சிறப்புக் கட்டுரைகள்

நாளை சித்திரை மாத அமாவாசை- ஆறுகளில் புனித நீராடி தர்ப்பணம் செய்தால் அதிக பலன்

அமாவாசை திதி நாள் முழுவதும் நீடிப்பதால், மதிய நேரத்திற்குள் தர்ப்பணம் செய்வது உகந்தது.

சித்திரை அமாவாசை வழிபாட்டில் முக்கியமான நாள். இதை சத்வாய் அமாவாசை என்றும் சொல்வார்கள். இந்த ஆண்டுக்கான சித்திரை அமாவாசை நாளை (வெள்ளிக்கிழமை) வருகிறது. சத்வாய் அமாவாசை நாளில் சிவபெருமான், விஷ்ணு மற்றும் சனி பகவானை வழிபடுவது நன்மை பயக்கும்.

அபூர்வமாக சில நாட்களில் அமாவாசை திதி இரண்டு நாட்களில் வரும், அந்த வகையில், இந்த அமாவாசையும் 2 நாட்களில் வருகிறது. சூரியன் உச்சமாகும் மாதமான வருகிற சித்திரை அமாவாசை, பித்ரு தோஷம் போக்கும்.

சித்திரை அமாவாசை திதி இன்று இரவு 7:31 மணிக்கு தொடங்கி நாளை மாலை 5:47 மணி வரை இருக்கிறது. உதய திதியின் அடிப்படையில் நாளை அமாவாசை அனுஷ்டிக்கப்பட வேண்டும்.

நாளை மாலை வரை அமாவாசை திதி இருப்பதால் அமாவாசை தர்ப்பணம் செய்ய உகந்த நாள் ஆகும். தர்ப்பணம் செய்யும் பொழுது கிழக்கு திசை நோக்கி நின்றவாறு அல்லது அமர்ந்தவாறு மந்திரங்களை சொல்ல வேண்டும்.

அமாவாசை திதி நாள் முழுவதும் நீடிப்பதால், மதிய நேரத்திற்குள் தர்ப்பணம் செய்வது உகந்தது. நாளை காலை 10:30 முதல் மதியம் 12 மணி வரை ராகு காலம் என்பதால், இதற்குள்ளாக அமாவாசை தர்ப்பணம் செய்து முடிப்பது நல்லது. காலையில் செய்ய முடியாதவர்கள், மதியம் 12 மணிக்கு மேல் சித்திரை அமாவாசைக்கான தர்ப்பணத்தை செய்து முடிக்கலாம்.

சித்திரை அமாவாசை நாளான நாளை சூரியன் மற்றும் சந்திரன் ஒரே ராசியில் சஞ்சரிப்பார்கள். இந்த அமாவாசை அன்று நடக்கும் சிறப்புகளில் ஒன்று, உச்சமடையும் சூரியனாகும்.

மேஷம் ராசியில் சுக்கிரன், சூரியன் மற்றும் சந்திரன் இணைந்திருக்கும் காலத்தில் அமாவாசை ஏற்படுகிறது. அந்த வகையில், அமாவாசை அன்று திரிகிரக யோகம் என்ற அபூர்வ யோகத்தையும் கொடுக்கிறது.

இந்த நாளில் முன்னோர்களை நினைத்து ‘ஓம் பித்ருப்ய: நமக’ என்று மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்தால் முன்னோர்களின் அருளை பெறுவதோடு அவர்களின் ஆன்மாவும் சாந்தி அடையும்.

சூரிய பகவானுக்கு நீர் சமர்ப்பித்து வழிபாடு செய்வது தோஷத்தை குறைக்கும். வறுமை விலகுவதோடு, பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். அமாவாசை நாட்களில், தெற்கு திசை நோக்கி முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். மேலும், குடும்பத்தின் நலன் வேண்டியும் வீட்டில் அமைதியும் சந்தோஷமும் கிடைக்க வழிபாடு செய்யும் பொழுது நிச்சயம் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

நாளை ஏழை, எளிய மக்களுக்கு தானம் வழங்கலாம். தெய்வங்களுக்குரிய மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்யலாம். பித்ரு தோஷம் இல்லை என்றாலும் அமாவாசை நாட்களில், இறந்த முன்னோர்களின் படத்திற்கு முன் விளக்கு வைத்து வழிபாடு செய்யவேண்டும்.

அதோடு, அரச மரத்தின் அடியில் அல்லது கிழக்கு திசையில் விளக்கு வைக்கலாம். இதனால் செல்வம், பணம், செழிப்பு அதிகரிக்கும். ஆன்மீக வளர்ச்சியும், குடும்ப ஒற்றுமையும் ஏற்படும்.

இந்த நாளில் செய்யும் வழிபாடுகள் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். அமாவாசை நாட்களில், அரச மரத்திற்கு கங்கை நீர், பூக்கள் சமர்ப்பித்து வழிபடலாம். முன்னோர்களை நினைத்து வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும்.

அவர்களின் ஆத்மா சாந்தி அடையும். இந்த நாளில் புண்ணிய நதிகளில் நீராடி, நதிக்கரை, ஆற்றங்கரை, குளத்தங்கரைகளில் பித்ரு வழிபாடு செய்தால், இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கும் என்பது உறுதி.

அமாவாசை நாளில் வடக்கே கங்கை, யமுனை, கோதாவரி போல், காவிரிக்கரை, காவிரியின் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபக் கரை, திருவையாறு, மயிலாடுதுறை, கும்பகோணம் காவிரிக்கரை, கரூர், ஈரோடு, கொடுமுடி, பவானி கூடுதுறை, தாமிரபரணி, வல்லநாடு தசாவதாரக் கட்டம், சென்னை மயிலாப்பூர், கடற்கரைப் பகுதி முதலான இடங்களில் தர்ப்பணம் செய்து வழிபடலாம். ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வந்து தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாடுகளைச் செய்வார்கள்.

நமக்கு ஆசீர்வாதம் செய்வதற்காகக் காத்திருப்பார்கள் பித்ருக்கள். எனவே, இந்த நாளில் மறக்காமல் முன்னோர் வழிபாட்டைச் செய்யலாம். முன்னோரை நினைத்து நான்கு பேருக்கேனும் உணவு வழங்கலாம். முக்கியமாக, தயிர்சாதப் பொட்டலம் தருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.

இதனால் முன்னோர்கள் மகிழ்ந்து கருணையுடன் நம்மை ஆசீர்வதிப்பார்கள். நம் வீட்டின் தரித்திரங்களெல்லாம் விலகிவிடும். இல்லத்தில் இருந்த தீயசக்திகள் தெறித்து ஓடிவிடும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். கவலையும் பயமும் காணாமல் போகும் என்கின்றனர் ஆன்மீக பெரியவர்கள்.