Cinema

'துரந்தர் 2' ஓடிடி பதிப்பில் நீக்கப்பட்ட 1984 சீக்கிய கலவர வசனங்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தேவையற்ற அரசியல் பதற்றங்களைத் தவிர்க்க இயக்குனர் ஆதித்யா தார் எடுத்த பாதுகாப்பான நடவடிக்கை.

இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில், நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி உலகளவில் 1800 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த 'துரந்தர் 2' திரைப்படத்தின் அன்கட் (uncut) பதிப்பு சமீபத்தில் நெட்பிளிக்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்களில் வெளியானது.

இந்த ஓடிடி பதிப்பை உற்று நோக்கிய ரசிகர்கள், திரையரங்குகளில் வெளியான படத்தில் சில மிக முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய அரசியல் வசனங்கள் மாற்றப்பட்டிருப்பதை ரெடிட் (Reddit) சமூக வலைதளத்தில் ஆதாரங்களுடன் கண்டுபிடித்துள்ளனர்.

படத்தின் இடைவேளைக்கு முன்பு, இந்திய உளவாளியான ஜஸ்கிரத் (ரன்வீர் சிங்), போதைப்பொருள் கடத்தும் தனது சிறுவயது நண்பன் பிந்தாவிடம் (உதய்பிர் சந்து) பேசும் காட்சி வரும்.

அப்போது நாட்டை காட்டிக்கொடுப்பது பற்றி ரன்வீர் பேசும்போது, பிந்தா "எந்த நாடு? எங்களை ஒருபோதும் தன் சொந்தமாக ஏற்றுக்கொள்ளாத அந்த நாடா?" என்று கேட்பார்.

ஆனால், உண்மையான பஞ்சாபி வசனம் அதுவல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது. அசல் பதிப்பில், "எந்த நாடு? 1984-ல் சொந்த சகோதரர்களையே கொன்று குவித்த நாடா?" என்று பிந்தா பேசுவது போன்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

திரையரங்குகளில் படம் வெளியாகும்போது இருந்த அரசியல் பதற்றத்தைத் தவிர்க்க, இந்த வசனத்தின் மீது வேறு வசனத்தை டப்பிங் செய்து மாற்றியுள்ளனர்.

வசனங்கள் மட்டுமின்றி, கதாபாத்திரத்தின் பெயரிலும் இயக்குனர் ஆதித்யா தார் ரகசியமாக மாற்றம் செய்துள்ளார்.

படத்தின் முதல் பாகத்தில் 'ஹேப்பி பிஹெச்டி' என்ற பெயரில் ஒரு கதாபாத்திரம் காட்டப்பட்டது. ஆனால் இரண்டாம் பாகத்தில் அதன் பெயர் 'சன்னி டிவிடி' என மாற்றப்பட்டுள்ளது.

உண்மை என்னவென்றால், 'ஹேப்பி பிஹெச்டி' என்பது 2020-ல் மர்மமான முறையில் கொல்லப்பட்ட நிஜ காலிஸ்தான் தீவிரவாதியான ஹர்மீத் சிங்கின் புனைபெயராகும்.

இதனால் ஏற்பட்ட சிக்கலைத் தவிர்க்கவே இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் வெளியானதையடுத்து, படம் எந்தவித சட்டம்-ஒழுங்கு சிக்கலிலும் சிக்காமல் இருக்கவும், முழுக்க முழுக்க பாகிஸ்தான் பயங்கரவாதக் கதையில் மட்டும் கவனம் செலுத்தவும் இயக்குனர் ஆதித்யா தார் பாதுகாப்பான முடிவை எடுத்துள்ளார் என்று பலர் பாராட்டியுள்ளனர்.

படம் ஏற்கனவே காலிஸ்தான் பின்னணியை வெளிப்படையாகக் காட்டிய நிலையில், இந்த வசனங்களை மட்டும் நீக்கியதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும், கனடாவில் முதல் நாளே இந்த படத்தின் திரை கிழிக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகச் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆதித்யா தார் எழுதி இயக்கியுள்ள 'துரந்தர் 2' திரைப்படத்தில் ரன்வீர் சிங்குடன் இணைந்து அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், ஆர். மாதவன், ராஷி பேடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்குள் ஊடுருவி அந்நாட்டின் பயங்கரவாத நெட்வொர்க்கை இந்திய உளவாளி எப்படி அழிக்கிறார் என்பதே இந்த படத்தின் விறுவிறுப்பான கதையாகும்.