ஆரோக்கியமான வாழ்க்கையில நோய் என்கிற வார்த்தைக்கே இடமிருக்காது. ஆனால் நோயற்ற வாழ்க்கை எனும்போது அந்த வார்த்தையிலேயே நோய் என்கிற வார்த்தையுண்டு.
ஆண்டாண்டு காலங்களாக ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த வாழ்க்கையைத் தொலைச்சுட்டு, இன்றைக்கு நாமெல்லாம் நோயில்லாமல் வாழ்வது எப்படினு வழி தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.
ஆம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், நோயற்ற வாழ்க்கைக்கும் எவ்வளவோ வேறுபாடுகளுண்டு.
ஆரோக்கியமான வாழ்க்கையில நோய் என்கிற வார்த்தைக்கே இடமிருக்காது. ஆனால் நோயற்ற வாழ்க்கை எனும்போது அந்த வார்த்தையிலேயே நோய் என்கிற வார்த்தையுண்டு. அப்படியானால் நோயற்ற வாழ்க்கையை தேடுபவர்கள் வாழ்க்கையில் மட்டும் நோயில்லாமல் போகுமா?
இங்கே சொல்ல வருவது என்னவென்றால் நாம் தேட வேண்டியது நோயற்ற வாழ்க்கையை அல்ல... ஆரோக்கியமான வாழ்க்கையைத்தான். ஆரோக்கியாக வாழ்வதற்கான வழி தெரிந்து விட்டாலே அந்த வாழ்க்கையில் நோய்க்கே இடமிருக்காது எனும்போது நோயற்ற வாழ்க்கை என்கிற வார்த்தைக்கே அவசிய மிருக்காது.
நம் முன்னோர்கள் அவர்களின் அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் கெட்டுவிடக் கூடாது என்பதில்தான் கவனமாக வாழ்ந்தார்கள். அவர்கள் ஒருநாளும் நோயைப்பற்றியோ, நோய்கள் பற்றிய அச்சத்திலோ வாழ்ந்ததில்லை. பசித்தால் மட்டுமே உணவு, பசிக்கேற்ற அளவிலான உணவு, அதற்கேற்ற உடலுழைப்பு, அதோடு அந்தி மாலைப்பொழுதோடு உணவெடுப்பதை நிறுத்திக் கொள்வார்கள்... இரவு உண்ணும் பழக்கம் இருந்ததில்லை. மேலும் இரவில் வெகு சீக்கிரமாக உறங்கச் சென்றிடுவார்கள்.
அதேபோல அதிகாலை அவர்கள் எழுவதற்கு முன்பாகவே அவர்கள் உறக்கம் நிறைந்திருக்கும். அவர்கள் எழும்போது உறங்கிய களைப்பு அவர்கள் முகத்தில் தெரியாது. அவ்வளவு உற்சாகமாக எழுந்திருப்பார்கள்.
அவ்வளவுதான். மீண்டும் அதேமாதிரியான உணவு, உழைப்பு, உறக்கம் தேவைப்படும போது இல்லற இன்பம் என அதே பழக்க வழக்கங்கள் தான்... அவ்வப்போது ஊர் கூடிய கோவில் கொண்டாட்டங்கள், வீட்டு விசேஷங்கள் என மகிழ்ந்திருந்தார்கள்.
மனதில் எதிர் காலத்தைப் பற்றி எவ்விதமான கனவுகளையோ, எதிர்பார்ப்புகளையோ சுமந்து மனதை பாரமாக்கி கொள்ளாதவர்கள். மனதை அதன் போக்கிற்கே விட்டுவிட்டு அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்தார்கள். அன்றன்றைக்கு உழைத்தால்தான் அன்றன்றைக்கான சோறு என்பதைத் தாண்டி அவர்களுக்கு வேறெந்த தேவைக்கு அதிகமான குறிக்கோளும் இருந்ததில்லை.
அவர்கள் குழந்தை பெற்றெடுக்கவில்லை. குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். குறைந்த பட்சம் 5 குழந்தைகளையாவது பெற்றெடுக்காமல் விடமாட்டார்கள். அதுகூட அவர்களின் குறிக்கோளாக இருந்திடவில்லை. குழந்தைகளை பெற்றெடுப்பது என்பது அவர்களின் இயல்பான வாழ்க்கையில் ஒரு அங்கம் அவ்வளவுதான்.
இல்லற வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் குழந்தை பேறுக்காக இணையமாட்டார்கள். அவர்கள் இன்பத்திற்காக இணைவார்கள். அதன் விளைவாக குழந்தை பிறக்கும். அவ்வளவுதான்...
இன்றைக்கு இந்த நவீன சமூகம் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்காக இல்லற இன்பத்தை நாடுகிறார்கள். அப்படி இணைவதால் இணையர்கள் இருவருக்கும் மன அழுத்தம்தான் இருக்குமே தவிர இன்பம் இருக்காது. இன்பமே இல்லாத இல்லறத்தில் குழந்தை எங்கிருந்து பிறக்கும்?.
உடல் மற்றும் மனதின் இயல்பான தேவைகளை தேவையில்லாத குறிக்கோள்களோடு அனுகும் போதுதான் அவற்றின் இயல்பு பாதிக்கப்பட்டு அதுவொரு நோயாகவே மாறிவிடுகிறது. இறுதிவரைக்கும் அதுவொரு குறையாகவே இருந்து விடுகிறது. அவ்வப்போது ஏதேனும் உடல் தொந்தரவுகள் ஏற்பட்டால், அவற்றை உடலின் இயல்பாகவே புரிந்து வைத்திருந்தார்களே தவிர.
அது எதுவோ மேல்நாட்டு நோயாக இருக்குமோ என்றெல்லாம் தேவைக்கதிகமாக சிந்தித்து மனதளவிலும் நோயாளியாக மாட்டார்கள். உடலை அணு அணுவாக புரிந்து உணர்ந்து வாழ்ந்து வந்த அவர்களுக்கு, அதிலிருந்து மீள்வதற்கான அனைத்து வாழ்வியல் சிகிச்சை முறைகளும் ஒவ்வொரு தனி மனிதனும் பெற்றிருந்தார்கள்.
இவைதான் அவர்களுக்கு 100 வயதையும் தாண்டி ஆரோக்கியமான ஆயுளை தந்தன. ஆரோக்கியமாகவே பிறந்தார்கள். ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்கள். ஆரோக்கியமாகவே இறந்தார்கள். அன்றைக்கு இருந்ததெல்லாம் இயற்கை மரணங்கள் மட்டும்தான். ஆனால் இன்றைக்கிருப்பதோ அகால மரணங்களாகவே இருக்கின்றன. நாம் எப்படி ஆரோக்கியமான வாழ்க்கையை தொலைத்து விட்டு நோயற்ற வாழ்க்கையைத் தேடுகிறோமோ அதே போலவே...
மரணத்தில் கூட இயற்கை மரணம் என்ற ஒன்றையே தொலைத்திருக்கிறோம். ஆரோக்கியமாக வாழவில்லையென்றால் நோயுற்று தான் வாழவேண்டும். நோயுற்றே வாழ்ந்து கழித்தோமானால் அகால மரணம்தானே அடைய வேண்டும்...
எப்படி வாழ வேண்டும் என்பது தெரியாமலிருக்கிறோம். அதபோல எப்படி இறக்க வேண்டும் என்பதும் தெரியாமலிருக்கிறோம்.
தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வந்த நம் முன்னோர்களின் வாழ்வியல் அனுபவ நெறிமுறைகள், இறுதியான இரண்டு தலைமுறைகளாக கடத்தப்படுவது குறைந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது என்று கூட சொல்லலாம்.
அவை காலத்தின் இயல்பாக இருக்கலாம் என்பதைவிட, மனித பேராசைக்காரர்களின் சூழ்ச்சியாகவும் இருக்கலாம். மனித உடலை வியாபார பொருளாக பார்க்கும் கோணம் இந்த நவீன காலத்தில் தலை விரித்தாடுகிறது. அது அறிவியலின் பெயரால், மனிதர்களை அவர்களின் மரபு நோக்கி திரும்பவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறது..
நோயில்லாமல் வாழ முடியாது...
நோயோடுதான் வாழ்ந்தாக வேண்டும்...
எந்த நோயையும் குணப்படுத்தவே முடியாது.
நோய்களை கட்டுப்படுத்த மட்டும்தான் முடியும்...
என்றெல்லாம் அச்சம் கலந்த மூடநம்பிக்கைகள் மக்கள் மத்தியில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளன.
அதனால்தான் நாம் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திப்பதேயில்லை... மாறாக நோய்கள் பற்றிய அச்சத்தில் மூழ்கி கிடக்கிறோம்.
நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் முதலில் நாம் இந்த அச்சங்களிலிருந்து மீள வேண்டும். நோயை விட ஆபத்தானது நோய் பற்றிய அச்சம்தான்...
நோய் பற்றிய அச்சத்திலிருந்து மீளாமல் எந்த நோயிலிலிருந்தும் மீள முடியாது என்பதே உண்மை. நோய்கள் மீதான அச்சத்திலிருந்து மீண்டு... நோயில்லாமல் வாழ்வதைப் பற்றி சிந்திக்காமல்... ஆரோக்கியமாக வாழ என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். அதற்கான வழிகளை நமது மரபிலிருந்து நாம்தான் தோண்டி எடுக்க வேண்டும்...
நல்ல உணவுகளை உண்டதாலும், நல்ல உடல் உழைப்பு இருந்ததாலும் மட்டும் அன்றைக்கு ஆரோக்கியமாக வாழ்ந்து விடவில்லை.
நம் முன்னோர்களின் வாழ்வியலில் ஒரு இயற்கை விதி மீறாத நெறிமுறை இருந்தது. அதுதான் ஆரோக்கியத்தின் ஆணி வேர்.
என்னதான் காலங்கள் மாறினாலும், உணவுகளெல்லாம் ரசாயனங்களாக மாறியிருந்தாலும் இயற்கையின் விதி எப்போதும் மாறுவதில்லை. நமது உடலும் இயற்கையின் ஒரு அங்கம்தான். உடலுக் கென்றும் இயற்கை விதிகள் இருக்கின்றன.
எப்போது உண்ண வேண்டும்?-பசித்து புசி.
எப்போது உறங்க வேண்டும்?- முன்னிரவில்..
எப்போது உழைக்க வேண்டும்?-பகல் மட்டும்.
எப்போது நீர் அருந்த வேண்டும்?- தாகம் எற்படும் போது..
என்றெல்லாம் கூட உடலுக்கென்று இயற்கை விதி விதித்து வைத்திருக்கிறது.
இந்த விதி மீறாமல் வாழும் முறைதான் ஆரோக்கியமான வாழ்க்கை முறை.
இந்த அடிப்படை விதிகளை பின்பற்றும் போது உடலின் அடிப்படை கட்டமைப்பு உறுதியாகும்...
ஒரு உறுதியான ஆரோக்கியமான உடல் எப்பேற்பட்ட நோயையும் எதிர்கொள்ளும் எதிர்பாற்றலை பெற்றிருக்கும்.
உலகையே அச்சுறுத்துவதாக நம்பப்படும் வைரஸ்களே அஞ்சும் சக்தி எது தெரியுமா? அதுதான் நம் “எதிர்ப்பு சக்தி’’, இயற்கையின் அடிப்படை விதி மீறாமல் வாழும் ஆரோக்கியமான வாழ்வியல் முறை நம் உடலின் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்தும்...
வலுவான எதிர்ப்பாற்றலைக் கொண்ட உடலின் வழியாக எப்பேர்பட்ட கால மாற்றத்தையும், உணவு கலப்படங்களையும் எதிர்கொள்ள முடியும்.. நமக்கு “நோயற்ற வாழ்க்கை வேண்டாம்... ஆரோக்கியமான வாழ்க்கைதான் வேண்டும்...!’