கோவை:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவினால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபான பிரியர்கள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளதை பார்க்க முடிகிறது. இதனால் போதைக்காக மாற்று வழியை கையாள்கின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூரில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் பெர்னான்டெஸ். இவர் சூலூரில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் சிலிண்டர் விநியோக பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். சிலிண்டர்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும்போது கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துகொள்ள தனியார் ஏஜென்ஸி நிறுவனம் சானிடைசர் வழங்கி இருந்தது.
இந்நிலையில் சானிடைசரில் ஆல்கஹால் இருப்பதை அறிந்த பெர்னான்டெஸ், கடந்த இரண்டு தினங்களாக சிறிது சிறிதாக தண்ணீர் கலந்து போதைக்காக குடித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை உடல்நிலை பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்த பெர்னான்டெஸ்யை, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு வரப்பட்டார் .
ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது . மாற்று போதைக்காக முயற்சி செய்து சிலிண்டர் நிறுவன ஊழியர் பெர்னான்டெஸ் உயிரிழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.