இறைவன் மனிதனுக்கு 2 காதுகளையும், ஒரு வாயையும் கொடுத்திருக்கின்றான். அதாவது பேசுதை விட அதிகம் கேட்க வேண்டும் என்பதற்கான இயற்கையின் பாடமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்றைய உலகில் பலர் கேட்பதை விட பேசுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பேச்சு மனிதனை உயர்த்தவும் முடியும். தாழ்த்தவும் முடியும். ஒரு நல்ல வார்த்தை வாழ்க்கையை மாற்றலாம். அதே நேரத்தில் ஒரு தவறான வார்த்தை பல வருட உறவுகளை அழிக்கக் கூடும். ‘நாவினால் சுட்ட வடு ஆறாது’ எனப்படுகின்றது.
* அதிகம் பேசுபவர்கள் பல நேரங்களில் யோசிக்காமல் பேசிவிடுவர். இதனால் உறவுகள் பாதிக்கப்படுகின்றன. ஒரு நிமிட கோபப் பேச்சு பல வருட அன்பை அழித்து விடுகின்றது. அதனால் தான் திருவள்ளுவர் நாவின் கட்டுப்பாடு மிகப்பெரிய ஒழுக்கம் என்கின்றார்.
* அதிகம் பேசும் மனிதனால் ரகசியங்களை பாதுகாக்க முடியாது. தேவையற்ற இடத்தில் தேவையற்றவைகளைப் பேசுவார்கள். அமைதியாக இருக்கும் போதே திட்டங்களில் வெற்றி பெற முடியும்.
* எப்போதும் தன்னைப் பற்றியே பேசுபவர்களை மக்கள் விரும்புவதில்லை.
* அதிகம் பேசும் போது தவறான புரிதல்கள் உருவாகும்.
* அதிகம் பேசினால் மதிப்பு குறையும்.
* கோபத்தின் போது பேசுவது பேராபத்து. தவறான வார்த்தைகளை கொட்டி விட்டால் திரும்பப் பெற முடியாது.
* அதிகமாக பேசினால் மனது வெளிப்புற உலகில் அலைக்கழிக்கப்படுகின்றது. ஆன்மீக பாதையில் செல்லும் பலரும் மவுனத்தினை கடை பிடித்தனர்.
* ரமண மகரிஷி கூறியது ‘மவுனமே உயர்ந்த போதனை’ என்பதாகும்.
* பல சமூகப் பிரச்சினைகளின் வேரில் கட்டுப்பாடற்ற பேச்சு உள்ளது.
* மனசக்தி, மன ஆற்றல், வாக்கு சக்தி குறைகின்றது.
* சூரியன் பேசுவதில்லை. நிலவு பேசுவதில்லை. மரங்கள் பேசுவதில்லை. நதிகள் பேசுவதில்லை. ஆனால் இவையெல்லாம் தன் கடமையை சிறப்பாகச் செய்கின்றன. உலகில் மிகப்பெரிய நன்மைகளை செய்பவை எல்லாம் அமைதியாகவே இருக்கின்றன. மனிதன் மட்டும்தான் தன் தேவையற்ற பேச்சால் தன் சக்தியை இழக்கின்றான்.
‘பேச்சு ஒரு வரம். ஆனால் கட்டுப்பாடற்ற பேச்சு ஒரு சாபம். பேசுவதற்கு முன் 3 கேள்விகளை நாம் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும்.
* இது உண்மையா * இது அவசியமானதா? * இது பயனுள்ளதா?
இந்த மூன்றிக்கும் ‘ஆம்’ என்றால் பேசலாம். இல்லையெனில் மவுனம் சிறந்தது.
ஒரு மனிதனின் அறிவை அவன் பேசுவதால் அறியலாம். அவன் ஞானத்தை அவனது மவுனத்தால் அறியலாம்.
ஆகவே வாழ்க்கையில் வெற்றி, அமைதி, நல்லுறவு, ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்புபவர்கள் நாவை கட்டுப்படுத்தி தேவையான இடத்தில் மட்டுமே பேசும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
‘பேசுவது ஒரு கலை’ என்றால் மவுனமாக இருப்பது ஒரு பேரறிவு என்பர். மனித வாழ்க்கையில் வார்த்தைகளுக்கு மிகுந்த சக்தி உண்டு. ஆனால் வார்த்தைகளை விட வலிமையானது மவுனம். பல சமயங்களில் நாம் சொல்ல முடியாததை மவுனம் சொல்லி விடுகின்றது. மவுனம் என்பது வெறும் பேசாமை அல்ல அது மனதின் அமைதி. அறிவின் ஆழம். ஆன்மாவின் மொழி.
இன்றைய உலகில் அனைவரும் பேசுகிறார்கள். சமூக ஊடகங்கள், தொலைக் காட்சிகள், கைபேசிகள் என எங்கும் சத்தம் நிறைந்திருக்கின்றது. ஆனால் அமைதியாக இருப்பவர்களே தங்களை உண்மையாக அறிந்து கொள்வார்கள். மவுனம் ஒரு மனிதனை உள்ளிருந்து மாற்றக் கூடிய ஆற்றல் கொண்டது.
மவுனம் ஒரு ஆன்மீக மொழி. இந்திய மரபில் மவுனத்திற்கு மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது. பல மகான்கள் மவுனத்தை இறைவனை அடையும் பாதையாகக் கருதினார்கள்.
இந்து சமயத்தில் ஞானத்தின் வடிவமாக விளங்கும் தட்சிணாமூர்த்தி பகவான் மவுனத்தின் மூலம் ஞானத்தினை போதித்தார் என புராணங்கள் கூறுகின்றன.
ரமண மகிரிஷி தனது வாழ்வில் மவுனத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். அவரிடம் பல கேள்விகள் கேட்ட போது சில நேரங்களில் அவர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாய் அமர்ந்திருப்பார். ஆனால் அந்த மவுனமே சந்தேகங்களை தீர்த்ததாக பலரும் கூறியுள்ளனர்.
ரமணர் கூறிய ஒரு முக்கிய கருத்து
கவுதம புத்தர் சில கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அமர்ந்திருப்பார். காரணம் ‘சில உண்மைகள் வார்த்தைகளால் விளக்க முடியாதவை’ சித்தர்கள் மவுனத்தை உயர்ந்த யோக நிலையாகக் கருதினர். பட்டினத்தார் உலக வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து இறுதியில் அமைதியான ஆன்மீக வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். அவருடைய பாடல்களில் உலக சத்தங்களைக் கடந்து உள்ளார். அமைதியை அடைய வேண்டும் என்ற கருத்து அடிக்கடி வெளிப்படும்.
திருமூலர் தனது திருமந்திரத்தில் மன அமைதியும், மவுனமும் இறை உணர்வுக்கு வழி காட்டும் என்று கூறியுள்ளார்.
மவுனம் மன வலிமை தரும்.
‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்பது உண்மைதான். ஆனால் அளவுக்கு மீறியவாய் வாழ்க்கையே கெடுக்கும் என்பதும் உண்மை. மனிதனுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய வரங்களில் ஒன்று பேச்சுத்திறன். இந்த உலகில் மற்ற உயிரினங்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுவது அவன் சிந்தித்துப் பேசும் திறன் தான். எந்த வரமும் அளவோடு பயன்படுத்தாவிட்டால் அது ஆபத்தாக மாறிவிடும். அதுபோலவே பேச்சும் ஒரு சக்தி, அந்த சக்தியை அளவின்றி பயன்படுத்தும் பொழுது அது நமக்கு எதிராகவும் மாறுகின்றது.
வாழ்க்கையில் ஏற்படும் பல தோல்விகள், முறிந்த உறவுகள், இழந்த வாய்ப்புகள், உருவான பகைகள் ஆகியவற்றின் பின்னால் கட்டுப்பாடுற்ற பேச்சு மறைந்து இருக்கின்றது.
* எப்பொழுதும் பேசிக்கொண்டே இருந்தால் அவரது வார்த்தைகளுக்கு மதிப்பு குறைகின்றது.
* குடும்பங்களில் விரிசல் உண்டாகின்றது.
* ரகசியங்களை பாதுகாக்க முடியாமல் போகின்றது.
* மன அமைதி அழிகிறது.
* ஆன்மீக வளர்ச்சி தடைபடுகிறது. மனதை அமைதி படுத்தாமல் இறை உணர்வு கிடையாது.
* தவறான வாக்குறுதிகள் வாழ்க்கையை சிக்கலாக்கும்.
* உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
* கவலை அதிகரிக்கலாம்.
* மன உளைச்சல் ஏற்படலாம்.
ஆக எதற்கு இந்த அதிகப்பேச்சு? தவிர்த்து விடலாமே.
சிலவற்றினை படிக்கும் பொழுது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றும் அவ்வகையில் சில:-
ஒரு நாள் ஒரு பணக்கார தந்தை தன் மகனை ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்றார். ஒரு ஏழை குடும்பத்திற்கு மகனை அழைத்துச் சென்றார். வறுமையின் கொடிய முகத்தினை மகன் உணர வேண்டும் என்று நினைத்தார். திரும்பும் வழியில் தந்தை மகனிடம் கேட்டார்.
இந்த பயண அனுபவம் எப்படி இருந்தது...
மிக நன்றாக இருந்தது அப்பா...
ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என பார்த்தாயா?
ஆம் தந்தையே...
நீ பெற்ற அனுபவத்தினை சொல்...
மகன் சொன்னான்...
நம்மிடம் ஒரு நாய் இருக்கிறது. அவர்களிடம் 4 நாய்கள் இருக்கின்றன. நம்மிடம் மின்விளக்குகள் உள்ளன. அவர்களுக்கு நட்சத்திரங்கள் உள்ளன. நாம் உணவு வாங்குகின்றோம். அவர்கள் உணவு பயிரிடுகின்றார்கள். நாம் கதவுகளை கொண்டு பூட்டி நம்மை பாதுகாத்துக் கொள்கின்றோம். அவர்களுக்கு நண்பர்கள் இருக்கின்றார்கள். நமக்கு டி.வி. இருக்கின்றது. அவர்களுக்கு குடும்ப உறவுகள் இருக்கின்றது.
‘நன்றி தந்தையே’ நாம் எவ்வளவு ஏழை என்பதனை உணர்ந்தேன் என்றான்.
தந்தை பேச்சு இழந்து நின்றார்.
வாழ்க்கை ஒரு வரம் தான். இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும். உண்மையும், நேர்மையும் மனிதனின் உயர்ந்த பண்புகள், உடல்நலம் மனநலம் இரண்டும் வாழ்க்கையின் சொத்துகள். இயற்கையுடன் இணைவதே மகிழ்ச்சி.
வாழ்க்கை என்பது வெறும் ஆண்டுகளில் தொகுப்பு அல்ல. அது அனுபவங்கள். அதனை அழகாக பயணமாக்க வேண்டும்.
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவது அவரவர் கையில் தான் இருக்கின்றது.