுக்கும் விளைவுகள் உண்டு.

* குறுகிய கால லாபத்தினை பார்க்கக் கூடாது. அது நீண்ட கால இழப்பினை ஏற்படுத்தலாம்.

* சரியான முடிவினை மன நிம்மதியோடு ஏற்கலாம். தவறான முடிவினை ஏற்க குறுக்கு புத்திதான் வேலை செய்யும்.

* ஆராயுங்கள். மனம் போன போக்கில் யூகிக்காதீர்கள்.

* செயல் முறை சரியாக இருந்தால் முடிவும் சரியாகத்தான் இருக்கும்.

* நமது எல்லைகளை நாம் அறிய வேண்டும்.

* தேவையற்ற அபாயங்களை தவிர்க்க வேண்டும்.

* சூழல் நமது பழக்கங்களை உருவாக்கலாம்.

* நல்ல சூழல் நல்ல சிந்தனைகளை உருவாக்கும்.

* தவறான நண்பர்கள் தவறான முடிவுகளை தூண்டுவார்கள்.

கமலி ஸ்ரீபால்

* ரொம்பவும் ஊர் அக்கப் போர்களை செல்போனில் கேட்டுக் கொண்டே இருப்பது மன அழுத்தத்தினை உண்டாகும்.

* ஊடகங்களை அதிகம் பார்ப்பது கவனச் சிதறலை உருவாக்கும்.

* நேரம் பொன்னானது. மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

* இலக்கு என்ற ஒன்று அவசியம். இல்லையெனில் வாழ்க்கை திசை தெரியாமல் போகும்.

* ஒவ்வொருவருக்கும் ஒரு வழிகாட்டி தேவை. குறிப்பாக இளம் வயதினருக்கு அவசியம் வழிகாட்டி தேவை.

* நல்ல வழிகாட்டி சிந்தனையைத் தூண்டுவார்.

* நம்மை நாமே அடிக்கடி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

* வெற்றிக்கு அடிப்படையே ஒழுக்கம்தான்.

* தினமும் புதிதாக ஒன்றினை கற்றுக் கொள்ள வேண்டும்.

* அன்றாடம் படிக்க வேண்டும். அது சிந்தனையை விரிவாக்கும்.

* கேள்வி கேட்டு கற்றுக் கொள்ளுங்கள்.

* சிந்திக்க வேண்டுமெனில் அமைதியான நேரம் தேவை.

* குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* பொறுமை அவசியம்.

* தொலை நோக்கு பார்வை அவசியம்.

* சிறிய முன்னேற்றமும் அவசியமே.

* சீரான உணவு, உறக்கம் அவசியம்.

* கேட்பது பேசுவதை விட முக்கியம்.

* கருத்து வேறுபாடு பகையே அல்ல.

* உண்மையை மென்மையாகச் சொல்லுங்கள்.

* உள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

* எளிமையே தெளிவு.

* நிதானம் பல சிக்கல்களைத் தீர்க்கும்.

* தெளிவான சிந்தனைதான் உயர்ந்த அறிவு.

பார்வைத்திறன்: பார்வைத் திறன் குறைபாடு பல காரணங்களால் ஏற்படுகின்றது. வயது மாற்றம், அதிக நேரம் திரை பயன்படுத்துதல். ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு போன்ற நோய்கள் கண்சோர்வு, பார்வை பாதிப்பு ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் ஆகின்றன. இயற்கை முறைகளின் மூலம் கண் ஆரோக்கியத்தினை எப்படி காப்பது, மேம்படுத்துவது என்பதனைப் பார்ப்போம்.

சரியான உணவு முறை: கண் நலத்திற்கு முக்கியமான சத்துக்கள் கொண்டது வைட்டமின் ஏ, காரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, முருங்கை கீரை, பாலை கீரை ஆகியவை ரெட்டினாலின், விழித்திரை செயல்பாட்டிற்கு அவசியம். இது இரவு பார்வை குறைபாட்டினைத் தவிர்க்கும்.

லூட்டின் மாறும் ஸீஆக்சாந்தின் ஆகிய சத்துக்கள் பச்சை கீரை, மக்கா சோளம் இவற்றில் உள்ளன. இவை மாக்குலர் பாதுகாப்பிற்கு உதவும். வயது சார்ந்த மருலா சேதத்தினைத் தவிர்க்கும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள். வால்நட், ஆலிவ் எண்ணை, ஆளி விதை, சியா விதை ஆகியவை கண் உலர்வினை தவிர்க்கும். ஆரஞ்சு, நெல்லிக்காய், பாதாம் இவற்றில் உள்ள வைட்டமின் சி, ஏ சத்துக்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் செயல்பாட்டினை ெகாண்டவை. கண்களுக்கு மிகச் சிறந்தது.

கண் பயிற்சிகள்: 20 20 20 விதியினை பின்பற்றுங்கள். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தூரத்தில் உள்ள பொருளை 20 வினாடிகள் உற்றுப் பாருங்கள். இது திரை பயன்பாட்டால் ஏற்படும் கண் சோர்வை குறைக்கும்.

கைகளால் கண்களுக்கு ஓய்வு: இரு கைகளையும் சற்று தேய்த்து கண்களை பொத்தினால் போல வைக்கவும். 1,2 நிமிடங்கள் இவ்வாறு செய்யலாம். கண்களின் தளர்ச்சி நீங்கும்.

அருகில் உள்ள பொருளை 10 வினாடிகள் பாருங்கள். பின்னர் தூரத்தில் உள்ள பொருளை 10 வினாடிகள் பாருங்கள். இந்த பயிற்சி கண் தசைகளை வலுப்படுத்தும் என குறிப்பிடுகின்றனர்.

போதிய தூக்கம்: 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் கண்ணுக்கு ஓய்வு தரும். கண் உலர்வினைக் குறைக்கும்.

திரை நேர கட்டுப்பாடு: செல்போன், கம்ப்யூட்டர் இவற்றை பயன்படுத்தும் நேரத்தினை குறைக்க வேண்டும். நீல நிற பில்டர் பயன்படுத்தலாம். அறையில் ஒளி சரியாக இருக்க வேண்டும்.

கண் பாதுகாப்பு: வெயிலில் பாதுகாப்பு கண்ணாடி அணிய வேண்டும். தூசு மிகுந்த சூழலில் பாதுகாப்பு கண்ணாடி அணிய வேண்டும். யோகா முறையில் ஒரு நிலையான பொருளை கண் இமைக்காமல் சில நொடிகள் பார்க்கச் சொல்கின்றனர். கண் மருத்துவர் ஆலோசனை பெற்று இதனை செய்யவும்.

நாடி சக்தி பிராணயாமம் உதவும். தினமும் 2,3 லிட்டர் வரை தண்ணீர் பருகவும். மேற்குறிய அனைத்தும் கண் பிரச்சினைக்குத் தீர்வு கிடையாது. முறையான மருத்துவர் பரிசோதனையுடன் அவரது ஆலோசனை பெற்று கண் ஆரோக்கியத்தினை கூட்டிக் கொள்ளலாம்.

நீரிழிவு உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் மற்றும் ஏதேனும் கண் பாதிப்பு உடையவர்கள் தொடர் மருத்துவ பரிசோதனை பெறுவது அவசியம். திடீர் பார்வை குறைவு, வலி, ஒரு மின்னல் பாதிப்பு போன்றவை உடனடி மருத்துவ கவனம் பெற வேண்டியவை. கிட்டப் பார்வை, தூரப்பார்வை கோளாறுகளை காலம் தாழ்த்தாது கவனியுங்கள்.

மன அழுத்தம், சோர்வு, தூக்கமின்மை, அதிக காபி, டீ, மது, ஒவ்வாமை இவையும் கண்பாதிப்பு, கண் துடிப்பு போன்றவற்றினை ஏற்படுத்தும் என்பதனையும் அறிவோம்.