உயிரிழப்பு 
செய்திகள்

கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

வடசேரி கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

நாகர்கோவில்:

வடசேரி கிருஷ்ணன் கோவில் அருகுவிளை திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் ஆதி வைகுண்டம், (வயது 19).

இவர் கோவில் ஒன்றிற்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதமிருந்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்து சென்ற ஆதி வைகுண்டம் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் தேடினார்கள். ஆனால் ஆதியை காணவில்லை.

இந்த நிலையில் இரவு கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளத்தில் ஆதி வைகுண்டம் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பிணமாக கிடந்த ஆதி வைகுண்டத்தின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஆதி, குளத்தில் குளிக்கும்போது தவறி விழுந்து பலியாகி இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து தாயார் ஆதிலட்சுமி வடசேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்...

திருவட்டார் அருகே செங்கோடி ஆனையடி பகுதியைச் சேர்ந்தவர் சார்லிஸ் (வயது 65). இவர், ஆனையடி பெருங்குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார்.

மாயமான சார்லிசை தேடியும் கிடைக்காததால் குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குளத்தில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் சார்லிஸ் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து அவரது மனைவி ராஜம்மாள் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.