சிறப்புக் கட்டுரைகள்

ஆரோக்கியத்துக்கு உதவும் உணவு முறைகள்!

மாலை மலர்

உணவு ஜீரணம் என்பது மிக அத்தியா வசியமான ஒன்று. நேரத்தில் சாப்பிடுவதும் முறையாய் சாப்பிடுவதும் இந்த அவசரமான வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் மிக கடினம் ஆகி விடுகின்றது. இருப்பினும் முடிந்த வரை முயற்சி செய்யலாமே. பின்னர் அதுவே பழக்கப்பட்டு விடும்.

* காலை உணவு என்பது தூங்கி எழுந்த 1-2 மணி நேரத்திற்குள் இருப்பது நல்லது என ஆய்வுகள் கூறுகின்றன. நம் முன்னோர்கள் காலையிலேயே கஞ்சி, பழைய சோறு, நீராகாரம் என உண்டு ஆரோக்கியமாய் இருந்தனர்.

* மதிய உணவு 12 முதல் 2 மணிக்குள் இருப்பது நல்லது. நமது ஜீரண அக்னி உறுதியாய் இருக்கும் நேரம் இது.

* இரவு உணவு எளிமையானதாக இருக்க வேண்டும். தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பு உண்ண வேண்டும். இன்றைய கால கட்டத்தில் மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் இரவு உணவினை முடித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

* காலை உணவு என்பது மிக முக்கியமான ஒன்று. உடலுக்கும், மூளைக்கும் சக்தி தருகின்றது. எனவே 7 மணி முதல் 8 மணிக்குள் காலை உணவினை எடுத்துக் கொள்ளுங்கள்.

* மதிய உணவினை 12 முதல் 2 மணிக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் சர்க்கரை அளவு சீராய் இருக்கவும் இது உதவும். இரவு உணவு 6 முதல் 8 மணிக்குள் எடுத்துக் கொள்ளும் போது ஜீரணம் நன்கு இருக்கும். தூக்கமும் முறையாய் இருக்கும்.

சில உணவுகள் குடலுக்கு இதமானவை.

* இஞ்சி- வயிறு உப்பிசம் நீக்கி செரிமானத்திற்கு உதவும்.

* வாழைப்பழம்- இதமானது.

* ஓட்ஸ்- நார்சத்து அதிகம் என்பதால் செரிமானம் எளிதாகின்றது.

* எலும்பு சூப்- குடல் உட்பகுதி உறுதிப்படும்.

* அரிசி உணவு- அமைதியானது.

* பப்பாயா- புரத செரிமானத்திற்கு உதவும்.

* சோம்பு- ஜீரண சக்தி தரும்.

* பரங்கிகாய்- நார்சத்து மிகுந்தது. மென்மையானது உணவில் புரதம் அதிகம் வேண்டும் எனும் பொழுது சைவ உணவு உண்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.

* 100 கிராம் சாதம், 200 கிராம் பருப்பு என இருந்தால் சுமார் 10 கிராம் புரோட்டீன் கிடைக்கின்றது.

* சோயா சங்க்ஸ்- 50 கிராம் சோயாவில் 25 கிராம் அளவு புரதம் கிடைக்கின்றது.

* 200 கிராம் பன்னீரில் சுமார் 26 கிராம் அளவு புரதம் கிடைக்கின்றது. தயிர், கொட்டை வகைகள், விதைகள் இவற்றின் மூலம் புரதம் பெறலாம்.

* 60 கிலோ எடையுள்ள ஒருவருக்கு சுமார் 60 கிராம் புரதம் தேவைப்படுகின்றது. எனவே மருத்துவர் ஆலோசனை பெற்று புரதத்தினை முறைப்படி எடுத்துக் கொள்வது அவசியம்.

வீட்டிலேயே இத்தகு பானங்களை அருந்தினால் உங்களுக்கு தாதுக்கள் சுத்தமாய், எளிதில் கிடைக்கும்.

* இளநீர், வெள்ளரி- புதினா ‌ஜுஸ்

* எலுமிச்சை- தேன் ஜுஸ்

* வாழைப்பழம் - பால் ஸ்மூதி

இவற்றில் அன்றாடம் ஏதாவது ஒன்று எடுத்துக் கொள்ளலாமே.

பசியோடு நீண்ட நேரம் இருப்பதும், உணவினை தவிர்ப்பதும் வயிற்றுப் பிரச்சினைகளை உருவாக்கும்.

அதிக மனஅழுத்தம், அழிவுப்பூர்வமான சிந்தனை, இவை மன நலனை பாதிக்கும். அதிகமான துரித உணவுகள், மது இவை இரண்டும் எளிதில் கல்லீரலை பாதிக்கும்.

அதிகம் குளிர்ந்த உணவு, எண்ணை உணவுகள் குடலை பாதிக்கும். புகை பிடித்தலும், மாசு நிறைந்த சூழலும் நுரையீரலை பாதிக்கும். மது கண்களையும் பாதிக்கும். மிக அதிக சத்தம் காதுகளை பாதிக்கும். அதிக பேக்கரி உணவுகள், இனிப்பு, கொழுப்பு இவை கணையத்தை பாதிக்கும்.

அதிகம் சோர்வு ஏற்படுகின்றதா? பலவீனமாக இருக்கின்றதா?

கை, கால்கள் சில்லிட்டு விடுகின்றதா? தலைவலி ஏற்படுகின்றதா? நகங்கள் எளிதில் உடைகின்றதா? மூச்சு வாங்குகின்றதா? படபடவென இருக்கின்றதா? கவலை, டென்ஷன் என சிறிய விஷயங்களுக்குக் கூட பாதிக்கப்படுகின்றீர்களா? நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கின்றதா? முடி, சருமம் பாதித்துள்ளதா? பசி சரியாக எடுப்பதில்லையா?

உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள். அவர்கள் உங்களுக்கு ரத்த சோகை இருக்கின்றதா என்று பரிசோதனை செய்வார்.

குடலை சற்று சீர் செய்ய வேண்டுமா?

க்ளூடென் உணவு, சர்க்கரை உணவு, அதிக எண்ணை இவற்றினை 7 முதல் 14 நாட்கள் வரை தவிர்த்துப் பாருங்கள்.

கொழுப்பில்லா தயிர், மோர் சேர்த்துக் கொள்ளுங்கள். டான்டிரியன் டீ, சிறிது எலுமிச்சை கலந்த நீர் பருகுங்கள். நார்சத்து உணவில் போதிய அளவு இருக்கட்டும். கீரை, பீட்ரூட் இவற்றினை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். சிங், வைட்டமின் பி6 மருத்துவர் ஆலோசனையோடு எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் குடல் ஆரோக்கியம் கூடும்.

* அதிகம் பதப்படுத்தப்படாத இயற்கையோடு ஒட்டிய உணவுகள் நல்லது.

சத்துணவு என்பது மட்டும் தீர்வாகாது. குறிப்பிட்ட நேரத்தில் அதனை எடுத்துக் கொள்வதும் அவசியம்.

மலச்சிக்கல் இருப்பவர்கள் கவனிக்க வேண்டியவை

* அதிகமாக காபி, டீ குடிப்பதை தவிர்க்கவும்.

* மதுவினை தவிர்க்கவும்.

* பயணத்தின் போது தேவையான அளவு நீர் அருந்தவும்.

* நார்ச்சத்து உணவில் குறையாது பார்த்துக்

கொள்ள வேண்டும்.

* உடற்பயிற்சி அவசியம்.

* பதப்படுத்திய உணவுகளை தவிர்க்கவும்.

* அதிகமாக பால் சார்ந்த சீஸ், பன்னீர் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

* மோர் நன்கு எடுத்துக் கொள்ளலாம்.

* மருந்துகளால் மலச்சிக்கல் ஏற்படுகின்றதா என மருத்துவரிடம் கேட்டு அறியவும்.

* குடல் கிருமிகள் பாதிப்பு இருக்கக் கூடாது. மன உளைச்சல், கவலை இவை குடல் ஆரோக்கியத்தினை பாதிக்கும்.

* ஹார்மோன்கள் சீராக இயங்க வேண்டும்.

குடலை சுத்தம் செய்வதில் பிளாக்ஸ் விதை எனப்படும் ஆளி விதை பெரிதும் உதவுகின்றது.

* குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் அபாயத்தினை குறைக்கின்றது. செல்களை சுத்தம் செய்கின்றது. குடல் செயல்பாடு மேம்படுகின்றது. ஜீரண சக்தியை கூடுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி கூட்டுகின்றது. உள் வீக்கங்களை குறைக்கின்றது. மன உளைச்சலை கட்டுப்படுத்துகின்றது.

* நரம்பு மண்டல ஆரோக்கியம் கூடுகின்றது. நார்ச்சத்து மிகுந்தது. குளூட்டன் இல்லாதது. சர்க்கரை அளவு ஏறாது. ஒமேகா-3 சத்து நிறைந்தது. கண் ஆரோக்கியம் கூடும்.

* இதய பாதுகாப்பு, ரத்த கொதிப்பினை கட்டுப்படுத்தும்.

* சருமம், முடி பராமரிப்பிற்கு சிறந்தது. இதனை அன்றாடம் சத்துணவு நிபுணர் ஆலோசனை பெற்று உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அசிடிடி, நெஞ்செரிச்சல் இது அநேகரின் வாழ்வில் புகுந்து விட்டது. இதற்கு பல காரணங்களை கூறலாம். இதன் அறிகுறிகளாக பலருக்கு அன்றாடம் நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வயிற்றில் ஒரு சங்கடம். காபி, டீ குடித்தால் அதிகமாவது என்று இருக்கலாம். உங்கள் உணவு பாதையில் வீக்கம் உள்ளது என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

* சில அவசர மருந்துகள் அந்நேரத்திற்கான தீர்வினை தரலாம். ஆனால் நிரந்தர தீர்வினை தராது. இதற்கான முறையான மருத்துவ பரிசோதனை, மருத்துவ சிகிச்சை, உணவு முறையில் மாற்றம் என்று தேவைப்படுகின்றது.

ஆயுர்வேதத்தில் கடைபிடிக்க கூறும் ஒரு முறையினையும் பார்ப்போம்

* அவர்கள் காலை வெறும் வயிற்றில் அரை கப் மாதுளை பழம் சாப்பிட சொல்கின்றனர். அல்லது சிறிது ஜூசாக சீரகம் சேர்த்து எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர்.

* சிறிது நேரம் சென்று 5 நிமிடம் ஆழ் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். மசாலா, எண்ணை பொருட்களை தவிர்க்க வேண்டும். முயற்சி செய்யலாமே. அமைதியான வயிறு, நல்ல ஜீரணம், வயிற்றில் எரிச்சல், வலி இன்மை என்பது சிறந்த ஆரோக்கியம்

குடலில் ஒட்டுண்ணிகள் இருப்பதற்கான அறிகுறிகள்

வயிற்றுப்போக்கில் ரத்தம், ஆசன வாயில் அரிப்பு மற்றும் கழிவில் புழுக்கள், தலைவலி, சதை வலி, மூட்டு வலி, வயிற்றுப்போக்கு, ரத்த சோகை, சோர்வு, தூக்கமின்மை, தூக்கத்தில் பல் கடித்தல், எடை குறைவு, குடல் பிரச்சினைகள், பசி அதிகரித்தல், உடலில் சத்து குறைபாடு.

இவைகள் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுப்பது பல பிரச்சினைகளுக்கு தீர்வாகும்.

* வயிறு காலியாய் இருக்கும்போது தரையில் படுத்து இரு கால்களையும் சுவற்றின் மேல் வைத்து உயர்த்திக் கொள்ளுங்கள்.

* ரத்த ஓட்டம், இதயத்திற்கு நன்கு செல்லும், ஸ்ட்ரெஸ் குறையும், நரம்புகள் வலுப்பெறும், கணுக்கால் வீக்கம் குறையும், வெரிகோஸ் வெயின் பாதிப்பு குறையும், தலைவலி நீங்கும், ஜீரணம் மேம்படும், இத்தனை எளிதாய் கிடைக்கும் நன்மைகளை விடலாமா? இன்றே செயல்படுத்துவோம். நோய்க்கு தீர்வு மருந்துடன் மேல் கூறியனவையும் அவசியமே.