சிறப்புக் கட்டுரைகள்

ஆன்மிக அமுதம்- தெய்வீக வீணைகள்!

ராமாயணத்தில் வரும் இன்னொரு முக்கியப் பாத்திரமான அனுமனும் வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவன்தான்.கருவுற்றிருக்கும் பெண்கள் அடிக்கடி வீணை இசையைக் கேட்டால், பிறக்கும் குழந்தை நல்ல மூளை வளர்ச்சியுடன் விளங்கும் என்ற நம்பிக்கை பலரிடம் நிலவுகிறது.

நம் ஆன்மிகத்துடன் கலந்த இசைக்கருவிகளில் மிக முக்கியமானது வீணை. அலைமகள், மலைமகள், கலைமகள் என்ற முப்பெருந்தேவியரில் ஒரு தேவியான கலைமகளின் கைப்பொருளாக விளங்குவது வீணை என்ற இசைக்கருவிதான். இசைக்கருவிகளிலேயே மிக அழகிய வடிவம் கொண்டது வீணை.

* பழந்தமிழ் இலக்கியங்கள் 'யாழ்' என்ற இசைக்கருவி பற்றி குறிப்பிடுகின்றன. யாழ் வேறு வீணை வேறு என்று சொல்பவர்கள் உண்டு. யாழின் ஒரு வகையே வீணை என்பவர்களும் உண்டு. யாழும் வீணையும் ஒன்றெனக் கருதுபவர்களும் உண்டு.

மகாகவி பாரதியார் யாழ்தான் வீணை என்றே கருதியிருக்க வேண்டும். சரஸ்வதி தேவி வீணையின் ஒலியில் இருப்பாள் என்று ஓர் இடத்திலும் சரஸ்வதி தேவியின் கையில் யாழ் இருப்பதாக இன்னோர் இடத்திலும் அவர் குறிப்பிடுகிறார்.

இவை ஒரு பாடலில் வரும் வரிகள்.

கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!'

இவை பாரதியாரின் இன்னொரு பாடலில் வரும் வரிகள்.

மகாகவி பாரதியாரை வீணை இசையின் இனிமை பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் காதல் பாடலில் தலைவன் தலைவியைப் பார்த்து 'வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு!' என்று பாடுவதாக எழுதுகிறார்.

'நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்!'

என்றும் இன்னொரு பாடலில் எழுதுகிறார்.

 * சரஸ்வதி தேவி பிரம்மலோகத்தில் மிகச்சிறப்பாக வீணை வாசிக்கும் தகவல் கைலாயத்தில் இருந்த பார்வதி தேவிக்கு எட்டியது. சரஸ்வதியின் வீணை இசையைக் கேட்டு அனுபவிக்க விரும்பிய அவள் பிரம்மலோகம் சென்றாள். சரஸ்வதி வீணை வாசிக்கும் அவையில் தானும் அமர்ந்து சரஸ்வதி தேவியின் வீணை இசையைச் செவிமடுக்கலானாள்.

அந்த அற்புதமான வீணையிசையில் மெய் மறந்தாள் பார்வதி. ஓரிடத்தில் சபாஷ் என வாய்விட்டுப் பாராட்டினாள்.

பார்வதியின் குரலைக்கேட்ட மறுகணம் இசைப்பதை நிறுத்திவிட்டு சரஸ்வதி தன் வீணையை உறைபோட்டு மூடினாளாம்.

பார்வதி திகைப்போடு ஏன் என்று கேட்க, 'உங்கள் குரலின் இனிமைக்கு முன் என் வீணை இசை உறைபோடக் காணாது!' என்றாளாம் அவள்!

இப்படி பார்வதி தேவியின் குரல் இனிமை பற்றி தாம் எழுதிய சவுந்தர்ய லகரியில் போற்றுகிறார் மகான் ஆதிசங்கரர்.

* ராமாயணப் பாத்திரமான ராவணன் புகழ்பெற்ற வீணைக் கலைஞனாக விளங்கியதைப் பல ராமாயணங்கள் தெரிவிக்கின்றன. அவனது கொடியிலேயே வீணை இலச்சினை பொறிக்கப்பட்டிருந்ததாகவும் அவை சொல்கின்றன. 'வீணைக் கொடியுடைய வேந்தன்' என்றே ராவணன் குறிப்பிடப்படுகிறான்.

ராமாயணத்தில் வரும் இன்னொரு முக்கியப் பாத்திரமான அனுமனும் வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவன்தான். அனுமனின் வீணை இசைக்கும் திறமை பற்றி அறிந்தார் மகரிஷி நாரதர். அந்த இசையைக் கேட்க விரும்பினார் அவர்.

அனுமனும் நாரதர் முன்னிலையில் வீணை வாசிக்க ஒப்புக் கொண்டான். நாரதர் அருகிலிருந்த பாறையில் மஹதி என்ற பெயருடைய தம் வீணையை வைத்துவிட்டு அனுமனின் வீணை இசையைக் கேட்கலானார்.

கல்லையும் கனிவிக்கும் இசை அனுமனின் வீணை இசை. உண்மையிலேயே அந்த இசையினால் நாரதர் வீணை வைத்திருந்த பாறை மெல்ல இளகத் தொடங்கியது. வீணை இசையில் மெய்மறந்திருந்த நாரதர் அதைக் கவனிக்கவில்லை.

அனுமன் வீணை இசைப்பதை நிறுத்தியதும் இளகிய பாறை மீண்டும் உறையவே பாறையின் இடையே நாரதரின் மஹதி வீணை சிக்கிக் கொண்டு விட்டது!

இப்போது என்ன செய்வது? நாரதர் தன் வீணையைப் பாறையில் இருந்து எடுக்க இயலாமல் தவித்தார்.

பின்னர் அவர் வேண்டுகோளின்படி அனுமன் மீண்டும் வீணையை இசைத்தான். பாறை மறுபடி இளகியபோது நாரதர் தான் மீட்டும் வீணையைப் பாறையிலிருந்து மீட்டுக் கொண்டார் என்கிறது ஓர் அபூர்வ ராமாயணக் கதை.

* நம் பழைய நீதி நூலான திருக்குறளில் யாழ் பற்றிய செய்திகள் ஆங்காங்கே உவமையாக வருகின்றன.

மழலைச் சொல் கேளாதவர்.' (குறள் எண் 66)

தம் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை உணராதவரே புல்லாங்குழலின் ஒலியையும் வீணையின் ஒலியையும் இனிமை என்று கூறுவார்கள் எனச் சொல்லி, தம் காலத்திலேயே வீணை என்ற இசைக்கருவி இருந்த தகவலைத் தெரிவிக்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.

'கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்.' (குறள் எண் 279)

வடிவத்தால் நேரானதுதான் என்றாலும் அம்பு மிகவும் கொடியது. உயிரையே மாய்த்து விடக்கூடியது. ஆனால் வளைந்திருந்தாலும் யாழ் தரும் இசை காதுக்கு இனிமையானது.

ஆகையால் தோற்றத்தை வைத்து மனிதரை எடை போடாதீர்கள். அவர்கள் என்ன செயல் செய்கிறார்களோ அந்தச் செயலை வைத்து அவர்களை மதிப்பிடுங்கள் என்கிறார் வள்ளுவர்.

* பக்தி இலக்கியங்களில் வீணை பற்றிய குறிப்பு நிறைய வருகிறது.

என வீணை பற்றிப் பேசுகிறது மாணிக்கவாசகர் எழுதிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல். சிவனைத் துயிலெழுப்ப வரிசை வரிசையாக வீணைக் கலைஞர்கள் ஒருபுறம் நின்றிருந்ததாக எழுதுகிறார் அவர்.

என்பது திருநாவுக்கரசர் அருளிய தேவாரம். ஈசனின் திருவடி நிழல் வீணை இசை போல் இனிமையாக இருந்ததாய்க் குறிப்பிடுகிறது அந்தப் பாடல். வீணையின் இனிமைக்கு இதை விடவும் சிறப்பான சான்றிருக்க முடியுமா?

* இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரும் கவிஞருமான சுவாமி விபுலானந்தர் 'யாழ் நூல்' என்றே ஒரு நூல் எழுதி இருக்கிறார். பழந்தமிழர் வாழ்வில் கலந்திருந்த யாழ் என்ற இசைக்கருவி தொடர்பாக பதினான்கு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து விபுலானந்தர் படைத்தது அந்த ஆய்வு நூல்.

வில் யாழ், பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சீறி யாழ், சகோட யாழ் என்றிப்படிப் பலவகை யாழ்கள் பற்றி சுவாமி விபுலானந்தர் நூல் விரிவாகச் சொல்கிறது. சிலப்பதிகாரம் சொல்லும் இசை மரபு பற்றியும் அடியார்க்கு நல்லார் உரை மூலம் தெரியவரும் யாழ் தொடர்பான பல செய்திகளையும் அந்த நூல் ஆராய்கிறது.

* தஞ்சையை பதினைந்தாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த நாயக்க மன்னர்களில் ஒருவர் ரகுநாத நாயக்கர். தீவிர இசையன்பர் அவர். 'சங்கீத சுதா' என்னும் அரிய இசை நூலை எழுதியவரும் கூட. 'ஜெயந்த சேனா' என்ற புது ராகத்தையும் 'ராமானந்தா' என்ற புதிய தாளத்தையும் அவர் உருவாக்கியதாகக் கூறுவர்.

வீணையில் அப்போதிருந்த குறைபாடுகளை நீக்கி எல்லா ராகங்களையும் ஒரே வீணையில் மீட்டும் வசதியுடன் வீணையைப் புதிதாய் வடிவமைத்தவர் இவர்தான். இவர் வடிவமைத்த வீணையே இன்று வரை தொடர்கிறது.

ஆண்டாங்கோயில் என்னும் இடத்தில் உள்ள ஒரு கல்வெட்டில் வீணைக் கலைஞர் ஒருவருக்கு நிலம் நன்கொடையாக அளிக்கப்பட்ட செய்தி இடம்பெற்றுள்ளது. அந்தக் காலத்தில் வீணைக் கலைஞர்களை நிலம் கொடுத்துப் பராமரித்தார்கள் என்பதையும் வீணை இசை பராமரித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை அந்தக் கால வள்ளல்கள் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதையும் இதனால் அறிய முடிகிறது.

* மந்திராலயத்தில் ஜீவ சமாதியில் கோயில் கொண்டிருக்கும் மகான் சுவாமி ராகவேந்திரர் வீணை வாசிப்பதில் பெரும் தேர்ச்சி பெற்று விளங்கினார் என்பதை அவரது சரிதம் சொல்கிறது.

ஸ்ரீராகவேந்திரரின் தாத்தா விஜய நகர அரசவையில் வீணை வாசிப்பவராகப் பணியில் இருந்திருக்கிறார். ராகவேந்திரரின் தந்தைக்கும் வீணை வாசிக்கத் தெரிந்திருக்கிறது. குடும்ப மரபில் ராகவேந்திரரும் வீணைக் கலைஞராக விளங்கி இருக்கிறார்.

* அண்மைக் காலத்தில் பிரபல ஆன்மிகச் சொற்பொழிவாளராகப் புகழ்பெற்று விளங்கிய கிருபானந்த வாரியார் சுவாமிகள் வீணை வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது பலர் அறியாத தகவல். அவருக்கு வீணை கற்பித்த குரு, வரதாச்சாரியார் என்ற வீணைக் கலைஞர்.

கருவுற்றிருக்கும் பெண்கள் அடிக்கடி வீணை இசையைக் கேட்டால், பிறக்கும் குழந்தை நல்ல மூளை வளர்ச்சியுடன் விளங்கும் என்ற நம்பிக்கை பலரிடம் நிலவுகிறது. எனவே கருவுற்ற மகளிருக்கு நடக்கும் பூச்சூட்டல் வைபவத்தின்போது வீணை இசையைச் சற்றுநேரம் ஒலிக்கச் செய்யும் மரபு இருக்கிறது.

சரஸ்வதி வீணை, ருத்ர வீணை, விசித்திர வீணை, நாடக வீணை என்றெல்லாம் வீணையில் பற்பல வகைகள் உண்டு. வீணைத் தயாரிப்புக்குப் பல்லாண்டு காலமாக தஞ்சாவூர் புகழ்பெற்று விளங்குகிறது. அங்கு தயாரிக்கப்படும் வீணைகள் தஞ்சாவூர் வீணை என்றே பெயரிட்டு அழைக்கப்படுகின்றன.

வீணை இசை நம் மனத்தில் புனித உணர்வுகளைத் தூண்டுகிறது. நம் மனத்தை மென்மைப்படுத்துகிறது. நம் உள்ளத்தை ஆன்மிகத்தை நோக்கித் திருப்புகிறது.

வீணையின் மெல்லிய ரீங்காரப் பின்னணியில் தியானம் செய்வதும் மந்திர ஜபம் செய்வதும் மன ஒருமைப்பாட்டுக்கு உதவும். கலைமகளின் கையில் உள்ள வீணை கலையின் அடையாளம் மட்டுமல்ல, நமது பெருமை மிகுந்த ஆன்மிகத்தின் அடையாளமும் கூட.

தொடர்புக்கு,

thiruppurkrishnan@gmail.com