கைது 
செய்திகள்

இளம்பெண் சாவில் திடீர் திருப்பம்- கள்ளக்காதலன் கைது

திண்டுக்கல் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரை கர்ப்பிணியாக்கி ஏமாற்றிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள கே.சி.பட்டியைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மகள் மாலதி (வயது 30). இவருக்கு திருமணம் ஆகி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் சதீஸ் (28) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதில் மாலதி கர்ப்பமானார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது குழந்தையை சதீஸ் வீட்டு முன்பு அமர வைத்து விட்டு தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து மாலதி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மாலதியின் உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சாவுக்கு காரணமான சதீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்ததையடுத்து அவர்கள் உடலை வாங்கிச் சென்றனர்.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கணவரை பிரிந்து இருந்த மாலதியும், சதீசும் கடந்த 3 வருடங்களாக நெருங்கி பழகி வந்துள்ளனர். திருப்பூரிலும் தங்கி வேலை பார்த்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மாலதியை திருமணம் செய்து வைக்க சதீஸ் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சதீசுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

இதையறிந்த மாலதி தனது குழந்தையுடன் வந்து சதீசிடம் நியாயம் கேட்டுள்ளார். ஆனால் அவரது உறவினர்கள் மாலதியை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாலதி தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தற்கொலைக்கு காரணமான சதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.