சிறப்புக் கட்டுரைகள்

ரத்தத்தில் சர்க்கரையா?- இதனை அறிவோம்!

உணவு சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குப் பிறகு 140-க்குள் இருப்பது சிறந்தது

சர்க்கரை அளவு ரத்தத்தில் பார்க்கும் போது சாப்பிட்ட பிறகு 250 இருக்கின்றது. 250 வரை இருப்பதில் தவறு இல்லை என வெளிநாட்டு கட்டுரை ஒன்றில் படித்தேன். நம்ம ஊரில்தான் ஓவராக பயமுறுத்தி விடுகின்றார்கள் என பேசினார். ஒரு பெண்மணி. அவரை பார்த்து அவர் பேசுவதினைக் கேட்ட எனக்கு சற்று வேதனையாகவே ஆகி விட்டது. இத்தகைய பேச்சினை இவர் பல இடங்களில் பேசினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமே.

இவர் எந்த கட்டுரையில் 250 சர்க்கரை அளவு சாதாரணமே என்று படித்தார் என்று தெரியவில்லை. இருப்பினும் எதனையும் முறையாக அறிந்து செய்வதே நல்லது.

* சர்க்கரை வெறும் வயிற்றில் 70 முதல் 100 வரை என்பது சாதாரணமானதாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

* வெறும் வயிற்றில் அதாவது காலை வெறும் வயிற்றில் 126 என்பது நீரிழிவு சாத்தியம் என்கின்றது.

* உணவு சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குப் பிறகு 140-க்குள் இருப்பது சிறந்தது.

* 200-க்கு மேல் என்பது அதிக அளவாகும். இந்த அளவின் அடிப்படையினை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

* மாறுபாடுகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

* எச்.பி.ஏ.சி. சர்க்கரை அளவு, சிறுநீரகம், கல்லீரல், கண் பரிசோதனை இவைகளை உடனடியாக செய்து கொள்ள வேண்டும்.

நாம் சாப்பிடும் உணவில் இருந்து உருவாகும் சக்தியை உடலின் செல்களுக்கு கொண்டு செல்ல இன்சுலின் என்ற ஹார்மோன் உதவுகின்றது. இந்த இன்சுலின் சரியாக செயல்படாத போது அல்லது குறைவாக உருவானால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கின்றது.

இதில் பிரிவு 1 என்பது

* சிறுவர்கள் * இளவயதினருக்கு அதிகம். * உடல் * இன்சுலினை உருவாக்காது. * இன்சுலின் ஊசி அவசியம்.

பிரிவு 2 என்பது

* மிகவும் பொதுவானது * உடல் இன்சுலினை சரியாகபயன்படுத்தாது. * உடல் பருமன், * உடற்பயிற்சி இல்லாமை இவை முக்கிய காரணம்.

* கர்ப்ப காலத்தில் வரும் சர்க்கரை நோய் பிறகு குறையலாம். எதிர்காலத்தில் பிரிவு 2 சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்.

* அடிக்கடி சிறுநீர் கழித்தல் * அதிக தாகம், * அதிக பசி * காரணமின்றி உடல் எடை குறைதல் * சோர்வு, * கண் மங்குதல், * காயம் ஆற தாமதம் * தோல் அரிப்பு * காலில் எரிச்சல்.

இவைகளை அலட்சியம் செய்யாதீர்கள்.

சர்க்கரைக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுபவை

* மரபியல்-குடும்பத்தில் இருந்தால் வாய்ப்பு அதிகம்.

* உடல் பருமன்- வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகமாக இருப்பது ஆபத்து.

* உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதும் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதும் தவறு.

* தவறான உணவு பழக்கம். ஜங்க் உணவு. இனிப்பு. குளிர் பானங்கள். * அதிக வெள்ளை அரிசி.

* மன அழுத்தம்-ஸ்ட்ரெஸ் ஹார்மோன் சர்க்கரையை உயர்த்தும்.

* காலை வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 70 முதல் 100 மில்லி கிராம்.

எச்.பி.ஏ.சி.-கடந்த 3 மாத சர்க்கரை சராசரியைக் காட்டும்

5.7 சதவீதத்துக்குள் இருப்பது சாதாரணம்

5.7 சதவீதம் முதல் 6.4 சதவீதம் என்பது நீரிழிவின் ஆரம்ப அறிகுறி எனலாம். உணவு கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றம் மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும்.

6.5 சதவீதத்துக்கு மேல் என்றால் நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது.

சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ளும் போது சாப்பிட்டு 2 மணி நேரம் சென்று சர்க்கரை அளவினை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து 200-க்கு மேல் சர்க்கரை இருந்தால்

* கண் பாதிப்பு * சிறுநீரக பாதிப்பு * நரம்பு பாதிப்பு * இதய நோய் * பக்கவாதம் * காலில் உணர்வு குறைதல் * காயம் ஆறாத நிலை ஏற்படும்.

* சர்க்கரை அளவினை உணவின் மூலம் கட்டுப்படுத்தும் வழிகளாக

கீரை, காய்கறிகள், சிறு தானியங்கள், குதிரை வாலி, தினை, பயிறு வகைகள் என பயன்படுத்த வேண்டும். சத்துணவு நிபுணர் ஆலோசனை நல்லது.

தவிர்க்க வேண்டியவை: வெள்ளை அரிசி, இனிப்பு, பேக்கரி பொருட்கள், துரித உணவு, புட்டியில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவை ஆகும். தினமும் 30 அல்லது 45 நிமிடம் நடை பயிற்சி. யோகா, சைக்கிளிங், மெதுவான உடற்பயிற்சி இவை இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

* மன அழுத்தம் அதிகமானால்-கார்டினால் அதிகரிக்கும். சர்க்கரை அளவு உயரும்.

ஆகவே தியானம், பிரார்த்தனை, நல்ல தூக்கம், அமைதியான மனநிலை அவசியம்.

தினசரி வழக்கங்களாக காலையில் நடைபயிற்சி, நேரத்திற்கு உணவு, 2 லிட்டர் நீர், நல்ல தூக்கம், கால்களை தினமும் பரிசோதித்தல், வேளை தவறாது மருந்து இவை அவசியம் ஆகின்றது.

* காலில் காயம் இல்லாமல் தினம் கவனிக்க வேண்டும். காலனி இல்லாமல் நடக்கக் கூடாது.

வருடம் இருமுறை கண் பரிசோதனை அவசியம். ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் இவை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

வெந்தயம், லவங்கபட்டை, பாகற்காய், நெல்லிக்காய் இவை நன்மை பயக்கும் என்றாலும் இவை மட்டுமே தீர்வு ஆகாது.

சர்க்கரை அளவு 250, மயக்கம், மூச்சுத் திணறல், மார்பு வலி, பார்வை மங்குதல், அதிக வாந்தி என ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மிக மிக சாதாரண அடிப்படை விவரங்களே இங்கு பகிரப்பட்டு உள்ளது. இவைகளை மனதில் பதிய வைத்தாலே போதும். உங்கள் உடல் நலன் உங்களுக்கே தெரியும். அதனை விட்டு தவறான கருத்துகளை நம்புவதையும், பேசுவதையும் தவிர்ப்போமே.

கமலி ஸ்ரீபால்

ஒவ்வொரு நாள் காலையும் இப்படி நினைக்க வேண்டும்.

* இந்நாளை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளும் சக்தி என்னிடம் உள்ளது.

* என் பயத்தினைவிட நான் அதிக உறுதியானவன். திறமையானவன்.

* என்னுடைய இன்றைய ஒவ்வொரு சிறிய அடியும் என் குறிக்கோளை நோக்கியே முன்னேறுகின்றது.

* நிம்மதி, மகிழ்ச்சி, நல்லவை என் வாழ்வில் ஏற்பட நான் தகுதியானவன்.

* தவறுகள் என்னை வரையறுக்காது. அதனை திருத்தி நான் முன்னேறுவேன்.

* ஏதோ நன்மை, அதிசயம் இன்று எனக்கும் நடக்கும்.

* என் சக்தியினை நான் ஆக்கப்பூர்வமான சிந்தனை, செயல்களுக்கே செலவழிப்பேன்.

* என்னை நானே ஆற்றிக் கொள்வேன். ஒவ்வொரு நாளும் மேலும் முன்னேறுவேன்.

* எதனையும் அதிக உறுதியோடு சந்திப்பேன்.

* இதனை கவனமுடன் படித்துப் பாருங்கள். இதன் பால் ஈர்க்கப்படுவீர்கள். நீங்களும் தினமும் இதனைச் சொல்லுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

இதனைப் படித்தாலே கீழ்க்கண்ட ஒழுக்கமான பழக்கங்கள் ஏற்படும்.

* தினமும் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பீர்கள். தானாகவே எழுந்திருப்பீர்கள்.

* கடினமான வேலையை முதலில் முடிப்பீர்கள்.

* நன்றி சொல்வீர்கள். தியானம் தானே வரும்.

* அதிக சுடு நீரில் குளிக்க முடியாது.

* முறையான நேரத்தில் இரவில் உறங்கச் செல்வீர்கள்.

* உடற்பயிற்சி செய்யாமல் இருக்க முடியாது.

* போன் உபயோகம் குறையும்.

* முதல் நாள் இரவே மறுநாள் வேலைகளை முடிவு செய்து எழுதுவீர்கள்.

* காபி-டீ விலகும்.

* தினம் 10 நிமிடமாவது படிப்பீர்கள்.

* ஒழுக்கமானவர்கள் தொடர்பே இருக்கும்.

கவனித்துதான் பாருங்களேன்.

வெயில் சுட்டெரிக்கின்றதா?

இது வருடா வருடம் நாம் படும் அவதி தான் இதனை தாங்கி கடக்கத்தான் வேண்டும். உணவு முறையில் மாற்றங்களின் மூலம் வெயிலின் கடுமையை கண்டிப்பாய் குறைக்கலாம். தெரிந்ததே என்றால் மறுபடியும் தூசு தட்டுவோம்.

* காலையில் எழுந்தவுடன் நீர் மோர் முதலில் தயாரித்து விடுங்கள். இதில் கொத்தமல்லி, புதினா, நெல்லி சாறு, எலுமிச்சை சாறு, சிறிது இஞ்சி சாறு, சிறிது சீரகத் தூள் சேர்த்து விடுங்கள்.

* நன்னாரி குடிநீர்- உடலை குளுமைப்படுத்தும்.

* இளநீர், எலுமிச்சை ஜூஸ், புதினா ஜூஸ், கரும்பு சாறு, வெட்டிவேர் நீர் என அன்றாடம் ஏதாவது எடுத்துக் கொள்ளலாம்.

* தர்பூசணி, முலாம் இவற்றினை பழமாக அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம்.

* காரம், எண்ணை அதிகம் இல்லாத தயிர் சாதம், மோர் சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புதினா சாதம், கீரை சாதம், வெந்தய கஞ்சி, கம்பங் கூழ், பழைய சாதம், வெள்ளரிக்காய் பச்சடி, வெண்டைக்காய் மோர் குழம்பு, பூசணிக்காய் மோர் குழம்பு, அவியல், கீரை மசியல், பீர்க்கங்காய் கூட்டு, சுரைக்காய் கூட்டு, வெள்ளரிக்காய், கோசம்படி, தக்காளி ரசம், புடலங்காய், பரங்கி, வெண்பூசணி வகைகளை சமைக்க வேண்டும்.

மேலும் சிலவற்றினை அவ்வப்போது பார்ப்போம்.