தீபாவளியன்று அனைத்து நீர் நிலைகளிலும் கங்கா தேவி எழுந்தருள்வதாக ஐதீகம்.
உலகில் மனிதராய் பிறந்த அனைவரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டிய கால கட்டாயம் ஏற்படுகிறது. இவற்றை சந்திக்கும் போது சில நிலைகளில் மகிழ்சியும் ஆனந்தமும், பல நிலைகளில் சங்கடங்களும் துக்கங்களும் கிடைக்கிறது.
இந்த முயற்சியில் ஒரு சிலருக்கு மனச் சோர்வு ஏற்பட்டு எதிர்மறை சிந்தனை மிகுதியாகிவிடும். மேலும் பார்க்கும் வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது. எதிலும் எளிதில் முடிவு எடுக்க முடியாமல் திணறுவது, ஒரு செயலை செய்வதா? வேண்டாமா? என இருவிதமான மனநிலையை ஏற்படுத்தும். அதீத எதிர்மறை எண்ணங்களால் தன் நிலை மறந்து வாழ்க்கையின் மகிழ்ச்சியை குறைத்து துக்கம், துன்பம், கவலை போன்ற அடையாளங்களை ஏற்படுத்தி விடுகின்றனர். மனித வாழ்வில் பணிகளை திறம்பட செய்து முடிக்க கடுமையான முயற்சி செய்து வருகிறோம். அனைவரிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். ஒவ்வொருவரின் திறமையும் மற்றவர்களின் திறமையில் இருந்து நிச்சயம் மாறுபடும். முயற்சியில் வெற்றி அல்லது தோல்வி என்பது நம் விதிப்படி தான் நடக்கும் என்றாலும் சுய தூண்டுதலால் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம். ஒரு சிலர் தங்களின் வெற்றியின் சாதக, பாதகத்தை உள்ளுணர்வின் மூலம் துல்லியமாக கணித்து விடுவார்கள். ஒருவருக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை தீமைகளை உணர்த்துவது ஜோதிடம் என்றால் அந்த நன்மைகளை சாதகமாக்கவும் தீமைகளை தகர்க்கவும் உள்ளுணர்வு மிக மிக அவசியம்.
உடலும், ஆன்மாவும் இணைந்து செயல்படுவதே உள்ளுணர்வு. மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது. உடல் என்பது பிறந்த ராசி. ஒருவர் பிறந்த ராசிக்கு ஏற்பவும் ராசியில் உச்சம், நீச்சம் பெறும் கிரகத்தின் தன்மைக்கு ஏற்பவும் ஆழ் மனதில், சிந்தனையில், உள்ளுணர்வில் மாறுபாடு இருக்கும். ஆழ் மனதில் நல்ல சிந்தனை இருந்தால் உடலும் ஆன்மாவும் இணையும். தீய சிந்தனை இருந்தால் உடலோடு ஆன்மா இணையாது. ஒருவர் எதை நினைக்கின்றாரோ அந்த இடத்திற்கு அவரது ஆன்மா செல்லும்.
உதாரணமாக இறைவனை நினைக்கும் போது உடலும் ஆன்மாவும் இணைந்து சூட்சும சக்தி பெற்று இறைவனிடம் சென்று உள்ளுணர்வு சிறப்பாக இயங்கும். நாம் தீய செயல்களை நினைக்கும்போது சூட்சும சக்தி அசுப வலிமை பெற்று எண்ணச்சிதறலால் உள்ளுணர்விற்கு வலிமை குறையும். ஒரு மனிதன் சமநிலையில் இருக்கும் போது மட்டுமே உள்ளுணர்வு சீராக இருக்கும். உச்சம் பெற்ற கிரகத்தின் ஆதிக்கத்தால் மிகுதியாகும் உள்ளுணர்வு நீச்சம் பெறும் கிரகத்தால் வலிமை இழக்கும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வீடு உச்சமாகவும், அதன் நேர் எதிர் 180 டிகிரியில் உள்ள வீடு நீச்சமாகவும் வரும். கிரகங்கள் உச்ச வீட்டில் சஞ்சாரம் செய்யும் போது பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதன் வலிமையும் மிகுதியாக இருக்கும். உச்ச கிரகங்களின் கதிர் வீச்சு பூமிக்கு மிகுதியாக கிடைக்கும். ஒரு கிரகம் நீசம் பெறும் போது பூமிக்கு வெகு தொலைவில் இருக்கும். அதாவது ஒரு கிரகம் பூமிக்கு தொலைவில் செல்லும் பொழுது தனது ஒளியை பிரதிபலிக்க இயலாத தன்மையை குறிக்கும். நீசம் பெற்ற கிரகத்தின் அதிர்வலைகள் பூமிக்கு குறைவாக இருக்கும். ஒரு கிரகம் அதன் உச்ச வீட்டில் இருக்கும் போது 100 சதவீதம் முழு பலம் பெறும். நீச்ச வீட்டில் அதன் பலத்தை முற்றிலும் இழக்கும்.
நீசம் பெற்ற கிரகத்தின் அதிர்வலைகள் பூமிக்கு குறைவாக இருக்கும். இதை மேலும் விளக்கமாக கூறுவதென்றால் சூரியன் உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மனிதர்கள் அன்றாட பணியில் சுறுசுறுப்புடன் ஈடுபடுகிறார்கள். சூரியன் மறைந்தவுடன் (அதாவது சூரிய ஒளி மறைந்தவுடன்) உடல் அலுப்பு அதிகமாகி ஒய்வு எடுக்கிறார்கள். அதே போல் மனிதர்களுக்கு சூரியனின் பரிபூரண ஒளிக்கதிர் கிடைக்காத போது ஆன்ம பலம் குறையும் மனச்சோர்வு அதிகரிக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் தனது நீச வீடான துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலமே ஐப்பசி மாதமாகும். சித்திரை மாதத்தில் முழு உச்ச பலத்துடன் விளங்கும் சூரியன், அதற்கு நேர் எதிர் ஏழாவது ராசியான துலாமில் ஐப்பசி மாதத்தில் தனது ஒளிக் கதிர்களின் வீரியத்தை குறைத்து நீச்சமடைகிறார். அதனால் ஐப்பசி மாதத்தில் வெயிலின் தாக்கம் முற்றிலுமாக குறைந்து, மேகமூட்டமும் வடகிழக்கு பருவமழையும் தீவிரமடையும். இதனால் சில பொதுவான தாக்கங்கள் ஏற்படும்.
குறிப்பாக சுயநம்பிக்கை குறையும். முடிவெடுப்பதில் தயக்கம் ஏற்படலாம் உடல் ரீதியான மனரீதியான பலவீனம் இருக்கும். சூரியன் ஒளிகுன்றி நீசமடையும் இந்த மாதத்தில், உலகிற்கு ஒளியூட்டவும் தோஷங்கள் விலகி இன்பம் பெற சில முக்கிய வழிபாடுகள், விசேஷங்கள் கடைபிடிக்கப்படுகிறது. மனித வாழ்வில் விதி தந்த பலனால் எவ்வழியில் சென்றால் வாழ்க்கை வளமானதாக அமையும் என்பதற்கு ஜோதிடம் கூறும் எளிய பரிகார வழிபாட்டு முறை திதி, நட்சத்திர வழிபாடு.
அந்த வகையில் அமாவாசை, பவுர்ணமி திதியிலும், சில குறிப்பிட்ட நட்சத்திர நாளில் செய்யும் பூஜை, வழிபாடு பல மடங்கு பலன் தரும். அமாவாசை திதி பித்ருக்கள் வழிபாட்டிற்கு சிறப்பான நாள். பவுர்ணமி திதி இறை வழிபாட்டிற்கும் பிரார்த்தனைக்கும் உகந்த நாள். குறிப்பாக ஐப்பசி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதால் உணவு பற்றாக்குறை வராது. சூரியனின் பலவீனத்தை நிவர்த்தி செய்யவே இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.
யம தீபம் என்பது எம தர்ம ராஜாவை மகிழ்விக்கும் தீபமாகும். யம தீபம் ஏற்றுவதால் தேக ஆரோக்கியம், நீண்ட ஆயுள், செல்வ வளம் நிலைத்து இருக்கும். பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். மஹாளய பட்சத்திற்கு பூலோகம் வந்த பித்ருக்கள் தீபாவளிக்கு முந்தைய நாட்களில் தான் பித்ருலோகத்திற்கு செல்வார்கள்.
அன்று வீட்டில் அனைவரும் யம தீபம் ஏற்றினால் முன்னோர்கள் மகிழ்ச்சியுடன் பித்ருலோகம் செல்வார்கள் என்பது ஐதீகம். யம தீபம் தீபாவளிக்கு முந்தைய தினத்தில் வரக்கூடிய திரயோதசி திதியில் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. யம தீபம் ஏற்றினால் அனைத்து விதமான தடைகளும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பம் விருத்தியாகும். இந்த தீபத்தை உயரமான இடத்தில் தான் ஏற்ற வேண்டும். குறிப்பாக மாலை 05:26 முதல் 06:45திற்குள் ஏற்றுவது நல்லது. தீபத்தை பின்புறமாக நின்று தான் ஏற்ற வேண்டும். ஏற்றிய யம தீபம் குறைந்தபட்சம் 1 மணி நேரம் எரிய வேண்டும். யம தீபம் ஏற்றுவதால் முன்னோர்கள் நல்லாசியுடன் ஆயுள், ஆரோக்கியம் விருத்தியாகும்.
(8.11.2026) ஐப்பசி 22 ஞாயிற்றுக்கிழமை சூரிய ஒளி குறைவாக இருக்கும் இந்த அமாவாசை காலத்தில், தீபங்களை ஏற்றி இருளை நீக்கி ஒளியை வரவேற்கும் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள இயற்கை வளங்களுக்கு நன்றி தெரிவிக்கவும் வாழ்ந்த முன்னோர்களை நினைவு கூறும் வகையில் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இனப் பாகுபாடு இன்றி அனுசரிக்கப்படும் பண்டிகை தீபாவளிப் பண்டிகை. மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு வந்து நம்முடன் தங்கியிருக்கும் முன்னோர்கள் ஐப்பசி அமாவாசை வரை பூலோகத்திலிருந்து நாம் தரும் தர்ப்பணம் மற்றும் பூஜைகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது ஐதீகம்.
எனவே ஐப்பசி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கினால் அவர்களின் ஆசி அனைவருக்கும் முழுமையாகக் கிடைக்கும். தீபங்களின் திருவிழாவான தீபாவளி உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்களால் கோலா கலமாகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இருள் விலகி ஒளிமயமான வாழ்க்கை அமைவதற்கான நாளாகவும், லட்சுமி தேவியை வரவேற்கும் நாளாகவும் தீபாவளி உள்ளது.
வாழ்க்கையிலும், மனதிலும் இருக்கும் இருள், துன்பங்கள் நீங்கி, நன்மைகள் பெருகுவதற்கான நாளே தீபாவளி பண்டிகை. தீபாவளி பண்டிகையின் சிறப்பு அம்சங்களுள் ஒன்று கங்கா ஸ்நானம். தீபாவளியை கங்கா ஸ்நாதனத்துடன் தான் துவங்க வேண்டும் என்பது மிக முக்கியமான விதிமுறையாகும். கங்கா ஸ்நானம் செய்வதற்கு நல்ல நேரம் மட்டுமல்ல, கங்கா ஸ்நானம் செய்வதற்கு சில முறைகள் உள்ளது. தீபாவளியன்று அனைவரும் கங்கையில் சென்று நீராட முடியாது. ஆனால் கங்கையில் குளித்த பலன் கிடைக்கப்பெற வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகவும் இருக்கும்.
தீபாவளியன்று அனைத்து நீர் நிலைகளிலும் கங்கா தேவி எழுந்தருள்வதாக ஐதீகம். இந்த நாளில் கங்கையில் நீராடினால் பாவங்கள், துன்பங்கள், வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. அதனால் தான் தீபாவளி நாளில் கங்கா ஸ்நானம் மிக முக்கியமானதாக கூறப்படுகிறது.
அதிகாலை 3 மணி முதல் 04.30 மணிக்குள் வீட்டில் இருக்கும் அனைவரும் கங்கா ஸ்நானம் செய்து விட வேண்டும். குளித்து முடித்த பிறகு புத்தாடையில் மஞ்சள் தடவி புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டு முதலில் வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும். அதிகாலை நேரத்தை தவற விட்டவர்கள் காலை 7-8 மணி வரையான சுக்ர ஓரையில் புத்தாடை அணியலாம்.
அதன் பிறகு குல, இஷ்ட தெய்வத்தை வணங்கி வீட்டில் செய்த இனிப்பு பண்டங்களை சாப்பிடலாம். உறவினர்கள் நண்பர்களுடன் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கலாம். இயன்ற உணவு, உடை, இனிப்பு பொருட்களை தானம் வழங்கலாம்.
மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்த பொருள் மிகவும் அவசியம். இத்தகைய சிறப்பு வாய்ந்த பொருளை செல்வச் செழிப்பை அடைய முன்னோர்கள் கடைபிடித்த வழிபாடு தீபாவளித் திருநாளில் செய்யப்படும் லட்சுமி குபேர பூஜையாகும். பணக்கஷ்டத்தால் துன்பப்படுபவன் இதுவரையில் கொடிய பாவங்கள் செய்யாமல் இருந்தால் அவரை வழிபட்டவுடன் கோடீஸ்வரனாக்குவது குபேரனின் பணி. தீபாவளி மகாலட்சுமிக்கு உரிய நாளாக கொண்டாடப்படுவதால், அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்வது விசேஷமானதாகும். தீபாவளி நாளில் தான் மகாலட்சுமியை வணங்கி, சகல செல்வ சம்பத்துக்களையும் குபேரர் பெற்றதாக ஐதீகம். இதனால் அன்றைய தினம் லட்சுமி தேவியை வணங்குவதால், அவளின் பரிபூரண அருளை பெற முடியும். ஐப்பசி மாத அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகையும், லட்சுமி குபேர பூஜையும் செய்வது வழக்கம். இந்த பூஜை மாலை வேளையில் செய்யப்படும் ஒரு வழிபாடாகும். மகா விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி தீபாவளித் திருநாளில் நமது இல்லம் தேடி வருவதாக ஐதீகம். எனவே தீபாவளியன்று மாலை 6 மணிக்குள் லட்சுமி குபேர பூஜையை துவங்குவது நல்லது. சூரியனும் சந்திரனும் இணையும் அமாவாசைத் திதியில் துலா மாதத்தில் லட்சுமி குபேரனை வழிபாடு செய்தால் அனைத்து நலன்களும் கிடைக்கும். அன்று மாலை லட்சுமி குபேர செய்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அடைய முடியும்.
சிவ பெருமானுக்குரிய விரதங்களில் ஒன்றாக போற்றப்படுவது கேதார கெளரி விரதம். மனிதர்கள் மட்டுமின்றி கடவுள்கள் பலரும் இந்த விரதத்தை கடைபிடித்து வேண்டிய வரங்களை பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. பெரும்பாலும் கேதார கெளரி விரதம் தீபாவளியுடன் சேர்ந்து வருவதால் இந்த நாளில் லட்சுமி பூஜையுடன் சேர்த்தே கேதார கெளரி விரதத்தையும் கடைபிடிப்பதுண்டு.
தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அதிகரிக்கவும், கணவன்-மனைவி ஒற்றுமையை மேம்படுத்தவும், பெண்களுக்கு திருமணத் தடையை அகற்றவும் கேதார கெளரி விரதம் உதவுகிறது. இந்த தீபாவளித் திருநாள் அனைவருக்கும் பாதுகாப்பானதாகவும், இன்பமானதாகவும் அமையட்டும். ஸ்ரீ லட்சுமி குபேரர் அருளும், பார்வதி பரமேஸ்வரர் அருளும் நிரம்ப பெற்று வாழ நல் வாழ்த்துக்கள்.