சிறப்புக் கட்டுரைகள்

வளம் பெருக்கும் தீபாவளி வழிபாடு- தீபாவளி குளியலை ஏன் கங்கா ஸ்நானம் என்கிறோம் தெரியுமா?

புதிய ஆடைகளை இறைவனின் திருவடிகளில் வைத்து வணங்கி, மஞ்சள் அல்லது குங்குமம் இட்டு அணியும் வழக்கம் மிகவும் நல்லது.

கங்கை நதிக்குச் சென்று நீராடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஆனால், தீபாவளி நாளில் அதிகாலையில் வீட்டிலேயே நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுவதன் மூலம் கங்கையில் நீராடிய புண்ணியத்தைப் பெறலாம் என்பது நம்பிக்கை.

திருவிழா என்பது ஒரு சமூகத்தின் பண்பாட்டையும், நம்பிக்கையையும், வாழ்வியல் நெறிகளையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துகின்ற அழகிய பாலம். அந்த வகையில், இந்தியாவின் மிகச் சிறப்பான பண்டிகைகளில் ஒன்றாகத் திகழ்வது தீபாவளி.

அதிகாலையில் ஒலிக்கும் மங்கலப் பாடல்கள், எண்ணெய்க் குளியல், புத்தாடைகளின் மணம், அகல் விளக்குகளின் ஒளி, இனிப்புகளின் சுவை, உறவுகளின் அன்பு என மகிழ்ச்சியை அள்ளித் தரும் திருநாள்.

தீபம் என்றால் விளக்கு

ஆவளி என்றால் வரிசை. வரிசையாக ஏற்றப்படும் விளக்குகளின் திருவிழாவே தீபாவளி. இருளை அகற்றி ஒளியைப் பரப்புவது என்பதே இதன் வெளிப்படையான பொருள் என்றாலும் நம் வாழ்வில் அறியாமையை அகற்றி அறிவைத் தரக் கூடிய திருவிழா என்பதே இதன் உள்ளார்ந்த பொருளாகும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு புராணக் கதைகளுடன் இத்திருவிழா இணைத்துக் கூறப்பட்டாலும் தீபாவளியுடன் மிகவும் நெருக்கமான தொடர்புடையது நரகாசுரவதம்.

தீபாவளி

குறிப்பாகத் தென்னிந்தியாவில் தீபாவளி அதிகாலையில் எண்ணெய் நீராடுவதிலிருந்தே தொடங்குகிறது. மற்ற நாட்களில் சாதாரணமாகக் குளிக்கும் நாம், தீபாவளி அன்று மட்டும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை மிகவும் புனிதமாகக் கருதுகிறோம். அதை ‘கங்கா ஸ்நானம்’ என்றும் அழைக்கிறோம்.

ஏன் தெரியுமா? நரகாசுரனை அழித்த பின்னர், அவனது தாயான பூமாதேவி, அந்த நாளை உலக மக்கள் துயரத்துடன் நினைவு கூராமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்றும் அன்றைய அதிகாலை மங்கல நீராடலை மேற்கொள்பவர்கள் கங்கையில் நீராடிய புண்ணியத்தைப் பெற வேண்டும் என்றும் கிருஷ்ணரிடம் வேண்டியதாகவும் அந்த வேண்டுதலைக் கிருஷ்ணர் ஏற்றதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் தீபாவளி அதிகாலை நீராடல் ‘கங்கா ஸ்நானம்’ என்ற புனிதப் பெயரைப் பெற்றது.

தீபாவளி

கங்கை நதி

கங்கை நதிக்குச் சென்று நீராடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஆனால், தீபாவளி நாளில் அதிகாலையில் வீட்டிலேயே நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுவதன் மூலம் கங்கையில் நீராடிய புண்ணியத்தைப் பெறலாம் என்பது நம்பிக்கை.

தீபாவளி நாளின் அதிகாலைப் பொழுதில் நீரில் கங்காதேவியும், நல்லெண்ணெயில் மகாலட்சுமியும், சீயக்காயில் சரஸ்வதியும், புத்தாடையில் மகாவிஷ்ணுவும் எழுந்தருள்வ தாகக் கூறுகிறார்கள் நம் முன்னோர்கள்.

நரகாசுரனை வதம் செய்த பின்னர் கிருஷ்ணர் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து நீராடியதாகவும், அந்த நிகழ்வை நினைவுகூர்ந்தே இந்நீராடல் சிறப்புப் பெறு வதாகவும் மற்றொரு மரபு கூறுகிறது.

இதனால்தான் தீபாவளியன்று பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும்அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, ஒருவரையொருவர் பார்த்து, “கங்கா ஸ்நானம் ஆச்சா?”என்று அன்புடன் விசாரித்துக் கொள்கிறார்கள்.

இந்த நீராடலில் மற்றொரு அழகான குடும்பப் பண்பாடும் பொதிந்திருக்கிறது. வீட்டின் மூத்தவர்கள், குறிப்பாகத் தாய்மார்கள், குடும்ப உறுப்பினர்களின் தலையில் நல்லெண்ணெய் வைத்து நீராடச் செய்வார்கள். அந்தக் கைகளில் எண்ணெயுடன் அன்பும் அக்கறையும் ஆசீர்வாதமும் கலந்திருக்கின்றன. தலைமுறைகள் மாறினாலும் மாறாமல் தொடரும் இந்தச் சிறிய சடங்கு, குடும்ப உறவுகளின் நெருக்கத்தை உணர்த்தும் ஓர் இனிய காட்சியாகும்.

முனைவர் எம்.எஸ்.ரத்னமாலா

புத்தாடை

நீராடி முடித்ததும் புத்தாடை அணிவது அடுத்த மங்கலமான நிகழ்வாகும். புதிய ஆடைகளை இறைவனின் திருவடிகளில் வைத்து வணங்கி, மஞ்சள் அல்லது குங்குமம் இட்டு அணியும் வழக்கம் மிகவும் நல்லது. பழைய ஆடைகளை விட்டு புதிய ஆடைகளை அணிவது என்பது பழைய கசப்புகளையும் மனக்குறைகளையும் விலக்கிப் புதிய நம்பிக்கையோடும் நல்ல எண்ணங்களோடும் வாழ்வைத் தொடங்க வேண்டும் என்பதன் அடையாளமே. குழந்தைகளுக்குப் புத்தாடை அணிவித்து மகிழ்வதும், பெரியவர்களிடம் ஆசி பெறுவதும் குடும்பப் பாசத்தை மேலும் வலுப்படுத்தும்.

தீபாவளியன்று இல்லங்களில் இறைவழிபாடு என்பது மிக முக்கியமானது. அன்றைய நாளில் விநாயகர், மகாலட்சுமி, கிருஷ்ணர் மற்றும் அவரவர் குடும்ப வழிபாட்டுத் தெய்வங்களை வணங்கி விளக்கேற்ற வேண்டும். குறிப்பாக மாலையில் மகாலட்சுமி பூஜை செய்வது மிகவும் சிறப்பு. பணம், பொருள், ஆரோக்கியம், கல்வி, ஒழுக்கம், குடும்ப ஒற்றுமை, மனநிறைவு ஆகிய அனைத்தும் சேர்ந்ததே உண்மையானசெல்வம். அந்தச் செல்வங்கள்

நம் இல்லங்களில் நிலைத்திருக்க வேண்டும் என்ற வேண்டுதலே மகாலட்சுமி வழிபாட்டின் அடிப்படை.

இறைவழிபாடு

இங்ஙனம் இறைவழிபாடு செய்யும்போது இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் பலவகையான இனிப்புகளும் கார வகைகளும் படையலாகப் படைக்கப்படுகின்றன. அதிரசம், முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, அல்வா, சீடை என ஒவ்வொரு இல்லத்திலும் தயாரிக்கப்படும் பலகாரங்கள் அந்தந்தக் குடும்பத்தின் பாரம் பரியத்தையும் சமையல் மரபையும் வெளிப் படுத்தும்.

நாம் பெற்ற மகிழ்ச்சியையும் வளத்தையும் இறைவனுக்கு நன்றியுடன் சமர்ப்பித்துப் பிறருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே இப்படையலின் உள்ளார்ந்த பொருளாகும். இனிப்புகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் வழங்கி மகிழ்வதும், ஏழை எளியவர்களுக்கு உணவு, உடை வழங்குவதும் தீபாவளி கற்றுத் தரும் உயர்ந்த பண்பாடுகளாகும்.

முன்னோர்கள்

நம்மிடம் இருப்பதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும்போதுதான் கொண்டாட்டம் முழுமை பெறுகிறது. ஒருவருடைய முகத்தில் மலரும் புன்னகை, நம் இல்லத்தில் ஏற்றப்படும் ஆயிரம் விளக்குகளுக்கு இணையான ஒளியைத் தரக்கூடியது. தீபாவளிக் காலத்தில் முன்னோர் வழி பாட்டுக்கும் தனியிடம் உண்டு. நம்மை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய பெற்றோர்களுக்கு முன்பாக, நம் குடும்பத்தின் வேர்களாக வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். அவர்களுடைய உழைப்பு, தியாகம், வாழ்க்கை அனுபவம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகத்தான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே அவர்களை நினைவுகூர்ந்து நன்றி செலுத்துவது நமது பண்பாட்டின் உயரிய அடையாளமாகும்.

இதனுடன் தொடர்புடையதாக ஐப்பசி மாதத்திரயோதசி நாளில் யம தீபம் ஏற்றும் மரபு உள்ளது. யமதர்மராஜனை நினைத்து விளக்றேற்றி, எள் மற்றும் நீர் வைத்து, முன்னோர்களின் நலனுக்காகவும் குடும்பத்தின் நிம்மதிக்காகவும் பிரார்த்தனை செய்யலாம்.

முனிவர்

இதன் பின்னணியில் தீர்க்க தமஸ் என்னும் முனிவருக்குச் சநா தன முனிவர் அளித்த அறிவுரை கூறப்படுகிறது. தீர்க்கதமஸ் முனிவரின் நான்கு மகன்களும் காலப்போக்கில் ஒழுக்கம் தவறி நடந்துகொள்ளத் தொடங்கினார்களாம். அதனால் மனம் வருந்தியிருந்த முனிவரிடம் வந்த சநாதன முனிவர், முன்னோர் வழிபாட்டில் ஏற்பட்ட குறைபாடே இதற்குக் காரணம் என்று கூறி, திரயோதசி நாளில் விரதமிருந்து பிரதோஷ வேளையில் சிவபெருமானையும் நந்திதேவரையும் வழிபட்டு யமதீபம் ஏற்றுமாறு அறிவுறுத்தினாராம். அவ்வாறு வழிபட்ட பின்னரே முனிவரின் மகன்கள் நற்பண்பு பெற்று உயர்ந்த நிலையை அடைந்ததாகக் கதை கூறுகிறது.

இவ்வாறு எண்ணெய் நீராடல், புத்தாடை, இறைவழிபாடு, படையல், முன்னோர் வழிபாடு என ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான பொருளைக் கொண்டிருக்கிறது. தீபாவளி நமக்குக் கொண்டாட்டத்தோடு நன்றியுணர்வையும், குடும்பப் பாசத்தையும், பகிர்ந்துண்ணும் பண்பையும் கற்றுத்தருகிறது.

ஐப்பசி

பொதுவாக ஐப்பசி அல்லது கார்த்திகை மாதத்தில் வரும் அமாவாசையை ஒட்டிக் கொண்டாடப்படும் தீபாவளி வடஇந்தியாவில் தன்தேரஸ், நரக சதுர்த்தசி, தீபாவளி, கோவர்த்தன பூஜை, பாய் தூஜ் என ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் நரக சதுர்த்தசி நாளின் அதிகாலை நீராடலே முதன்மையான கொண்டாட்டமாக விளங்குகிறது.

இவ்வாறு மாநிலத்திற்கு மாநிலம் கொண்டாட்ட முறைகள் மாறுபட்டாலும், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது என்பதே பொதுவான பண்பாடாக இருக்கிறது.

தீபாவளித் திருநாள்

மொத்தத்தில் தீபாவளித் திருநாள் என்பது நம் வாழ்வில் இருளை அகற்றி ஒளியை ஏற்றும் அற்புதமான நாள். எனவே பொறாமை என்னும் இருளை அன்பால் அகற்றுவோம். பகைமை என்னும் இருளை மன்னிப்பால் அகற்றுவோம். அறியாமை என்னும் இருளை அறிவால் அகற்றுவோம். தன்னலம் என்னும் இருளைத் தொண்டால் அகற்றுவோம். நம்மை வாழவைத்த முன்னோர்களை நினைவுகூர்வோம். நம்முடன் வாழ்பவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுப்போம். இயன்றவரை பிறருக்கு உதவி செய்வோம்.

இந்தத் தீபாவளித் திருநாளில் நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் ஒளி நிறையட்டும். குடும்பங்களில் அமைதி நிலவட்டும். உறவுகளில் அன்பு பெருகட்டும். முன்னோர்களின் ஆசியும் இறைவனின் அருளும் அனைவருக்கும் கிடைக்கட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

SCROLL FOR NEXT