பல்லடம்:
திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த பாபு மகன் சந்தோஷ் (வயது 18). அதே ஊரை சேர்ந்த கருணாகரன் மகன் சியாம் சுந்தர் (20). இவர்கள் இருவரும் நண்பர்கள். சியாம் சுந்தர் வளர்ப்பதற்காக, நாய்க்குட்டி வேண்டும் என்று, கோவையில் உள்ள தனது நண்பரிடம் சொல்லியுள்ளார். அவர் கோவைக்கு வரச் சொன்னதை அடுத்து, சியாம் சுந்தரும், சந்தோசும் ஒரு மோட்டார் சைக்கிளில் கோவைக்கு வந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளை சியாம் சுந்தர் ஓட்டினார். பின் இருக்கையில் சந்தோஷ் அமர்ந்து இருந்தார். இவர்களுடைய மோட்டார் சைக்கிள் கோவை-திருச்சி நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே ஆராக்குளம் பிரிவில் சென்றபோது நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.
இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த சியாம்சுந்தரை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல்உதவி பெற்று திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றிய தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் விரைந்துசென்று
சந்தோசின் உடலை பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.