திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரதீப் (வயது28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
பிரதீப்பின் உடல் பருமனாகி சுமார் 100 கிலோ எடை இருந்தது. இதையடுத்து அவர் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகள் செய்தார். ஆனால் உடல் எடை எதிர்பார்த்த அளவு குறையவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை அதே பகுதி செல்லியம்மன் கோவில் தெருவில் ஒருவர் சாலையோர கடை அமைத்து பல்வேறு வியாதிகளுக்கு லேகியம் விற்றுக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த பிரதீப் லேகியம் விற்பதை வேடிக்கை பார்த்தார். அவரிடம் லேகியம் விற்பவர் “என்னிடம் உள்ள “ஸ்பெசல்” லேகியத்தை சாப்பிட்டால் குறைந்த நாட்களில் உடல் எடை குறைந்து விடும். குறைந்த செலவே ஆகும்” என்றார்.
இதனை நம்பிய பிரதீப், குறிப்பிட்ட லேகியத்தை வாங்கிக் கொண்டார். நேற்று இரவு அவர் வீட்டில் சாப்பிட்டு முடித்ததும் லேகியத்தை தின்றார்.
சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி உண்டானது. பேதியும் ஏற்பட்டது. வயிற்று வலியால் அலறி துடித்த அவரை குடும்பத்தினர் மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரது நிலைமை மேலும் மோசமானது. இதையடுத்து பிரதீப்பை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பிரதீப் பரிதாபமாக இறந்தார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர்.
உடல் எடையை குறைக்க லேகியம் சாப்பிட்ட பிரதீப் இறந்தது பற்றி அறிந்ததும் லேகியம் விற்றவர் தலைமறைவாகி விட்டார்.
அவர், கடந்த சில நாட்களாக திருமுல்லைவாயல், அயப்பாக்கம் பகுதியில் சாலையோரத்தில் லேகியம் விற்று வந்து உள்ளார். தற்போது பிரதீப் இறந்து உள்ளதால் ஏற்கனவே லேகியம் வாங்கி சாப்பிட்டவர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.
லேகியம் விற்றவர் யார்? என்ற விபரம் தெரியவில்லை. அவரை பிடிக்க திருமுல்லைவாயில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.