யார் இந்த பொண்ணு? நல்லா நடிக்கிறாளே என்று தமிழ் திரை உலகம் பேசும் அளவுக்கு ‘தர்மத்தின் தலைவன்’, ‘வருஷம்-16’ ஆகிய இரண்டு படங்களிலும் எனது நடிப்பு அமைந்து இருந்தது.
அந்த இரண்டு படங்களும் சூப்பர்ஹிட் படங்கள் என்பதையும் தாண்டி தமிழ் ரசிகர்களின் ரசனைக்கும் ஏற்றவாறு அமைந்து இருந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நானும் வலுவாக கால் ஊன்றினேன்.
அதேநேரம் தயாரிப்பு நிறுவனங்கள், டைரக்டர்களை பார்த்து பார்த்தே நான் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டேன். சிறுவயதிலேயே இந்த விசயத்தில் நான் உறுதியாக இருந்தேன்.
இந்த நிலையில் தான் சிவாஜி புரடெக்சன் தயாரிப்பில் ‘வெற்றிவிழா’ பட வாய்ப்பு வந்தது. மீண்டும் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தேன். படம் முழுவதும் சென்னையில் தான் படமாக்கப்பட்டது.
பிரதாப் போத்தன் டைரக்டர். அவர் எனக்கு நல்ல நண்பரும் கூட. அந்த படப்பிடிப்புக்கு சென்றது முழுக்க முழுக்க ‘பிக்னிக்’ போவது போல்தான் இருக்கும். படப்பிடிப்பு தளத்திலும் செம ஜாலியாக இருந்தது.
அந்த படத்தில் எனக்கும், பிரபு சாருக்கும் ஒரு டூயட் பாடல் ‘சீவி சினுக்கெடுத்து...’ அந்த பாடலுக்கு நடனம் சொல்லித்தர மாஸ்டர் இல்லை.
அதைப்பற்றி கவலைப் படாமல் நானும் பிரபுசாரும் எப்படி நடனம் ஆடுவது? உடல் அசைவுகள் எப்படி எப்படி இருக்க வேண்டும் என்று நாங்களே பயிற்சி எடுத்துக்கொண்டு ஆடினோம். அந்த நடன காட்சி பிரமாதமாக அமைந்தது.
அந்த பாடலில் நிறைய காஸ்ட்யூம் உண்டு. குளியலறை காட்சி உண்டு. எல்லாவற்றிலும் எப்படி ஸ்டெப் போட்டு ஆடுவது என்று நாங்களே முடிவு செய்தோம். எங்கள் முயற்சியை எல்லோரும் பாராட்டினார்கள்.
என்னுடைய சக நண்பர்களே சில சீன்களை குறிப்பிட்டு எப்படி இந்தமாதிரி நடனம் ஆட வேண்டும் என்று யோசித்தீர்கள் என்று ஆர்வத்துடன் கேட்டார்கள்.
அதன்பிறகு 1990-ல் இருந்து என் காட்டில் மழை என்றே சொல்ல வேண்டும். என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தன. அதேநேரம் தமிழ் தெரியாததால் சில முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியாமலும் போனது.
கிழக்குவாசல், நானும் இந்த ஊருதான், தாலாட்டு பாடவா, ஆரத்தி எடுங்கடி, நடிகன், மைடியர் மார்த்தாண்டன், பாட்டுக்கு நான் அடிமை, மைக்கேல் மதன காமராஜன் ஆகிய 8 படங்கள் ஒரே ஆண்டில் என் நடிப்பில் வெளி வந்தது.
‘தாலாட்டு பாடவா’ படத்தில் பார்த்திபனுக்கு ஜோடி. அந்த படத்தின் மூலம் தான் பார்த்திபனுடன் நட்பு ஏற்பட்டது. எனது மிகச் சிறந்த நண்பர்களில் அவரும் ஒருவர் ஆகிவிட்டார். நான் பார்த்திபனை அவரது இயற் பெயரான ‘மூர்த்தி’ என்றுதான் கூப்பிட்டு பழக்கம். இன்றும் அப்படித்தான் அழைப்பேன்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எனக்கும் டைரக்டர் ஆர்.சுந்தர ராஜனுக்கும் இடையே எதிர் பாராத வகையில் சண்டை வந்தது. ஒருநாள் ஷூட்டிங் சென்றபோது எனது காஸ்ட்யூம் சொதப்பிவிட்டது. அதற்கு காரணம் நான் இல்லை. உதவி டைரக்டர் சொன்னபடிதான் காஸ்ட்யூம் போட்டிருந்தேன். ஆனால் நான்தான் தப்பு செய்துவிட்டதாக டைரக்டர் என்னை கடுமையாக திட்டி விட்டார்.
செய்யாத தப்புக்கு திட்டு வாங்கியதால் எனக்கும் கோபம் உச்சிக்கு ஏறி விட்டது. ‘இனி நடிக்கமாட்டேன்’ என்று படப்பிடிப்பில் இருந்து கிளம்பிவிட்டேன்.
ஆனால் நான் இவ்வளவு கோபப்படுவேன் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நான் கிளம்பிவிட்டதால் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழலில் என்னை பலர் சமாதானப் படுத்தினார்கள். ஆனாலும் நான் ஒத்துக் கொள்ளவில்லை. கடைசியில் ராவுத்தர் பிலிம்ஸ் இப்ராஹிம் ராவுத்தர், பி.சிவா, விஜயகாந்த் சார் ஆகியோர் என்னை சமாதானப்படுத்தி இனிமேல் அந்த மாதிரி எதுவும் நடக்காது. நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று உத்தரவாதம் அளித்தார்கள். அவர்கள் கேட்டுக்கொண்ட பிறகு என்னால் மறுக்க முடியவில்லை. அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து முடித்தேன்.
அதே ஆண்டில் மீண்டும் சிவாஜி புரடெக்சனில் ‘மைடியர் மார்த்தாண்டன்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்துக்கும் பிரதாப் போத்தன் தான் டைரக்டர்.
எனது நம்பிக்கைக்கு உரிய நண்பர் என்பதால் பல நேரங்களில் எனது காஸ்ட்யூமை அவரே தேர்வு செய்வார். அது நான் எதிர்பார்த்ததை விட பிரமாதமாக இருக்கும்.
அப்படித்தான் மைடியர் மார்த்தாண்டனிலும் ஒரு காட்சிக்கான காஸ்ட்யூமை தேர்வு செய்து தந்தார். ஆனால் அது எனக்கு படுகவர்ச்சியாக தெரிந்தது. எனவே நான் தயங்கினேன்.
அப்போது அவர் சொன்னார் ஸ்டைலை வெளிப்படுத்தும் விதம் முக்கியமானது. அது உன்னால் முடியும். நான் உன்னை ‘வல்கராக’ காட்டமாட்டேன் என்ற நம்பிக்கை உன்னிடம் இருக்கிறதா? இல்லையா? என்றார்.
உங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் ... என்று இழுத்தேன். அதை கேட்டதும் முதலில் நீ நடி. சரியில்லை என்றால் பார்த்துக் கொள்ளலாம் என்றார். அதன்பிறகு தான் அந்த காஸ்ட்யூமை போட்டு நடித்தேன்.
அந்த படத்தின் ஸ்டை லும், பிரசன் டேசனும் சூப்பராக அமைந்து இருந்தது. அதன் பிறகு தான் நானே ஸ்டைலுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத்தொடங்கினேன்.
அதன்பிறகு பல படங்களில் என்னுடைய வித்தியாசமான கெட்-அப்புகளை பார்த்து ரசிகர்கள் வரவேற்றனர்.
மும்பை கடற்கரையில் நடந்த படப்பிடிப்பில் ரவுடிகளை ஓட விட்ட சம்பவம் மறக்க முடியாதது.
(அடுத்த வாரம் வருகிறேன்...)
ttk200@gmail.com