மனிதர்கள் அவரவர்கள் வயதிற்கேற்ப காலை முதல் இரவு வரை பல வகையான வேலைகளில் ஈடுபடுகின்றனர். இரவு நேரத்தில் 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை ஆழ்ந்த தூக்கம் ஒரு மனிதனுக்கு வேண்டும். இந்த நேரத்தில் ஆழ்ந்த நித்திரை கிடைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்றைய சூழ்நிலையில் இரவு 9 மணிக்கு படுக்கைக்கு செல்வது நிறைய குடும்பங்களில் சாத்தியமில்லாததாக இருக்கலாம். அப்படிப் பட்டவர்கள் இரவு 10 மணிக்கு தூங்கி காலை 5 மணி வரை ஆழ்ந்த நித்திரை இருக்க வேண்டும்.
அதுவும் சாத்தியமில்லை என்றால் இரவு 10.30 மணிக்குள் படுக்கைக்கு சென்று காலை 5.30 மணி வரை ஆழ்ந்த நித்திரை இருக்க வேண்டும். இரவு 11 மணி முதல் காலை 3 மணி வரை நாம் நல்ல தூக்கத்தில் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் தான் நமது உடலில் உள்ள ராஜ உறுப்புகளான கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீரகப்பை, இதயம், நுரையீரல் நன்கு பிராண சக்தி பெற்று மீண்டும் மறு நாள் சிறப்பாக உழைப்பதற்கு தயாராகின்றது.
இந்த நேரத்தில் நாம் விழித்திருந்தால் உடல் ஆரோக்கியம் இருக்காது. மன அமைதியும் இல்லாமல் உடலில் பல வித உறுப்புக்கள், நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக செயல்படாமல் பல இன்னல்களுக்கு ஆளா கின்றோம்.
நிறைய நபர்கள் தூக்க மாத்திரை சாப்பிடு கின்றனர். அதைச் சாப்பிட்டும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களும் ஏராளம். மாத்திரை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் அதிகம் ஏற்படுகின்றது. நரம்பு பலவீனம் உடல் நடுக்கம், பய உணர்வு, பதட்டம் ஏற்படுகின்றது. மூச்சோட்ட மண்டலம் பாதிக்கின்றது.
மனிதனுக்கு தினமும் இரவு நல்ல தூக்கம் இருந்தால் தான் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த தூக்கம் வருவதற்குரிய யோகா முத்திரை பயிற்சியை நாம் தெளிவாக காணப்போகின்றோம். அதற்கு முன்பாக உடல், மனதை நல்ல தூக்கம் வருவதற்கு எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகின்றது.
மன அழுத்தம்:நிறைய நபர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். வாழ்வில் அன்றாடம் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களில் கோபம், பதட்டம், கவலை அடைவார்கள். இவர்கள் இரவு பத்து மணிக்கு படுத்தாலும் தூக்கம் வராது. அன்று வீட்டில், அல்லது அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் எண்ணங்களாக, காட்சிகளாக வந்து கொண்டே இருக்கும். எதையும் வாழ்வில் ஏற்றுக் கொள்ளும் மனோ பக்குவம் வர வேண்டும். என்ன நடந்தாலும் அதை பெரிது படுத்தி பார்க்கக் கூடாது. அப்படிப்பட்ட மனோநிலையை பெறுவதற்குரிய யோகப் பயிற்சிகளைத்தான் நாம் பார்க்கப்போகின்றோம் .
உணவு:அதிக காரம், உப்பு, புளிப்பு குறைத்துவிடுங்கள். அதிக காரம் சேர்ப் பவர்களுக்கு கோபம் அதிகமாக ஏற்படும். அதனால் ரத்த அழுத்தம் ஏற்படும், பதட்டம் ஏற்படும். தூக்கம் சரியாக வராது. இதய துடிப்பு அதிகமாகும். எனவே உணவில் ஒழுக் கம் வேண்டும்.
பசிக்கும் பொழுது சாப்பிட வேண்டும். சிலர் பசிக்கும் பொழுது வேலையில் முழுக் கவனம் செலுத்தி நேரம் கழித்து சாப்பிடுவர். காலை 8 மணி முதல் 9 மணிக்குள்ளும் மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள்ளும், இரவு 7 மணி முதல் 8 மணிக்குள்ளும் சாப்பிடுவது சிறந்த முறை.
ஆனால் நிறைய நபர்களுக்கு காலை 11 மணிக்கு சாப்பிடுவது, மதியம் 4 மணி, இரவு 10 மணிக்கு சாப்பிடும் பழக்கம் உள்ளது. இவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வராமல் இருக்கும்.
கடன் வாங்காமல் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்:கடன் இருந்தால் தூக்கம் வராது. எப்படி வாங்கிய கடனை அடைப்பது என்பதிலேயே மனம் ஈடுபட்டு மன அழுத்தமாக மாறிவிடும். தூக்கம் வராது. எனவே நமது வரவு அறிந்து அதற்கேற்ப செலவு செய்ய வேண்டும். உங்கள் முதல் செலவே சேமிப்பாக இருக்க வேண்டும்.
எல்லோரிடமும் அன்பு: நண்பர்கள், உறவினர்கள், அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். உங்களை அவர்கள் அடித்து பேசினாலும் பரவாயில்லை. அன்பை மட்டும் காட்டுங்கள். உங்கள் மேல் தேவையில் லாமல் கோபப்பட்டவர்கள் நிச்சயமாக தனது கோபத்தை மாற்றி உங்கள் மீது அன்பு செலுத்துவார்கள். எல்லோரிடமும் உள்ள நல்ல குணத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். யாரையும் குறைகூறாதீர்கள். எல்லோரிடமும் நிறைவான குணங்கள் நிறைய உள்ளன. அதனை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
தூக்கம் வருவதற்குரிய முத்தி ரைகள்: முத்திரைகள் செய்யும் பொழுது நமது பண்புகள் மாறிவிடும். அன்பு, கருணை மலரும். கோபம் நீங்கும், மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்கும். அதனால் நமக்கு நித்திரை கை கூடும்.
ஒரு மனிதனுடைய உடலில் பஞ்ச பூதங்களும் சமமான விகிதத்தில் இயங்கினால் ஆழ்ந்த நித்திரை கை கூடும். பஞ்ச பூதங்களை சமப்படுத்துவது முத்திரைகளாகும்.
முத்திரைகளை காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் செய்ய வேண்டும். ஒரு முத்திரையை இரண்டு நிமிடம் செய்தால் போதும். சாப்பிட்டிருந்தால் இரண்டு மணி நேரம் கழித்து பயிற்சி செய்யலாம். தரையில் ஒரு விரிப்பு விரித்து அதில் அமர்ந்து முதுகுத்தண்டை நேராக வைத்து செய்யவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.
தூக்கம் வருவதற்கு பல விதமான யோகமுத்திரை சிகிச்சையை அளிக்கின்றோம். நம்பிக்கையுடன் பயிலுங்கள். நிச்சயம் நல்ல தூக்கம் வரும். இந்த பயிற்சியினால் எந்த ஒரு பக்க விளைவும் வராது. மாறாக இந்த முத்திரைகளினால் மற்ற பலன்களும் உங்களுக்கு கிடைக்கும்.
பிராண முத்திரை:நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும், கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள், கூர்ந்து தியானிக்கவும்.
பின் மோதிரவிரல், சுண்டுவிரல் அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். மற்ற இருவிரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும் இரு கைகளிலும் செய்யவும். பின் கைகளை சாதாரணமாக வைக்கவும்.
பிரமர முத்திரை:நிமிர்ந்து அமரவும், முதுகெலும்பு நேராகயிருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும்.
பின் ஆள்காட்டி விரலை மடக்கி நடுவிரல் நுனியை கட்டைவிரல் நுனியோடு அழுத்திப் பிடித்து மற்ற இரு விரல்களையும் நேராக படத்தில் உள்ளதுபோல் வைக்கவும். இர கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும்.
சின் முத்திரை:நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் ஆள்காட்டி விரல், கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.
அர்த்த பத்மாசனம்:விரிப்பில் நேராக அமரவும். இரு கால்களையும் நீட்டவும். வலது காலை மடக்கி இடது கால் தொடை மீது வைக்கவும். பின் இடது காலை மடித்து படத்தில் உள்ளது போல் கொண்டு வரவும். இந்த ஆசனத்தில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.
இதேபோல் காலை மாற்றி இரண்டு நிமிடங்கள் இருக்கவும். ஒவ்வொரு காலிலும் இரண்டு நிமிடங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் வலது பக்க, இடது பக்க மூளைக்கு ரத்த ஓட்டம் நன்றாக பாயும். மூளை செல்கள் நன்கு இயங்கும். மன அமைதி கிட்டும்.
மேற்குறிப்பிட்ட பயிற்சியை தினமும் காலை மாலை பயிற்சி செய்யுங்கள். இரவு படுக்கும் பொழுது மட்டும் படுப்பதற்கு முன்பாக பிராண முத்திரையை இரண்டு நிமிடம் செய்துவிட்டு படுக்கவும். 48 நாட்கள் விடாமல் பயிற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். தூக்கம் வரும்.
வாசகர்கள் கேட்ட சந்தேங்களுக்கு இதோ பதில்.
1.யோகப்பயிற்சிகள் எந்த நேரத்தில், எத்திசை நோக்கி செய்ய வேண்டும் ?
யோகப்பயிற்சிகளை காலை 4 மணி முதல் 7 மணிக்குள் கிழக்கு திசை நோக்கி செய்ய வேண்டும். சாப்பிடுமுன் செய்யவும்.
மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் சாப்பிடுமுன் செய்யவும். கிழக்கு திசை நோக்கி செய்யவும்.
மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் மேற்கு திசை நோக்கி செய்யவும்.
2. சாப்பிட்டவுடன் தொடர்ந்து ஏப்பம் வந்து கொண்டே இருக்கிறது , இதற்கு என்ன தீர்வு?
நீங்கள் சாப்பிடுமுன் அபான முத்திரை இரண்டு நிமிடம் பயிற்சி செய்யுங்கள்.
அபான முத்திரை செய்முறை: நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். பின் நடுவிரல், மோதிரவிரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைத்துலேசாக அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் சப்பிடுமுன் செய்யவும். 21 நாட்கள் காலை, மதியம், மாலை பயிற்சி செய்யவும். சாப்பிட்டவுடன் வெந்நீர் ஒரு டம்ளர் குடிக்கவும். ஏப்பம் சாப்பிட்டவுடன் வருவது சரியாகும்.
3. எண்ணெய் தேய்த்து குளித்த அன்று யோகாசனம் செய்யலாமா ?
எண்ணெய் தேய்த்து குளித்த அன்று யோகாசனம் செய்ய வேண்டாம். தியானம் மட்டும் செய்யலாம். எண்ணெய் குளியலன்று பகலிலும் உறங்கக் கூடாது. மிதமான உணவுடன் ரசம் சாதம் சாப்பிடவும்.
பெ.கிருஷ்ணன் பாலாஜி