இன்றைய கால கட்டத்தில் உலகெங்கிலும் பரபரப்பான சூழ்நிலைதான் இருந்து வருகிறது. போர், உலகப் போராக மாறுமோ என்ற அச்சம் எல்லோரிடமும் உள்ளது. விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என எங்குமே ஒரே டென்ஷன்தான். ஆயினும் பரிணாம வளர்ச்சி என்ற பிரிவில் உலகம் வளர்ச்சி அடைந்து கொண்டுதான் செல்கின்றது.
சுமாராக அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் பல்வேறு துறைகளில் மாற்றங்களை சந்திக்க உள்ளது. செயற்கை நுண்ணறிவு, உயிரியல் தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், உலக பொருளாதாரம் மற்றும் மனிதனின் மனநிலை ஆகியவை ஒருங்கிணைந்து மாற்றங்களை ஏற்படுத்தும்.
கடந்த 20 ஆண்டுகளாகவே வாழ்வில் அநேக அம்சங்கள் மாறுதல் அடைந்துள்ளன. அடுத்த 10 ஆண்டுகள் (2026-2036) வரை இந்த மாற்றங்கள் மேலும் விரிவடையும். வேகம் அடையும்.
* தொழில் நுட்ப பரிணாமம்: செயற்கை நுண்ணறிவு மனித அறிவின் பல அம்சங்களை மாற்றும் திறனைப் பெற்றுள்ளது. தானியங்கி முடிவெடுக்கும் அமைப்புகள் மருத்துவம், நிதி மற்றும் சட்டத்துறைகளில் பயன்படும்.
* ஏ.ஐ. கல்வியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
* மனித எந்திர இணைப்பு வேலைகளின் அடிப்படையினை மாற்றும்.
* 5ஜி நெட்வொர்க் தாராளமாக கிடக்கும்.
* தனிப்பயன் மருத்துவம்-மரபணு அடிப்படையிலான சிகிச்சை நிகழும்.
* ஏ.ஐ. மூலம் நோய் பாதிப்பு துல்லியமாக கணிக்கப்படும். அதன்படியே மருந்தும் வழங்கப்படும்.
* மரபணு நோய்கள் கட்டுப்படுத்தப்படும்.
* ஸ்டெம் செல் சிகிச்சை விரிவாக்கம் பெறும்.
* தொலை நோக்கு மருத்துவம் அல்லது மின் மருத்துவம் சிகிச்சை முறையை மாற்றும்.
* தொற்று நோய் கண்காணிப்பு ஏ.ஐ. மூலம் நடைபெறும்.
* கால நிலை மாற்றம் மற்றும் சுற்றுப்புற சூழல் மாற்றம் இருக்கும்.
உலக வெப்ப நிலையே உயரும். கடல் மட்டம் உயரும். வெள்ளம், வறட்சி, சூறாவளி இவை அதிகரிக்கும். சூரிய சக்தி, காற்று சக்தி இவற்றின் பயன்பாடு அதிகரிக்கும். மின்சாரம் மூலம் இயங்கும் வண்டிகள் அதிகரிக்கும். வேலை வாய்ப்புகளை பார்க்கும் எந்திரமும், ஏ.ஐ. பார்க்கும் வேலைகளால் மனிதனுக்கு பல வேலை பிரிவுகளும், வேலைவாய்ப்புகளும் இருக்காது.
ரோபோட், தகவல் சேகரிப்பு, ஏ.ஐ. சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை வாய்ப்புகள் இருக்கும் என்றால் அது கடும் போட்டியுடன் தான் இருக்கும். தற்காலிக, குறுகிய கால வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்திற்கு செல்லாமல் வீடு அல்லது வேறு இடத்தில் இருந்து தொலைதூர பணியினை செய்யும் வாய்ப்புகள் உண்டாகும்.
கணினி, இணையம் மூலம் மட்டுமே பரிமாறப்படும். நிர்வகிக்கப்படும் மின்னணு வடிவ பணமே புழக்கத்தில் இருக்கும். இதனை வேகமாக, திறம்பட செய்யும் வளர்ச்சி உருவாகும். கல்வி முறையினை காணும் பொழுது நேரடி வகுப்பறை மற்றும் ஆன்லைன் மூலம் கற்றலை இணைக்கும் கல்வி முறை ஏற்படும்.
ஏ.ஐ. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கற்றல் முறை விரிவாகும். திறன் சார்ந்த, திறனை மையமாகக் கொண்ட கல்வியும் முக்கியத்துவம் பெறும். உலக அளவில் ஆன்லைன் கல்வி முக்கியத்துவம் பெறும். சிறிய சான்றிதழ்களை குறுகிய கால படிப்பின் மூலம் கற்றுக் கொள்ளும் படிப்பு முறைகள் ஏற்படும்.
சமூக மற்றும் மனநலமாற்றங்கள்
அதிகம் நகரமயமாகுதலே நடைபெறும். கணினி, இணையம் இல்லாமல் வாழ்வதே கடினமாகி விடும். மக்களிடையே கவலை, படபடப்பு, மனச்சோர்வு போன்றவை மிகவும் அதிகரிக்கும். சமூக தனிமைப்படுத்தப்படுதல் அதிகமாகும். மனிதன் பெரும்பாலான நேரத்தினை தனித்தே கழிப்பான்.
இதனால் உடல் நல, மனநல பாதிப்புகள் அதிகமாக ஏற்படும். ஒருவருடன் மற்றொருவர் பேசும், பழகும் வாய்ப்புகள் குறையும். நேரில் சந்திக்காமல் இணையம், கணினி, தொலைபேசி மூலமே தொடர்பு கொள்ளலாம்.
குடும்ப அமைப்பே மாறும். பல நாடுகள் உலக அரசியலில் பங்காற்றும். சைபர் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். கணினிகள், சர்வர்கள், மொபைல் சாதனங்கள், மின்னணு அமைப்புகள், நெட்வொர்க்குகள் இவைகளில் அதிக பாதுகாப்பு தேவைப்படும்.
தகவல் போர், பொய்யான செய்திகளை பரப்புதல், மற்ற நாட்டின் மன உறுதியினை உருகுலைப்பது, மக்களை தவறான வழியில் திசை திருப்புவது போன்ற நிகழ்வுகள் இருக்கும். ஆக முன்னேற்றம் ஒருபுறம் இருந்தாலும் மனிதன் அதிக அளவில் உடல், மன, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவான் என்றே தோன்றுகிறது.
தியானம், யோகா இரவு வேண்டும். கைத்தொழில் ஒன்றினை அனைவரும் கற்பதே நல்லது. அதனை இன்றில் இருந்தே இளைய சமுதாயத்தினருக்கு ஆரம்பிப்போம்.
முன்னேற்றமும், சவாலும் நிறைந்த காலத்தினை சமாளிக்க வேண்டும். மேற்கூறப்பட்டுள்ளவை பல ஆய்வுகளின் கருத்தினை தொகுத்து கூறப்பட்டுள்ளன. அவசியம் கருதி இன்றே நம் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவோம்.
உடற்பயிற்சி செய்யும்பொழுது வலி ஏற்படுகின்றது என்பவர்களின் கவனத்திற்காக...
* ஆரம்பிக்கும் பொழுதே கடுமையான பயிற்சிகளையோ நீண்ட நேர பயிற்சியோ செய்யக்கூடாது. பயிற்சியாளர் அறிவுரை பெற்று மெதுவாக ஆரம்பிக்கவும்.
* அதிக அழுத்தம் தரும் பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்.
* தினசரி நடைபயிற்சி எளிதானதும் கூட. உடல் வலி என்றால் ஓய்வு அளிக்க வேண்டும்.
* வெது வெதுப்பான நீரில் குளிப்பது நல்லது.
* நீட்டிப்பு பயிற்சிகளை செய்ய வேண்டும்.
* யோகா பழகுவது நல்லது. சுவாச பயிற்சி நல்லது.
* உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
* ஆரோக்கிய உணவு அவசியம். புரத உணவு அவசியம்.
* 5 லிட்டர் நீர் அன்றாடம் அருந்தலாம். 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம்.
* வலி அதிகமானால் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
* நீச்சல் நல்ல பயிற்சி ஆகும். சைக்கிள் ஓட்டலாம்.
* ஒரே பயிற்சி என்று இல்லாமல் மாற்றி மாற்றி செய்யலாம்.
* உடல் சோர்வின் காரணத்தினை கவனிக்க வேண்டும்.
* உடல் கூறும் அறிகுறிகளை கேட்க வேண்டும்.
* பயிற்சியின் தீவிரத்தினை மெதுவாக உயர்த்த வேண்டும்.
* அதிக எடைகளை தூக்க வேண்டாம்.
* காலணிகள் மென்மையாக இருக்க வேண்டும்.
* இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்.
* மன அழுத்தம் கூடாது. தியானம் செய்ய வேண்டும்.
* நீண்ட நேரம் அமர்ந்த நிலையில் இருக்கக் கூடாது.
* படிக்கட்டாவது ஏரி இறங்குங்கள்.
* வீட்டு வேலை செய்யுங்கள், மசாஜ் செய்யலாம்.
* சர்க்கரை அளவினை சரியாக வைத்திருக்கவும்.
* காய்கறி, பழங்கள் அவசியம்.
* சத்துணவு நிபுணர் ஆலோசனை பெறவும்.
* கழுத்துப் பயிற்சிகள் செய்ய வேண்டும்.
* முதுகு, முழங்கை, மூட்டு இவற்றிற்கான பயிற்சிகள் அவசியம்.
* நல்ல எண்ணங்களும், சிரிப்பும் அவசியம்.
* உப்பு அளவை குறைக்கலாமே. சிப்ஸ், வத்தல், ஊறுகாய், அப்பளம் இவைகளை தவிர்க்கலாமே.
* சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமே செல்வம்
வாழ்வின் உயர்ந்த வசதி எது தெரியுமா? அன்றாட கடும் வேலையின் நடுவே 10 நிமிட ஓய்வு கிடைக்கும் போது ஜிம் பயிற்சியில் 5 நிமிடம் போய் பயிற்சி செய்யும் வசதி.
சண்டையிடாத, அமைதியான பக்கத்து வீட்டுக்காரர்கள் கிடைக்கப்பெறும் பொழுது.
மாதக் கடைசியில் சிறிது காசு மீதம் கிடைத்து அதனை சேமிப்போ, முதலீடோ செய்யும்பொழுது.
பரபரவென்று இல்லாமல் அமைதியாய் ருசித்து காபி குடிக்கும் பொழுது.
மன உளைச்சல் இன்றி தூங்க செல்லும் பொழுது, வருடம் தோறும் ஏதாவது ஒரு இடம் பயணித்தால் அலாரம் அலறாமல் எழுந்திருப்பது. வலியில்லாத உடம்பு.
வார விடுமுறைகளை நமக்கென்று செல வழிக்க முடிந்தால், ‘நோ’ என்று சொல்ல சங்கடப்படாத பொழுது சிறிய பொருள் வாங்கக்கூட ‘பட்ஜெட்’ பார்க்க வேண்டிய நிலைமை இல்லாத போது எதிர்காலத்தினை பற்றிய படபடப்பு இல்லாத பொழுது இதனை யாரோ எழுத நான் படித்தேன். எத்தனை உண்மையான வரிகள். ஆகவே பகிர்ந்து கொள்கிறேன்.