ராகு கேது 
சிறப்புக் கட்டுரைகள்

ஜாதகத்தில் ராகு கேது செயல்படும் விதம்

ஐம்புலன்களை அடக்க பாடம் கற்பிப்பதே ராகு பகவான்.

நவகிரகங்களில் மிகவும் வலிமையானவர் ராகு. ஒளி கிரகங்களான சூரிய, சந்திரர்களை தன் பிடியில் சிக்க வைத்து செயலிழக்க செய்யும் வலிமை மிக்கவர்.

நவகிரகங்களின் கட்டுப்பாட்டில்தான் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கையும் உள்ளது. இதில் உருவம் உள்ள 7 கிரகங்களைக் காட்டிலும் உருவமற்ற 2 நிழல் கிரகங்களாகிய ராகுவும், கேதுவே மனித வாழ்வை தீர்மானிக்கின்றன. கர்மக்காரகன் நீதிமான் சனி என்றால் சனி பகவானின் பிரதிநிதிகள் ராகு கேதுக்களாகும். பூமிக்கு வரும் மற்ற கிரகங்களின் கதிர் வீச்சுகளையும் தடுக்கும் ஆற்றலை பெற்ற ராகு கேதுக்கள். ஒரு ஆன்மா பல்வேறு பிறவிகளில் செய்த வினைப் பதிவுகளை சேமித்து வைக்கும் பெட்டகமாக விளங்குகிறார்கள். அவரவரின் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நன்மை தீமைகளை அனுபவிக்க செய்வதும் இவர்கள் தான். ஒரு ஜாதகத்தில் இவர்கள் நிற்கும் தன்மையை கொண்டு ஒரு ஜாதகத்தில் தோஷ பலன்கள் வீரியமானதா? இல்லையா? என்பதை முடிவு செய்யலாம். மேலும் ஒரு ஜாதகரின் மரபு வழி செய்திகளை செல்களின் மூலம் கொண்டு வருவதும் செயலாக்கம் செய்வதும் இவர்களே. அதனால் தான் ஜோதிடத்தில் தந்தை வழி பாட்டன் பாட்டியை ராகுவாகவும் தாய்வழிப் பாட்டன் பாட்டியை கேதுவாகவும் கூறுகிறார்கள்.

ராகு

நவகிரகங்களில் மிகவும் வலிமையானவர் ராகு. ஒளி கிரகங்களான சூரிய, சந்திரர்களை தன் பிடியில் சிக்க வைத்து செயலிழக்க செய்யும் வலிமை மிக்கவர். கலியுகத்தில் மிகவும் வலுவாக செயல்படும் கிரகம். மனித தலையும் பாம்பின் உடலும் கொண்டவர். பாதி மனிதன் பாதி மிருகம். மெய், வாய், கண், மூக்கு, காது என்ற சிந்தனை உறுப்புகள் மனித உடலின் தலைப் பகுதியில் உள்ளன.

ராகுவிற்கு மனித தலை ஐம்புலன்களை இயக்கி புறச் சிந்தனைகளை உருவாக்கி லவுகீக உலகோடு இணைக்க வைப்பதே ராகுவின் வேலை. லவுகீக உலகோடு இணையும் மனிதனே தவறு செய்வான். ஐம்புலன்களையும் அடக்கினால் மட்டுமே அகச் சிந்தனைகள் உருவாகும். ஐம்புலன்களை அடக்க பாடம் கற்பிப்பதே ராகு பகவான்.

பயோடேட்டா

ராகுவின் பிற பெயர்கள்:

நஞ்சு, கரும்பாம்பு, மதிப்பகை

நிறம் - கருப்பு

தேவதை - பத்திரகாளி

பிரத்யதி தேவதை - சர்ப்பம்

ரத்தினம் - கோமேதம்

மலர் - மந்தாரை

குணம் - குருரன்

ஆசன வடிவம் - கொடி

சமித்து - அறுகு

திசை - தென்மேற்கு

சுவை - புளிப்பு

உலோகம் - கருங்கல்

வாகனம் - ஆடு

பிணி - பித்தம்

தானியம் - உளுந்து

ராகம்- ராமமனோஹரி

ஆட்சி - சொந்த வீடு கிடையாது

உச்சம் - விருச்சிகம்

நீசம் - ரிஷபம்

மூலத்திரிகோணம் - கும்பம்

உறுப்பு - முழங்கால்

நட்சத்திரங்கள் - திருவாதிரை, சுவாதி, சதயம்

பால் - பெண்

திசைகாலம் - 18 வருடங்கள்

கோசார காலம் - 1½ வருடம்

நட்பு - சனி, சுக்கிரன்

பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்

சமம் - புதன், குரு

உபகிரகம் - வியதீபாதன்

தலம் - திருநாகேஸ்வரம்.

உறவுகளில் இரு வகைத் தாத்தாக்களையும் குறிக்கும்.

உறுப்புகளில் தோல்

இடங்களில் பொந்துகள், குழிகள், படரும் கொடிகள், ராகுக்கு சொந்த வீடு கிடையாது. தான் இருக்கும் வீட்டையை சொந்த வீடாக எடுத்துக் கொண்டு தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனைக் கொடுப்பார். ஒரு ஜாதகத்தில் ராகு சென்ற பிறவியில் நிறைவேறாத ஆசை அல்லது அளவே இல்லாத ஆசைகளைப் பற்றி கூறுபவர்.

பாம்புகள் புற்றில் வசித்தாலும் அந்த புற்றுகள் பாம்பினால் உருவாக்கப்படுவதில்லை. கரையான் புற்று மற்றும் பொந்துகளில் வசிக்கும். அடுத்தவர் சொத்தை அபகரிப்பது மட்டுமல்லாமல் அவர்களை அழிப்பதுவுமே ராகுவின் பணியாகும். ஜாதகத்தில் கேந்திர, திரிகோணங்களில் இருக்கும் ராகுவும் சுய சாரம் பெறும் ராகுவும் திசா புத்தி காலங்களில் அதிக வலுப்பெற்று பூர்வ ஜென்ம கர்ம வினைக்கு ஏற்ற பலனை முழுமையாக அனுபவிக்கச் செய்கிறது. மறைவு ஸ்தானங்களில் உச்சம் பெறாத ராகு விபரீத ராஜ யோகத்தையும் தரும். அதே நேரத்தில் அதிக கிரகங்கள் ராகு சாரம் பெறும் போதும், கிரகண காலத்தில் பிறந்து இருந்தாலும் ஜாதகரை மீள முடியா துயரத்தில் ஆழ்த்துகிறது. நயவஞ்சகர்களுடன் பழகும் நிலை, மத மாற்றுவது, அந்திய நாட்டிற்கு சென்று பிழைக்க வேண்டிய சூழ்நிலை, சிறை தண்டனை, விஷம் அருந்த செய்தல், கூட்டுமரணம், திடீர் ஏற்றம், திடீர் சரிவு, விதவையுடன் தொடர்பு, மாந்திரீகம், பிறறை கெடுத்தல், அன்னிய மொழி பேசுதல், குஷ்டம், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம் , விஷக்கடி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார். அசுப கிரக தசா புத்தி, அந்தர காலங்களில் ஏற்ற, இறக்கங்கள் மிகுதியாக இருக்கும்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

பரிகாரம்

கும்பகோணம் திருநாகேஸ்வரம் அல்லது அய்யாவாடி பிருத்தியங்கரா தேவி வழிபாடு நல்ல மாற்றம் தெரியும். துர்க்கை, காளி, வழிபாட்டால் சிறப்பான பலன்களை பெற முடியும். வளரும் புற்றிற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். கால பைரவரை வழிபட வேண்டும். பஞ்சமி திதியில் கருட வழிபாடு செய்வதும் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு நன்மையைத் தரும்.

கேது

கேது ஒரு நிழல் கிரகம். உருவம் இல்லாமல் நிழலாக நின்று செயல்படுவதால் உடலில் சூட்சமமாக நின்று செயல்படும் குண்டலினி சக்திக்கு ஒப்பிடலாம். குண்டலினி சக்தியைப் பாம்பாக உருவகப்படுத்துகிறார்கள்.

இந்து மதத்தில் பாம்பை வணங்குகிறார்கள். பல இடங்களில் கடவுளின் சிலையுடன் பாம்பு இருப்பதைப் பார்க்கிறோம். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது. ஒரு பாம்பு அசையாமல் இருக்கும் போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும் போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப் பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் புரியும். அதேபோல் லவுகீகம் என்னும் மாயையில் சிக்கி அலைபாயும் ஆன்மாவை அடக்கி முக்தி அடையச் செய்பவர் கேது. முக்தியை ஆன்மா நாடும் வரை அனுபவப் பாடத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருப்பவர் கேது. ஆன்மாவின் முக்திக்கு உதவுபவர் கேது. தடையில்லாத குண்டலினி சக்தி ஆன்மாவுடன் ஒரு முறை தொடர்பு கொண்டுவிட்டால், இந்த உயிர் எப்படி செல்ல வேண்டுமோ அதே வழியில் ஆன்மா செல்லும்.

கேதுவின் பிற பெயர்கள்

செம்பாம்பு, கதிர் பகை, சிகி,ஞானி

நிறம் - சிவப்பு

தேவதை - இந்திரன், சித்ரகுப்தன்

பிரத்யதி தேவதை - நான்முகன்

ரத்தினம் - வைடுரியம்

மலர் - செவ்வல்லி

குணம் - குருரன்

ஆசன வடிவம் - முச்சில்

தேசம் - அந்தர்வேதி

சமித்து - தர்பை

திசை - வடமேற்கு

சுவை - புளிப்பு

ராகம்- ஷண்முகப்ரியா

உலோகம் - துருக்கல்

வாகனம் - சிங்கம்

பிணி - பித்தம்

தானியம் - கொள்

காரகன் - பாட்டி, ஞானம், மோட்சம்

ஆட்சி - இல்லை

உச்சம் - விருச்சிகம்

நீசம் - ரிஷபம்

மூலத்திரிகோணம் - மீனம்

நட்சத்திரங்கள் - அசுவினி, மகம், மூலம்

பால் - அலி

திசை காலம் - 7 வருடங்கள்

கோசார காலம் - 1½ வருடம்

நட்பு - சனி, சுக்கிரன்

பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்

சமம் - புதன், குரு

உபகிரகம் - தூமகேது

தலம் - கீழ்பெரும் பள்ளம்.

உறுப்புகளில் சிக்கலான நரம்பு மண்டலம்

உறவுகளில் இரு வகைப்பாட்டிகளைக் குறிக்கும். இடங்களில் வழக்காடும் இடம், தையல் கடை, நெசவு செய்யுமிடம் கேதுவுக்கு சொந்த வீடு கிடையாது. தான் இருக்கும் வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனைக் கொடுக்கும். பாம்பின் தலைப் பகுதியை ராகுவாகவும் வால் பகுதியை கேதுவாகவும் உருவகப்படுத்தி இருக்கிறார்கள். எனவே வால் போன்று தொங்கும் எல்லா பொருட்களும் கேதுவாகும்.

தலைமுடி, கயிறு, நூல் போன்றவை பாம்பின் வால் போன்ற தோற்றமுடியவை. தலைமுடி, கயிறு, நூல் இவற்றில் சிக்கல் விழுந்தால் நீக்குவது கடினம். துண்டு துண்டாக வெட்டித்தான் எடுக்க வேண்டும். மனித வாழ்வில் ஏற்படும் தடை, தாமதம், வம்பு, வழக்கு பிரிவினையை ஏற்படுத்துபவர் கேது.

கேது

பாம்பு தன் பிடியில் உள்ள பொருளை வாலினால் சுற்றி இயங்க விடாமல் கட்டிப்போடும். அதே போல் தன் பிடியில் உள்ள மனிதனை இயங்க விடாமல் கட்டிப் போடுபவர் கேது. ஒல்லியான குள்ளமான தோற்றத்துடன் இருப்பவர்களும் மூளை பலம் மிக்கவர்களும் ஜாதகத்தில் கேது பலமாக இருப்பார்.எப்போதும் உஷாராக எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றுவார்கள். கேது சுபத்தன்மை பெற்றால் ஞானம், மோட்சம், புண்ணிய தலங்கள் செல்லுதல், மகான்களின் தரிசனம் கிட்டும்.

கேது பலம் இழந்தால் எதிர்மறை எண்ணங்கள்,கெட்ட சகவாசம், கீழ்த்தரமான சேர்க்கை, கடுமையான தடங்கல், மாந்திரீக நாட்டம், பைத்தியம் பிடித்தல், கொலை, ஆணவம், அகங்காரம், சிறைப்படல் ஆகிய பலன்கள் மிகும்.

பரிகாரம்

கேது வாலை குறிப்பதால் தெய்வங்களில் விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலன் தரும். அத்துடன் விழுதுள்ள ஆலமரம் கேதுவின் அம்சம். எனவே ஆலமரத்தை வழிபட வேண்டும். மேலும் சடைமுடியும், தாடியும் வைத்து இருக்கும் சாது, சன்னியாசிகள் வழிபாடு சிறப்பைத் தரும். ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சென்று வழிபட இன்னல் தீரும்.

SCROLL FOR NEXT