செய்திகள்

ஹப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே மிஸ்டர் ஹெலிகாப்டர்: டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய யுவராஜ்சிங்

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டகாரர் யுவராஜ் சிங் இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான டோனி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளையொட்டி சமூக வளைதளங்களில் அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நேற்று இரவு முதல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் நட்சத்திர ஆட்டகாரரும் டோனியின் நெருங்கிய நண்பருமாகிய யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் தனது வாழ்த்து செய்தியை பதிவு செய்துள்ளார். அந்த செய்தியில் ”மிஸ்டர்.ஹெலிகாப்டருக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துகள், உனக்காக கேக் காத்திருக்கிறது” என கூறியுள்ளார்.

டோனி மற்றும் யுவராஜ் இருவரும் மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இந்திய அணியில் உள்ளனர். இது மேற்கிந்திய தீவுகளில் டோனி கொண்டாட இருக்கும் இரண்டாவது பிறந்தநாளாகும். இதற்கு முன்னதாக 2013ம் ஆண்டும் அங்குதான் டோனி தனது பிறந்தநாளை கொண்டாடினார். மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இளம் இந்திய அணியில் டோனி மற்றும் யுவராஜ் சிங் தான் அதிக போட்டிகளில் விளையாடி உள்ள வீரர்களாவர். அவர்கள் இருவரும் சேர்ந்து இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்துள்ளனர். குறிப்பாக 2011 உலககோப்பை இறுதி போட்டியில் டோனி அடித்த கடைசி சிக்ஸரை யாராலும் எளிதாக மறக்க முடியாது. அதேபோல் 2007-ம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலககோப்பையில் இங்கிலாந்திற்கு எதிராக யுவராஜ் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ்ர் அடித்ததையும் யாராலும் மறக்கமுடியாது.

இந்திய அணி 2007-ல் 20 ஓவர் உலககோப்பையிலும் 2011ல் 50 ஓவர் உலக கோப்பையிலும் வெற்றி பெறுவதற்கு இவர்கள் இருவரும் செய்த சாதனைகள் அனைவரும் அறிந்ததே. டோனி - யுவராஜ் ஜோடி ஒருநாள் போட்டிகளில் ஆறாவது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்ததே இதுவரையில் இரண்டாவது அதிகபட்சமாகும். அவர்கள் இருவரும் இந்த வருடம் இங்கிலாந்திற்கு எதிராக ஒரு நாள் போட்டியில் நான்காவது விக்கெட்டுக்கு சேர்த்த 256 ரன்கள் சர்வதேச போட்டிகளில் நான்காவது அதிகபட்சமாகும். அவர்கள் இருவரும் கூட்டாக ஒருநாள் போட்டிகளில் இதுவரை 3105 ரன்கள் குவித்துள்ளனர்.