நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நிர்மலாதேவி 
செய்திகள்

நிர்மலாதேவிக்கு மே 9 வரை நீதிமன்ற காவல்- சாத்தூர் நீதிமன்றம் உத்தரவு

கல்லூரி மாணவிகளை பிரபலங்களுக்கு விருந்தாக்க செல்போன் மூலம் வலைவீசிய பேராசியை நிர்மலா தேவியை மே 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NirmalaDevi

மாலை மலர்

விருதுநகர்:

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. மாணவிகளை பாலியலுக்கு அழைக்கும் வகையில் பேசியதாக செல்போன் ஆடியோ, வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

பேராசிரியை நிர்மலா தேவியை கைது செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர். ஆனால் எந்த ஒரு தகவலையும் பேராசிரியையிடம் இருந்து போலீசார் பெற முடியவில்லை.

விசாரணைக்கு பின்னர் பேராசிரியை நிர்மலா தேவியை விருதுநகரில் உள்ள மாஜிஸ்திரேட்டு இல்லத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு மாஜிஸ்திரேட்டு மும்தாஜ் பேகம் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

பேராசிரியை நிர்மலா தேவியை 12 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு மும்தாஜ் பேகம் உத்தரவிட்டார். இதனையடுத்து மதுரை மத்திய சிறையில் பேராசிரியை நிர்மலா தேவி அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, சிபிசிஐடி சிறப்பு அதிகாரி எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நிர்மலா தேவியிடம், கடந்த 4 நாட்களாக விருதுநகரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்றுடன் 5 நாள் சி.பி.சி.ஐ.டி. விசாரணை காவல் முடிந்ததால் இன்று அவர் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பேராசியை நிர்மலா தேவியை மே 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NirmalaDevi #NirmalaDeviAudio