செய்திகள்

தலைவாசல் அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை

தலைவாசல் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த கல்லூரி மாணவர் மற்றும் இளம்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கார்த்தி (வயது 24). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பூக்கடையில் பூக்கட்டும் தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். நேற்று தலைவாசல் வட சென்னிமலை அடிவாரத்தில் கத்தி குத்து காயங்களுடன் கார்த்தி பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திக்குமார், தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்தி உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் விசாரித்த போது கார்த்திக்கின் தொடை மற்றும் மர்ம உறுப்பிலும் கத்தி குத்து காயங்கள் இருந்தது. மலையின் நடுப்பகுதியில் வைத்து கொலை செய்து கார்த்திக் உடலை தூக்கி வந்து அடி வாரத்தில் வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது கார்த்திக் பிணமாக கிடந்த இடத்தின் சற்று தூரத்தில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ரத்தக்கரை படிந்த செருப்பு, ஒரு வாலிபரின் ஆடைகளும் கிடந்தது. அதில் இருந்த மணி பர்சில் பெண் ஒருவரின் படம், தனியார் கல்லூரிக்கு பணம் செலுத்திய ரசீது மற்றும் வாலிபரின் கல்லூரி அடையாள அட்டையும் இருந்தது. மேலும் சற்று தூரத்தில் ரத்தக்கறை படிந்த சிவப்பு நிற துப்பட்டா ஒன்றும் கிடந்தது.

போலீசாரிடம் சிக்கிய ரத்தகரை படிந்த பேண்டு மற்றும் கொலையாளி அருகே கிடந்த சட்டையிலும் நல்லூரை சேர்ந்த ஒரு தையலகத்தின் பெயர் உள்ளதால் அது கொலையாளியின் ஆடையாக இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

மேலும் போலீசாரிடம் சிக்கிய கல்லூரி அடையாள அட்டையை வைத்து போலீசார் விசாரித்த போது கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த செல்வராசு என்பவரது மகன் தமிழரசன் என்பதும், அவர் வேப்பூர் பகுதியில் உள்ள கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருவதையும் போலீசார் உறுதி செய்தனர்.

ரத்த கறை படிந்த சட்டையில் அந்த அடையாள அட்டை இருந்ததால் அவர் தான் கார்த்திக்கை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் அவரது வீட்டிற்கு சென்று தேடிய போது அவர் தலைமறைவாகி விட்டார். அவரையும், அவருடன் வந்த இளம்பெண்ணையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:- கார்த்திக்கை கொலை செய்ததாக கருதப்படும் தமிழரசன் இளம்பண் ஒருவரை அழைத்து கொண்டு சென்னிமலைக்கு வந்துள்ளார்.

அதனை பார்த்த கார்த்திக் இளம்பெண்ணை அடையும் மோகத்தில் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த தமிழரசன், கார்த்திக்கை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம்.

அந்த கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம். அவர் சிக்கினால் தான் முழு விவரமும் தெரியவரும் என்பதால் அவரை தீவிரமாக தேடி வருகிறோம். இன்று மாலைக்குள் எப்படியாவது அவரை பிடித்து விடுவோம்.

 இவ்வாறு அவர்கள் கூறினர்.

கொலை செய்யப்பட்ட கார்த்திக் மீது ஏற்கனவே தலைவாசல் மற்றும் ஆத்தூர் போலீஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews